November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

வித்தியாசமான மண் குளியல் திருவிழா போரியோங் மண் திருவிழா

உலகம் முழுவதும் மக்களிடையே வித்தியாசமான ஏராளமான விசித்திர திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான திருவிழாவை பற்றி பார்ப்போம். இது போரியோங் மண் திருவிழா. சேற்றில் இறங்கி குளித்து விளையாடுவதற்கு ஏதாவது ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் இந்த திருவிழா உங்களுக்கு பிடிக்கும்.

சேற்றில் இறங்கி விளையாடி குளித்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும், உடலில் உள்ள நோய்கள் குணமாகும், மிக வேகமாக வயதாகும் தன்மை குறையும், இளவயது போல் காட்சி அளிப்பீர்கள். இப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த மண்ணில் குளிப்பதால் உங்களுடைய சருமம் பொலிவடையும் என சொன்னால் யாருக்குத்தான் இந்த சேற்றில் குளித்து விளையாட பிடிக்காது.

மக்கள் தங்களுடைய உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு சேற்றை வாரி எடுத்து ஒருவருக்கொருவர் எறிந்து விளையாடும் அற்புதமான ஒரு திருவிழா இந்த மண் திருவிழா. இந்த மண் திருவிழா தென் கொரியாவின் சியோலுக்கு தெற்கே 200 கிமீ தொலைவில் உள்ள தெற்கு சுங்சியோங் மாகாணத்தில் உள்ள போரியோங்கில் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு வருடாந்திர திருவிழா.

இந்த மண் திருவிழா முதன்முதலாக 1998ஆம் ஆண்டு தொடங்கியது. 2007ம் ஆண்டில் இந்த திருவிழாவை காண்பதற்கு 22 லட்சம் மக்கள் வந்திருந்தனர். இந்த போரியோங் மண் திருவிழா கொரியாவின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாக இப்பொழுது வளர்ந்துள்ளது. போரியோங் மண் திருவிழா வெளிநாட்டினர் மட்டுமல்ல, கொரியர்களிடமும் மிகவும் பிரபலமானது.

தென் கொரியாவில் நடக்கக்கூடிய இந்த மண் திருவிழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவிற்கு முதலில் போரியோங் மண் அடுக்குகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு டேச்சியோன் கடற்கரை பகுதிக்கு டிரக் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த மண் கனிமங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இது அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த திருவிழா முதலில் போரியோங் மண் அழகுசாதனப் பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் மையமாக இருந்தது. 1997 ஆண்டு வாக்கில் போரியோங் மண் அடுக்குகளில் இருந்து சேற்றைப் பயன்படுத்தி பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த மண்ணில் பெண்டோனைட்டுகள் மற்றும் ஜெர்மானியங்கள் நிறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, இவை அனைத்தும் இயற்கையாகவே அப்பகுதியில் இருக்கும் சேறு கலந்த மண்ணில் இருக்கிறது. இந்த அழகுசாதனப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் போரியோங் மண் திருவிழா உருவாக்கப்பட்டது. இந்த திருவிழாவின் மூலம் மக்கள் சேறு மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பற்றி மேலும் அறிந்து கொள்வார்கள் என்று நம்பப்பட்டது.

திருவிழா காலத்தில் டேச்சியோனின் கடற்பகுதியில் மண் மசாஜ், பெரிய மண் குளியல், மண் குளம், மண் சரிவுகள், கலர் சேறு, மண் பனிச்சறுக்கு போட்டிகள், மண் மல்யுத்தம், மண் ராஜா போட்டி ஆகியவை நடக்கும். இதில் பங்குபெற டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம். உடலில் ஓவியம் வரைவதற்கு வண்ண சேறும் தயாரிக்கப்படுகிறது.

கடற்கரையில் ஒரு பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இசை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகிறது. போரியோங்கிலிருந்து வரும் சேற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களை விற்கும் ஒரு சிறிய சந்தை கடலோரத்தில் உள்ளது. பல்வேறு உடல்நலம் சம்பந்தமான அழகுபடுத்தும் கிளினிக்குகள், மசாஜ், குத்தூசி மருத்துவம் மற்றும் சேற்றின் மருத்துவ குணங்களைப் பயன்படுத்தி பல சிகிச்சைகள் உள்ளது.

கடற்கரையின் ஒரு இடத்தில் குழந்தைகளுக்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து வைத்து ஒரு குழந்தைகள் விளையாட்டு மண் மண்டலத்தை அமைத்துள்ளனர். கடற்கரையோரமாக சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மண் திருவிழா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நீங்கள் காண முடியும்.

மாலை நேரங்களில் நேரடி இசைக் கச்சேரிகள், ரேவ் பார்ட்டிகள் மற்றும் உலக தோல் அழகுப் போட்டி ஆகியவை இடம்பெறும். தென் கொரியாவின் மிகவும் பிரபலமான மதுபானமான கொரிய பீர் மற்றும் சோஜு ஆகியவற்றுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளை உள்ளூர் உணவகங்கள் உங்களுக்கு வழங்கும். தென்கொரியாவில் அதிக வெளிநாட்டினர் பங்கேற்கும் மிகப்பெரிய திருவிழா இது மட்டுமே. கடைசியாக மிகப்பெரிய வானவேடிக்கையுடன் திருவிழா முடிவடைகிறது.

Related posts

Leave a Comment