நம்முடைய உலகத்தை சுற்றிலும் ஏராளமான கொதிக்கும் அழகான வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. இது விசித்திரமானது மட்டுமல்லாமல் இந்த இடமே பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் காணப்படும். இப்படிப்பட்ட தித்திப்பான அழகை தீட்டி வைத்திருக்கும் இந்த அதிசய வெந்நீரூற்றுக்களை உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும். அப்படி மிகவும் அழகான வித்தியாசமான 15 வெந்நீர் ஊற்றுக்கள் எங்குள்ளது அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. பாமுக்கலே வெந்நீரூற்று (Pamukkale)
பாமுக்கலே வெந்நீர் ஊற்று துருக்கியின் டெனிஸ்லி மாகாணத்தில் உள்ளது. இது 17 அடுக்கு குளங்கள் கொண்ட கனிமங்கள் நிறைந்த அழகான வெப்ப நீரூற்று. இந்த சூடான நீரூற்றில் தண்ணீரின் வெப்பம் 94 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். சுண்ணாம்பு படிவம் அதிகம் உள்ளதால் இங்கு உள்ள தண்ணீர் பால் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த வெப்ப நீரூற்று பாயும் இடங்களில் கார்பனேட் கனிமம் அதிகம் காணப்படுகிறது.
இது மொத்தம் சுமார் 2,700 மீட்டர் நீளமும், 600 மீட்டர் அகலமும், 160 மீட்டர் உயரமும் கொண்டது. காட்டன் கேஸ்டில் அல்லது ஹைரபோலிஸ் என அழைக்கப்படக்கூடிய இந்த இடத்தில் உள்ள வெப்ப நீரூற்றுகளில் குளிப்பதற்காக பழங்காலத்திலிருந்தே ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். 1988ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இது இணைக்கப்பட்டது.
2. கீர்கங்கா வெந்நீர் ஊற்று (Kheer Ganga)
இமாச்சல பிரதேசத்தில் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள கீர்கங்கா காடுகளுக்குள் காணப்படக்கூடிய ஒரு அற்புதமான இயற்கையான கந்தக வெந்நீர் ஊற்று. இது குலு மாவட்டத்தில் 9700 அடி உயரத்தில் உள்ளது. இந்த வெந்நீர் ஊற்றில் இரண்டு குளங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ஆண்களுக்கும் இன்னொன்று பெண்களுக்கும் தனித்தனியாக உள்ளது. கீர்கங்கா மலைகளின் சரிவுகளில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த பகுதியில் பிரபலமான மலையேற்றங்கள் அதிக அளவில் உள்ளது. கூடவே இங்குள்ள வெந்நீர் ஊற்றில் குளிக்கவும் ஓய்வெடுக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.
3. ப்ளூ லகூன் (Blue Lagoon)
ஐஸ்லாந்தில் உள்ள ரெய்காவிக் தலைநகரில் இருந்து சுமார் 50 நிமிட பயணத்தில் இந்த அழகான ப்ளூ லகூனை அடைந்துவிடலாம். இங்குள்ள கருப்பு நீல எரிமலை பாறையில் சிலிக்காவின் தன்மையால் பால் நீல வர்ணத்தில் தண்ணீர் உள்ளது. இந்த வெந்நீர் ஊற்றில் உள்ள தண்ணீர் 99 லிருந்து 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் உள்ளது. இந்த நீரில் உப்புக்கள் மற்றும் பாசிகள் நிறைந்து காணப்படுகிறது. இங்கு குளிப்பதற்காக குளியல் வசதிகள் கொண்ட குளம் 1987 ல் தொடங்கப்பட்டது. இந்த குளத்தில் குளிப்பதற்காக 2017ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர். நுழைவு கட்டணம் மூலமாக 102 மில்லியன் டாலர்கள் வருமானம் வந்துள்ளது. நுழைவுக்கட்டணம் 64 டாலரிலிருந்து ஆரம்பமாகிறது.
4. செனா ஹாட் ஸ்பிரிங்ஸ் (Chena Hot Springs)
செனா ஹாட் ஸ்பிரிங்ஸ் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஃபேர்பேங்க்ஸ் நார்த் ஸ்டார் போரோவில் உள்ளது. இது 1905 ஆம் ஆண்டில் ராபர்ட் மற்றும் தாமஸ் ஸ்வான் என்ற இரண்டு தங்க சுரங்கம் தோண்டும் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு உள்ள சூடான நீரூற்றுகள் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை கொண்டுள்ளது. 1911 ஆம் ஆண்டில் பார்வையாளர்களுக்கு தங்குவதற்கு வசதியாக 12 சிறிய அறைகள் அங்கு கட்டப்பட்டுள்ளன. தற்போது இது அலாஸ்காவில் உள்ள மிகவும் பிரபலமான ரிசார்ட்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இங்குள்ள தண்ணீரில் சோடியம் மற்றும் பைகார்பனேட்டுகள் அதிகம் உள்ளது. இதை பற்றி எச்சரிக்கை விவரங்களும் அங்கு உள்ளது.
5. கிராண்ட் பிரிஸ்மாட்டிக் ஸ்பிரிங் (Grand Prismatic Spring)
கிராண்ட் பிரிஸ்மாட்டிக் ஸ்பிரிங் அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் உள்ளது. இது சுமார் 370 அடி அகலமும் 160 அடி ஆழமும் கொண்ட உலகிலுள்ள மூன்றாவது மிகப்பெரிய நீரூற்று. குளத்தின் மையத்தில் இருந்து தண்ணீர் சுமார் 160 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தோடு நீலநிறத்தில் வெளிவருகிறது. குளத்தின் கரையில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறத்தில் வர்ண வளையங்கள் சூழ்ந்து தண்ணீர் காணப்படுகிறது. அதிக சூடு மற்றும் தாது நிறைந்த இந்த நீரில் செழித்து வளரும் பாக்டீரியா காரணமாக இங்கு குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ அனுமதி இல்லை. இந்த வெந்நீர் ஊற்று நிமிடத்திற்கு 2100 லிட்டர் தண்ணீரை 160 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தோடு வெளியேற்றுகிறது.
6. டிசப்ஷன் ஐஸ்லேண்ட் (Deception Island)
பனி நிறைந்த அண்டார்டிகாவில் உள்ள இந்த தீவில் உள்ள வெந்நீரூற்று கடற்கரை மணலுக்கு அடியில் காணப்படுகிறது. இது கொஞ்சம் வித்தியாசமான வெந்நீரூற்று. இந்த வெந்நீர் ஊற்று கடற்கரையில் கருப்பு மணலுக்கு அடியில் செல்கிறது. வெந்நீர் ஊற்றின் வெப்பத்தை உணர்வதற்காக கடற்கரையில் உள்ள கருப்பு மணலைத் தோண்டி எடுத்து அதன் உள்ளே இருக்கக்கூடிய சூடான நீர் ஊற்றுகளில் குளியல் போடலாம்.
இதனுடைய வெப்பம் 158 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மிகவும் குளிர்ந்த கடல் நீருடன் இந்த வெப்ப நீரூற்று கலக்கும் பொழுது வெதுவெதுப்பான இயற்கையான குளியல் குளம் குளிக்க கிடைத்துவிடும். இங்கு குளிப்பதற்கு எந்த நீர் போதுமான பாதுகாப்பானது என்பதை ஆய்வு வழிகாட்டிகள் தீர்மானிப்பார்கள். அவர்கள் ஆய்வு செய்து நமக்கு தகவல் தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
7. ஹுவாங்லாங் தேசிய பூங்கா (Huanglong National Park)
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடமேற்கில் உள்ள ஹுவாங்லாங் பள்ளத்தாக்கு முழுவதும் 1992ஆம் ஆண்டிலிருந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த பள்ளத்தாக்கு முழுவதும் பாண்டாக்கள் அதிகம் காணப்படுகிறது.மேலும் இந்த இடம் பனிமலைகள், அழகான வன சுற்றுச்சூழல் அமைப்புகள், பனி மூடிய சிகரங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் சூடான வெந்நீர் ஊற்றுகளுக்கும் பெயர் பெற்றது.
இங்குள்ள இந்த தெளிந்த நீர் குளங்கள் 3.5 கிலோ மீட்டர்கள் வரை நீண்டு காணப்படுகிறது. இந்த இடத்தை மொத்தமாக சேர்த்து பார்க்கும் பொழுது பெரிய டிராகன் இருப்பது போல் காணப்படுமாம். இந்த பள்ளத்தாக்கின் மேல் ஒரு பண்டைய புத்த கோவில் உள்ளது.
8. பஞ்சார் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Banjar Hot Springs)
பஞ்சார் வெந்நீர் ஊற்றுக்கள் இந்தோனேஷியாவின் பாலியில் அமைந்துள்ளது. இந்த வெந்நீர் ஊற்று புகழ்பெற்ற பிரம்மா விஹாரா அராமா பவுத்த மடாலயத்திலிருந்து 1.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சூடான வெந்நீர் ஊற்றை ஒட்டி ஒரு தனியார் குளம் மற்றும் மிக பிரம்மாண்டமான ஆடம்பரமான குளியலறையான ஜக்குஸி பகுதி, மசாஜ் செய்யும் இடம், ஆடம்பரமான திறந்தவெளி உணவகம் இப்படி பல வசதிகள் இங்கு உள்ளது.
ஆடம்பர சுற்றுலா செல்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை இங்கு செய்து வைத்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் இங்கு இருக்கக்கூடிய இந்த வெந்நீரூற்று மருத்துவ குணம் வாய்ந்ததாக சொல்கிறார்கள். இந்த நீரில் 26 சதவீத கந்தக உள்ளடக்கம் உள்ளது. 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் இருக்கக்கூடிய இந்த தண்ணீர் சருமத்தில் இருக்கக்கூடிய அரிப்பு, எரிச்சல், வீக்கம் இவைகளைப் போக்கி சருமத்தை குணமாக்கும் சக்தி கொண்டதாம்.
பளபளப்பான இந்த பச்சை வர்ண நீர் அருகருகில் இருக்கக்கூடிய வெவ்வேறு 3 குளங்களுக்கு செல்கிறது. 6.5 அடி ஆழமுள்ள பிரதான நீச்சல் குளம் ஒன்று, 3 அடி ஆழமுள்ள குழந்தைகள் குளிக்க வசதியாக உள்ள குளம் ஒன்று, டிராகன் வடிவத்தில் இருக்கக்கூடிய மேல்நிலை குளம் ஒன்று என மூன்று குளங்கள் உள்ளன.
9. டெர்மே டி சாட்டர்னியா (Terme di Saturnia)
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கக்கூடிய டெர்மே டி சாட்டர்னியா இத்தாலியின் தெற்கு டெல்லியில் உள்ள மிகப் பிரபலமான வெந்நீரூற்று கொண்ட சுற்றுலாத்தலம். இந்த வெந்நீர் ஊற்று நீர்வீழ்ச்சியாக டிராவர்டைன் பாறைகள் மீது பாய்கிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து பாய்ந்து சில சிறிய குளங்களை உருவாக்கியுள்ளது. விநாடிக்கு சுமார் 800 லிட்டர் தண்ணீர் வெளிவருகிறது.
சுமார் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டிருக்கக்கூடிய சல்ஃபியூரஸ் அடங்கிய இந்த வெந்நீர் ஊற்று எல்லா வகையான முகப்பருக்களையும் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. முகப்பரு இருப்பவர்கள் இங்கு சென்றால் போதும் முகம் அழகாக மாறி விடும் போல. மேலும் பல்வேறு விதமான தெர்மல் சிகிச்சைகளும் இங்கு கொடுக்கப்படுகிறது.
இந்த வெந்நீர் ஊற்று உருவானதற்கு ரோமானியர்கள் ஒரு புராணக் கதையையும் உருவாக்கியுள்ளார்கள். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு புராண தெய்வங்களுக்கு இடையில் மிகப் பெரிய சண்டை மூண்டது. அப்பொழுது வியாழன் சனியை நோக்கி வீசிய மின்னல் துண்டுகள் தவறி இங்கு வந்து விழுந்து டெர்மே டி சாட்டர்னியா உருவாகியுள்ளது என்ற புராணக் கதையும் உள்ளது.
10. யுனார்டோக் தீவு (Uunartoq Island)
யுனார்டோக் தீவு கிரீன்லாந்தின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெப்ப நீரூற்றுகள் உள்ளன. ஆனால் யுனார்டோக் தீவு நீரூற்றுகள் மட்டுமே குளிக்க போதுமான வெப்பமாக இருக்கும் ஒரே இடம். குளிர் காலத்தில் உறைபனி மாதங்களில் கூட ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் வெப்பமாக இருக்கும். இங்கு உள்ள தண்ணீரின் வெப்பம் 93 இருந்து 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். பிரபல நகரங்களான காகார்டோக் மற்றும் நானோர்டாலிக் நகரங்களில் இருந்து படகு மூலம் இங்கு செல்லலாம். நீரூற்றுகளை சுற்றி இருக்கக்கூடிய பனிப்பாறைகள் மற்றும் மலை உச்சிகளில் இயற்கை அழகுகள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கிறது.
11. குரோகாவா ஆன்சென் (Kurokawa Onsen)
ஜப்பானின் கியுஷுவில் அமைந்திருக்கக் கூடிய குரோகாவா ஆன்சென் மிகப் புகழ்பெற்ற ஜப்பானின் வெந்நீர் ஊற்று. இந்த வெந்நீர் ஊற்றை ஜப்பானியர்கள் மிக அழகாக கலை நுட்பமாக மாற்றியமைத்து இருக்கிறார்கள். ஜப்பானின் அழகான கலை நுட்பம் கொண்ட கட்டிடங்கள் இங்கு உள்ளது.
12. டிராவர்டைன் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Travertine Hot Springs)
இந்த அழகான பாறைகள் சூழ்ந்த டிராவர்டைன் வெந்நீர் ஊற்று கலிபோர்னியாவின் கிழக்கு சியராஸில் அமைந்துள்ளது. இந்த வெந்நீர் ஊற்று நீரின் வெப்பம் 103 டிகிரியில் இருந்து 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இந்த கனிமங்கள் அதிகம் நிறைந்த வெந்நீரூற்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உள்ளூர் பழங்குடி மக்களாலும் அதன்பிறகு ஆரம்பகால குடியேறிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்பொருள் பதிவுகளின் படி பேலியோ இந்தியன்ஸ் பத்தாயிரம் ஆண்டுகளாக இங்கு உள்ள வெப்ப நீரூற்றுக்களை பயன்படுத்தியுள்ளார்கள்.
13. ஷாம்பெயின் பூல் (Champagne Pool)
நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள வயோட்டாபுவில் உள்ள ஷாம்பெயின் வெந்நீர் ஊற்று மிகவும் பிரபலமான வண்ணமயமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புதமான ஒரு இடம். 213 அடி அகலம் உள்ள இந்த நீரூற்றில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு உள்ளது. இந்த வெந்நீர் ஊற்று சுமார் 165 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையை கொண்டுள்ளது. இதனால் இந்த வெந்நீர் ஊற்றில் யாரும் குளிக்க முடியாது அழகை மட்டுமே அனுபவிக்க முடியும். குளத்தினுள் இருக்கக்கூடிய தண்ணீர் நீலப்பச்சை நிறத்திலும் குளத்தை சுற்றி இருக்கும் ஆரஞ்சு வளையம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
14. டன்டன் வெப்ப நீரூற்று (Dunton Hot Springs)
இந்த அழகான டன்டன் வெந்நீரூற்று கொலராடோவில் 8600 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள வெந்நீரூற்றில் உள்ள தண்ணீர் 85 டிகிரி முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பமாக இருக்கிறது. இங்குள்ள வெப்ப நீரூற்றுகள் ஆடம்பரமான தங்கும் வசதி கொண்ட வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள ஆடம்பர அறைகள் ஒரு இரவுக்கு ஆயிரம் டாலர்களுக்கு மேல் வாடகைக்கு விடப்படுகிறது.
15. டெர்மாஸ் ஜியோமெட்ரிகாஸ் (Termas Geométricas)
சிலியின் புக்கோன் பகுதியிலுள்ள வில்லாரிகா தேசிய பூங்காவின் நடுவில் இந்த சூடான நீர் ஊற்று உள்ளது. இங்கு மொத்தம் 17 வெப்ப நீரூற்று குளங்கள் உள்ளது. ஒவ்வொரு குளத்திற்கும் நடந்து செல்வதற்காக சிவப்பு வர்ணத்தில் அழகான நடைபாதையும் அமைத்திருக்கிறார்கள். குளிர்ச்சியான தண்ணீரை கொண்டு வரக்கூடிய சிறிய அருவிகளும் இங்குள்ளது. இந்த குளங்களில் உள்ள தண்ணீர் ஆண்டு முழுவதும் 95 லிருந்து 108 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் இருக்கிறது.
3 comments
Thanks very nice blog!
Hello, its pleasant paragraph about media print, we all understand
media is a wonderful source of information.
Heya i am for the primary time here. I came across this board and I in finding It really useful
& it helped me out a lot. I am hoping to offer one
thing again and help others such as you helped
me.