November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

ஒரு ஏரிக்குள் இருக்கும் பல்வேறு நிறங்களில் உள்ள 375 க்கிற்கும் மேற்ப்பட்ட மர்மமான குளங்கள்

ஒரு பெரிய ஏரிக்குள் பல்வேறு வர்ணங்களில் சுமார் 375 ற்கும் மேற்பட்ட மர்மமான குளங்கள் உள்ளன. இந்த ஏரிக்குள் காணப்படக்கூடிய குளங்கள் எப்படி உருவானது. இதன் மர்மங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். மிகவும் வித்தியாசமான ஒரு ஏரி இந்த ஸ்பாட்டட் ஏரி. இந்த ஏரி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கிழக்கு சிமில்கமீன் பள்ளத்தாக்கில் ஒசையூஸ் நகரின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

உலகத்திலேயே அதிக கனிமங்களை உள்ளடக்கிய ஓர் ஏரி இது. நீங்கள் நினைப்பது போல இது சாதாரண ஏரி கிடையாது. ஒரு ஏரிக்குள் சுமார் 365 தனிப்பட்ட சிறுசிறு குளங்கள் போல இது காணப்படுகிறது. ஒவ்வொரு சிறிய குளத்திலும் மாறுபட்ட தனித்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் காணப்படுகிறது. குறிப்பாக மெக்னீசியம், சல்பேட், கால்சியம், சோடியம் சல்பேட் இப்படி பலவிதமான கனிமங்கள் அடர்த்தியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் எட்டு மற்ற தாதுக்கள், குறைந்த அளவு வெள்ளி மற்றும் டைட்டானியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கனிமங்கள் காரணமாக இதிலுள்ள நீரானது பல்வேறு நிறங்களைக் கொண்டுள்ளது. இந்த நீர் நிலையில் காணப்படும் கனிமங்கள் உலகின் பல அரிய நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது எனவும் நம்பப்படுகிறது. குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் இந்த ஏரி மற்ற நீர்நிலைகளைப் போலவே இருக்கும்.

ஆனால் கோடைகாலம் தொடங்கி சூரியனின் கோரப்பார்வையால் பெரும்பாலான நீர் ஆவியாகத் தொடங்கும் போது அந்த அதிசயம் நடக்க தொடங்குகிறது. ஏரியில் ​​நூற்றுக்கணக்கான பெரிய குளங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. இது மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்களில் காட்சியளிக்கிறது. இந்த ஏரியை கனடாவின் மேஜிக்கல் பிளேஸ் (the most magical place in Canada) எனவும் அழைக்கிறார்கள்.

தண்ணீரில் இருக்கும் கால்சியம், சோடியம் சல்பேட்டுகள் மற்றும் மெக்னீசியம் சல்பேட் உள்ளிட்ட தாதுக்களின் அதிக செறிவின் காரணமாக இந்த வண்ணமயமான குளங்கள் உருவாகின்றன. சுற்றியுள்ள மலைகளிலிருந்து கனிமங்கள் மற்றும் உப்புகளின் தொகுப்பு இந்த ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது. பல்வேறு வண்ணங்கள் ஒவ்வொரு குளத்திலும் உள்ள தாதுக்களின் செறிவைப் பொறுத்து தெரிகிறது.

ஒகேனகன் தேசத்தின் பழங்குடி மக்களால் ஸ்பாட்டட் ஏரி பல நூற்றாண்டுகளாக ஒரு புனித இடமாக கருதப்பட்டு வந்துள்ளது. வெவ்வேறு வட்டங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை என்று அவர்கள் நம்பினர். இந்த ஏரி நீரைச் சுற்றியுள்ள நிலம் பல ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமாக இருந்துள்ளது. 2001ம் ஆண்டில் அரசால் கையகப்படுத்தப்பட்டது.

முதலாம் உலகப் போர் நடந்த பொழுது ​​ஏரியிலிருந்து கிடைக்கும் கனிமங்கள் வெடிமருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இங்குள்ள கனிமங்கள் தொழிலாளர்களால் அறுவடை செய்யப்பட்டன. அவர்கள் தினமும் ஏரியிலிருந்து ஒரு டன் உப்பை வெட்டி எடுத்துள்ளனர். ஏரியைக் காண விரும்பும் பார்வையாளர்கள் மிக நெருக்கமாக அருகில் சென்று பார்க்க முடியாது. ஏரியின் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க அந்தப் பகுதியை பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment