ஒரே கிராமத்தில் இருந்து 5 எம்.எல்.ஏக்களா ? அதிசயமா இருக்கா ?

ஒரே குடும்பத்தில் 5 எம்.எல்.ஏக்கள் இருப்பதை கேள்வி பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் ஒரே கிராமத்தில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் துணை பிரதமர் தேவிலால் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஹரியானா அரசியலில் தேவிலால், பன்சிலால், பஜன்லால் குடும்ப வாரிசுகள்தான் முதன்மை பதவியை வகித்துவருகின்றனர். நாட்டின் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். அவரது மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக இருந்தவர்.

ஊழல் வழக்கில் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஜய் சவுதாலாவின் மகன் துஷ்யந்த் சவுதாலா.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதில் தேவிலால் குடும்ப வாரிசு அரசியலைத்தான் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்தது பாஜாக.

குடும்ப வாரிசுகளின் கோட்டையான சிர்சா, தாத்ரி மற்றும் ஹிசார் மாவட்டங்களில் இந்த பிரசாரத்தை முன் வைத்த பாஜாக, குறிப்பாக சவுதாலா குடும்பத்தினரை மிகக் கடுமையாக விமர்சித்தது.

ஆனால் தேவிலால் பேரன்கள் தனித்தனியே பிரிந்து தான் தேர்தலை எதிர்கொண்டனர். ஆனாலும் தேர்தலில் அதிரடி வெற்றியை பெற்றுள்ளனர். இந்த பிரதான தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

துஷ்யந்த் சவுதாலாவின் தாயார் நய்னா சவுதாலா, பத்ரா தொகுதியில் போட்டியிட்டார். அவர் முன்னாள் முதல்வர் பன்சிலால் மகன் ரன்பீர் மகேந்திராவை 13,704 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தேவிலால் பேரன்களில் ஒருவரான துஷ்யந்த் சவுதாலா, ஜேஜேபி எனும் தனிக்கட்சியை தொடங்கி கையோட் உசான கலான் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு பாஜாகாவின் பிரேம் லதாவை 47,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தேவிலால் மகன்களில் ஒருவரான ரஞ்சித் சிங், ரெய்னா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 19,431 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேவிலால் மற்றொரு பேரனான அபேய் சவுதாலா, எல்லனாபாத்தில் போட்டியிட்டு 11,922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஹரியானாவில் நீண்டகாலம் முதல்வர் பதவியில் இருந்தவர் பஜன்லால். அவரது மகன் குல்தீப் பிசோனி ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு பாஜகா வேட்பாளராக டிக்டாக் புகழ் சோனாலியை 29,471 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆனால் பாஜாகாவில் இணைந்து போட்டியிட்டு தேவிலாலின் மற்றொரு பேரன் ஆதித்யா தேவிலால், தப்வாலி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அவரை தோற்கடித்த அமித்சிகாவும் தேவிலால் குடும்பத்துக்கு தூரத்து உறவினர்தான்.

யாரெல்லாம் தோல்வி?

பன்சிலால் மருமகனான காங்கிரஸ் வேட்பாளர் சோம்பிர் சங்வான் லோகரு சட்டசபை தொகுதியிலும், பஜன்லாலின் மூத்த மகன் சந்தர் மோகன் பஞ்ச்குலா தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர்.

ஹரியானா அரசியலில் கலக்கிய ‘லால்’ பரம்பரைகளுக்கு எதிரான பாஜக பிரசாரத்தை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

5 எம்.எல்.ஏக்களும் ஒரே கிராமமா?

இதில் இன்னொரு சுவாரசியம் என்னனா ஹரியானா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிலால் குடும்பத்தைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்களும் சிர்சா மாவட்டம் சவுதாலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

அதாவது ஒரே கிராமத்தில் இருந்து ரஞ்சித் சிங், அபேய் சவுதாலா, நய்னா சவுதாலா, துஷ்யந்த் சவுதாலா, அமித் சிகா ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் ஹரியானா சட்டசபைக்குள் நுழைகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *