January 31, 2023
உடல்நலம்

நகங்களை கடித்தால் இவ்வளவு ஆபத்துக்களா ?

50 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது நகங்களை கடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள் என ஆய்வுகள் சொல்கிறது. நகம் கடிக்கும் பழக்கம் பொதுவாக குழந்தைப் பருவத்தில் தொடங்கி முதிர் வயது வரை தொடர்கிறது. வெறுமனே நகம் கடிப்பது மட்டும் தானே என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இது பல்வேறு ஆபத்துக்களை கொண்டுள்ளது. மிக முக்கியமாக பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு நீங்கள் உள்ளாவீர்கள். பலருக்கும் பலவிதமான பதட்டமான பழக்கவழக்கங்கள் உள்ளது. இப்படி அடிக்கடி பதட்டப்படுபவர்கள் கை நகங்களை தொடர்ந்து கடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிக படபடப்பு உள்ளவர்கள் தொடர்ந்து நகங்களை கடித்து கொண்டிருப்பார்கள்.

அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நகங்களை அடிக்கடி கடிப்பார்கள். உங்கள் நகங்களின் இடுக்குகளில் ஏராளமான அழுக்குகள் உள்ளது. கூடவே விரல் நகங்களுக்கு இடையில் ஏராளமான கிருமிகளும் தங்கி உள்ளது. நீங்கள் அடிக்கடி உங்கள் கைகளை சுத்தமாக கழுவி வைத்து இருந்தாலும் உங்களுடைய நகங்களுக்கு அடியில் உள்ள எல்லா கிருமிகளும் அழுக்குகளும் வெளியேறுவது கடினம்.

இந்த கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கள் உங்கள் வாயில் வைத்து நகங்களை கடிக்கும் போதெல்லாம் உங்களுடைய உடலில் செல்லத் தொடங்கும். தொடர்ந்து நகத்தை கடித்து கொண்டிருப்பதால் உங்கள் நகங்களை சுற்றி இருக்கக்கூடிய தோலை காயப்படுத்திக் கொண்டிருக்கும். இது நகங்களை வளர செய்யும் திசுக்களை சேதப்படுத்த ஆரம்பிக்கும்.

மேலும் நகத்தை சுற்றி வலி, வீக்கம், நகம் சிவந்துபோதல் இப்படிப்பட்ட பிரச்சினைகளும் பாக்டீரியா தொற்றுக்களையும் ஏற்படுத்தும். கூடவே உங்கள் நகங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நீங்கள் நகத்தை வாயில் வைப்பதால் வாய்வழி அது உடலுக்குள் செல்கிறது. இது பல்வேறு தொற்று நோய்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

தொடர்ந்து நகம் கடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பாக்டீரியாக்கள் வாயில் நுழைவதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் அதிக வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து நகம் கடித்துக் கொண்டிருப்பவர்களாக நீங்கள் இருந்தால் உடனடியாக இந்த பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். இதற்கு உங்கள் நகங்களை வளர விடாமல் அடிக்கடி நகத்தை வெட்டுங்கள்.

நகங்கள் வளராமல் இருப்பது தெரிந்தால் நீங்கள் நகங்களை கடிப்பது குறைய தொடங்கும். என்னால் நகங்களைக் கடிக்காமல் இருக்க முடியாது என நீங்கள் நினைத்தால் முடிந்தவரை தனிமையில் இருக்கும்பொழுது கைக்கு கையுறை போடுங்கள். நகத்திற்கு அழகான நெயில் பாலிஷ் போடுவதன் மூலமாகவும் நகம் கடிப்பது குறையும்.

சிலருக்கு நகம் கடிப்பது மிக தீவிரமான உளவியல் சம்பந்தப்பட்ட உணர்ச்சி பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் பலமுறை நகம் கடிப்பதில் இருந்து வெளியே வர முயற்சித்தும் உங்களால் முடியாமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

Related posts

Leave a Comment