நம்முடைய இந்தியாவில் கலை சிற்பங்கள் கொண்ட சக்தி வாய்ந்த ஏராளமான கோவில்கள் காணப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவில்களை காண்பதற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படி நம்முடைய இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய ஒருசில முக்கியமான கோவில்களை பற்றி பார்ப்போம்.
1. பத்ரிநாத் கோவில், உத்தரகண்ட் (Badrinath Temple)
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள பத்ரிநாத்தில் அமைந்திருக்கிறது இந்த பத்ரிநாத் கோயில். இது பத்ரி நாராயணன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்தக் கோவில். பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள அதிகப்படியான குளிர் காரணமாக இந்த கோவில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். இந்த கோவிலுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்குள் மட்டுமே செல்ல முடியும்.
2. கொனார்க் சூரியக் கோவில் (Sun Temple, Odisha)
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த கொனார்க் சூரியன் கோவில். சூரியபகவானுக்காக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் நரசிம்ம தேவரால் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலை கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு கால வருமானம் செலவிடப்பட்டதாம். ஏழு குதிரைகள் பூட்டி இருபத்தி நான்கு சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளுவது போல் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு குதிரைகள் ஏழு நாட்களையும் 24 சக்கரம் 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோயிலின் அமைப்பு உள்ளது.
3. பிரகதீஸ்வரர் கோவில், தமிழ்நாடு (Brihadeeswara Temple)
தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் தஞ்சை பெருவுடையார் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றபடி இது தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 10ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய இந்த கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
4. சோம்நாத் கோவில் குஜராத் (Somnath Temple Gujarat)
குஜராத் மாநிலத்தில் கிர் சோம்நாத் மாவட்டத்தில் பிரபாச பட்டினத்தில் இந்த சோமநாதபுரம் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இந்த சிவன் கோவில்.
5. கேதார்நாத் கோவில், உத்தரகண்ட் (Kedarnath Temple, Uttarakhand)
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றின் கரைக்கு அருகில் இருக்கக்கூடிய கார்வால் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. இங்கு காணப்படும் கடுமையான குளிர் காரணமாக இந்த கோயில் ஏப்ரல் மாதத்தில் இருந்து தீபாவளி திருநாள் வரைக்கும் திறந்திருக்கும். கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரத்தில் பனிகள் மற்றும் பனிமூடிய சிகரங்கள் சூழப்பட்ட இடத்தில் இந்த கோவில் இருப்பதால் குளிர்காலத்தில் இந்த கோயிலில் இருக்கக்கூடிய விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த கோவிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
6. ராமநாதசுவாமி கோயில், தமிழ்நாடு (Ramanathaswamy Temple)
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள மிகவும் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று. இந்தக் கோவிலில் ராவணனைக் கொன்ற பாவம் தீர இராமர் வழிபட்டார்.
7. வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு காஷ்மீர் (Vaishno Devi Temple)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோதேவி மலையில் அமைந்துள்ளது மாதா வைஷ்ணோதேவி கோவில். வட இந்தியாவில் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்று.
8. சித்திவிநாயகர் கோவில், மகாராஷ்டிரா (Siddhivinayak Temple)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகரான மும்பையில் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ளது சித்திவிநாயகர் கோயில். இந்தியாவிலுள்ள பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்று. புதிதாக ஒரு விஷயத்தை தொடங்குபவர்கள் இங்கு வந்து இங்குள்ள விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு அவர்கள் தொடங்க வேண்டிய செயல்களை செய்கிறார்கள்.
9. கங்கோத்ரி கோவில், உத்தரகண்ட் (Gangotri Temple)
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்திரி மலையில் 11482 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த கங்கோத்திரி கோயில். இந்தக் கோயில் கங்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
10. காசி விஸ்வநாதர் கோவில், உத்தரபிரதேசம் (Kashi Vishwanath Temple)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் காசியில் அமைந்திருக்கக் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் புகழ்பெற்ற சிவபெருமான் கோவில். இந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் கோயில்களில் இதுவும் ஒன்று.
11. புரி ஜெகன்நாதர் கோயில் (Jagannath Temple)
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜெகன்நாதர் கோயில். இது பிரபலமாக ஜெகன்நாத் புரி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண பகவான் இங்கு ஜெகன்நாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
12. யமுனோத்ரி கோவில், உத்தரகண்ட் (Yamunotri Temple)
யமுனோத்ரி கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக இரண்டு முறை சேதமடைந்து மீண்டும் கட்டப்பட்டது. இந்தியாவின் புனித நதியான யமுனா நதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோவில் 10797 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அட்சய திருதியை அன்று திறக்கப்படும் இந்த கோயில் தீபாவளிக்கு மறுநாள் மூடப்படும். அன்னை யமுனாவின் சிலை குளிர்காலத்தில் அருகிலுள்ள கர்சாலி கிராமத்திற்கு மாற்றப்படுகிறது. யமுனோத்ரி கோவிலை சுற்றியுள்ள பகுதியில் சாலைகள் இல்லாததால் நடந்தே செல்ல வேண்டும்.
13. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களின் மூலக்கோயில் இது. தேவலோகத்தின் அரசனான இந்திரனால் இந்த கோயில் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. ராமர், லட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்களால் இந்த சிவாலயம் வழிபடப்பட்டு உள்ளது.
14. அமர்நாத் குகைக் கோயில், ஜம்மு காஷ்மீர் (Amarnath Cave Temple)
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் அமைந்துள்ள இந்த அமர்நாத் குகைக்கோயில் 5000 ஆண்டுகள் பழமையானது. இந்த பனிபடர்ந்த புனித குகை கோயில் 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அமர்நாத் குகைக்கோயிலில் சிறப்பம்சமே பனிலிங்கம். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்களில் பனி உருகி மீண்டும் சிவலிங்கம் உருவாகிறது. இந்த சிவலிங்கமானது வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களுக்கு ஏற்ப உருமாறுவதாகவும் சொல்லப்படுகிறது. புராணங்களின்படி இங்குதான் சிவபெருமான் தன்னுடைய வாழ்க்கையின் ரகசியங்களை பார்வதிக்கு சொன்னதாக கூறப்படுகிறது.
15. லிங்கராஜா கோவில், ஒடிசா (Lingaraja Temple)
லிங்கராஜர் கோயில் ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கோவில் சிவபெருமான் கோவில்.
16. திருப்பதி பாலாஜி கோயில் (Tirupati Balaji Temple)
திருப்பதி வெங்கடாசலபதி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் எனவும் அழைக்கப்படும் இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் திருமலை என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த திருப்பதி வெங்கடாசலபதி கோயில். இந்தியாவில் மிகவும் பணக்கார கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று.
17. கஜுராஹோ கோவில், மத்திய பிரதேசம் (Khajuraho Temple)
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுராஹோவில் 10லிருந்து 12 ஆண்டுகளுக்கு இடையில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 20 கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள இந்த நகரத்தின் நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் 75 ற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்துள்ளது. ஆனால் இப்பொழுது வெறும் இருபது கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.
18. விருபாக்ஷா கோயில், கர்நாடகா (Virupaksha Temple)
விருபாட்சர் கோயில் கர்நாடக மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்தில் ஹம்பி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் மிகவும் பிரபலமான கோயிலாக இருந்து வருகிறது. இது சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கோவில்.
19. அக்ஷர்தாம் கோயில், டெல்லி (Akshardham Temple)
அக்ஷர்தாம் கோவில் டெல்லியின் நொய்டாவில் அமைந்துள்ளது. வாஸ்து சாஸ்திரம் மற்றும் பஞ்சராத்ர சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த கோவில் டெல்லியின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முதன்மை கடவுள் விஷ்ணுவின் அவதாரமான சுவாமி நாராயணன்.
20. ஷீரடி சாய்பாபா கோவில், மகாராஷ்டிரா (Shirdi Sai Baba Temple)
மகாராஷ்டிராவின் ஷீரடியில் 1922 ஆம் ஆண்டு ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஆலயம் சாய்பாபாவின் சமாதியின் மேல் அமைக்கப்பட்டது. ராமநவமி, குரு பூர்ணிமா மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
21. ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில், கேரளா (Shri Padmanabhaswamy Temple)
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. விஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. இந்தக் கோவில் பத்தாவது நூற்றாண்டுகளிலேயே இருந்ததற்கான சான்றுகளும் உள்ளது. இந்தியாவிலுள்ள மிகவும் பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்று
22. பொற்கோயில், பஞ்சாப் (Golden Temple)
ஹர்மந்திர் சாஹிப், தர்பார் சாஹிப் என அழைக்கப்படும் பொற்கோயில் சீக்கிய மக்களின் ஒரு முக்கியமான வழிபாட்டு இடம். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் பஞ்சாபின் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.
23. சாஞ்சி ஸ்தூபி, மத்திய பிரதேசம் (Sanchi Stupa, Madhya Pradesh)
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய சிறிய ஊரான சாஞ்சியில் அமைந்திருக்கும் சாஞ்சி ஸ்தூபி புத்த பெருமானின் நினைவுச்சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிபி மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கிபி 12ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல நினைவுச் சின்னங்கள் இங்கே காணப்படுகிறது. பேரரசர் அசோகரால் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.