வித்தியாசமாக நீங்கள் பார்க்கும் இந்த இனம் போட்டோஷாப் செய்யப்பட்டது அல்ல. பார்க்கவே பிரம்மாண்டமாக பயில்வான் போல தோற்றமளிக்கும் இந்த பசு இனம் பெல்ஜியன் ப்ளூ புல்(belgian blue bull) என அழைக்கப்படுகிறது.
இந்த மாட்டை நாம் பார்த்தாலே ஏதோ உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடம்பை கட்டுகோப்பாக வைத்திருப்பது போல இருக்கிறது. அதனுடைய உடலமைப்பு பார்ப்பவர்களை வசீகரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
உடல் அமைப்பு பார்க்க பயில்வான் போல இருந்தாலும் இது மிகவும் சாதுவான இனம். இந்த பெல்ஜியன் நீல மாடு இனத்தில் ஆண் மாடு எவ்வளவு கிலோ இருக்கும் தெரியுமா உங்களுக்கு? சராசரியாக 1,200 கிலோ கிராம் வரைக்கும் இருக்கும். இது ஆண் மாட்டின் எடை.
இதில் பெண் பசு 700 கிலோ கிராம் வரைக்கும் இருக்கும். இந்த பெல்ஜியன் ஆண் மட்டின் உயரம் சராசரியாக 148 சென்டிமீட்டர் இருக்கும். பெண் பசுவும் ஏறத்தாழ 132 சென்டிமீட்டர் உயரம் இருக்கும். இந்த இனங்கள் பொதுவாக மாட்டிறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.
இந்த மாட்டின் வித்தியாசமான தசை உடலமைப்பு டபுள் மஸ்லிங் என அழைக்கப்படுகிறது. பெல்ஜியன் ப்ளூ நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய முடி இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. இருந்தாலும் இது வெள்ளை கருப்பு இப்படி பல நிறங்களில் உள்ளது.
இந்த இனம் 19 ஆம் நூற்றாண்டில் பெல்ஜியத்தில் உருவாக்கப்பட்டது. யுனைடெட் கிங்டமில் உள்ள ஷார்ட்ஹார்ன் இன மாடுகளுடன் உள்ளூர் இன மாடுகளை கலந்து இந்த இனம் உருவாக்கப்பட்டது.
இனங்கள் முதலில் பால் மற்றும் மாட்டிறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டன. இதில் நவீன மாட்டிறைச்சி இனம் 1950 களில் லீஜ் மாகாணத்தில் ஒரு செயற்கை கருவூட்டல் மையத்தில் பணிபுரிந்த பேராசிரியர் ஹான்செட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டில் மேற்கு டெக்சாஸுக்கு குடிபெயர்ந்த மத்திய கனடாவைச் சேர்ந்த விவசாயி நிக் டட் என்பவரால் பெல்ஜியன் நீல நிற மாடுகள் அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு உலகின் பல பகுதிகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்பட்டது.
2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தற்போது இந்த இனங்கள் 11 லட்சம் அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.