August 18, 2022
அறிந்திராத உண்மைகள்

சீனாவில் தேநீர் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரஸ்ய கதை

தேயிலை பானம். தண்ணீரும். தேயிலைப் பொடியும். சர்க்கரையும் இருந்தால் போதும். யாராலும் எளிதில் பிளாக் டீ எனப்படும் தேயிலை பானத்தை போடமுடியும். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மனிதர்கள் அதிகமாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் என சொல்கிறார்கள். ஆதி காலத்தில் இருந்தே இந்த தேநீர் பானமாக குடிக்கப்பட்டுள்ளது. கிமு 2732 ஆண்டுகளுக்கு முன்பே தேனீர் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறு சொன்னாலும் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் மக்கள் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே பீங்கான் பாத்திரத்தை தேநீர் அருந்துவதற்கு மக்கள் பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

சீனாவில் உள்ள ஷென் நங் என்னும் பேரரசர் கிமு 2732 ஆம் ஆண்டில் சுவாரஸ்யமாக தேயிலை பானத்தை கண்டுபிடித்தார் என சொல்கிறார்கள். பேரரசர் காட்டுப்பகுதியில் செடிகளின் கீழ் அமர்ந்து தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு இலை கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் விழுந்துள்ளது. பேரரசரும் அந்த தண்ணீரை எடுத்து பருகி உள்ளார்.

அதனுடைய மென்மையான சுவை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அவரை அதற்கு அடிமையாக்கி உள்ளது. அவர் கொதிக்க வைத்திருந்த அந்த தண்ணீரில் விழுந்த இலை தேயிலை இலை. அதுவரைக்கும் இப்படி ஒரு வித்தியாசமான பானத்தை அவர் குடித்ததில்லையாம். இந்த பானத்தை குடித்த பிறகு அதன் சுவையில் மயங்கிய அவர் அதற்கு சா(ch’a) என பெயரிட்டார். அப்படி என்றால் சீன மொழியில் அதற்கு விசாரணை என பொருளாம். எதற்காக இப்படி ஒரு பெயரிட்டார் என்பது தெரியவில்லை. அதிலிருந்து சீனாவில் தேநீர் மிகவும் பிரபலமாக தொடங்கியுள்ளது.

போர்த்துகீசியம் மற்றும் டச்சுக்காரர்கள் 1610ம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு தேயிலையை முதன்முதலில் இறக்குமதி செய்தனர். இங்கிலாந்தில் தேநீர் அருந்தும் பழக்கம் இரண்டாம் சார்லஸ் மன்னர் போர்த்துகீசிய இளவரசி பிரகன்சாவை மணந்தபோது தொடங்கியதாம். பிரிட்டனின் புதிய ராணி தேநீரை விரும்பி குடித்து அதன் சுவையில் மயங்கி தனது பணக்கார பிரபுத்துவ நண்பர்களுக்கு தேநீர் வழங்கத் தொடங்கினார். உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் குடிக்கும் பானம் அல்லவா? அதனால் தேநீர் குடிக்கும் பழக்கம் மிக வேகமாக மக்களிடம் பரவத்தொடங்கியது. அரச குடும்பத்தினரிடம் மிக நேர்த்தியாக தேநீர் பரிமாறுவது அதை ஸ்டைலாக அவர்கள் ரசித்து ரசித்து குடிப்பது தேநீரின் அந்தஸ்தை அதிகரித்தது. கூடவே அதை பிரபலப்படுத்தியது.

புத்த துறவி டெங்கியோ டெய்ஷி சீன தேயிலை விதைகளை ஜப்பானுக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர். அதன்பிறகு தேநீர் ஜப்பானிய மடாலய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது. தியானத்தில் அமர்ந்திருக்கும் பொழுது விழிப்புடன் இருக்க துறவிகள் தேநீரைப் பயன்படுத்தினர். 1300 களின் முற்பகுதியில் தேநீர் ஜப்பானிய சமுதாயம் முழுவதும் பிரபலமாக இருந்தது. ஜப்பானில் தேயிலை பிரபலமாகத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அது மிகவும் மதிப்பு மிகுந்த ஒரு பானமாக கருதப்பட்டது.

1904 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிசோரியின் செயின்ட் லூயிஸில் நடந்த உலக கண்காட்சியில் அமெரிக்கர்கள் முதல் குளிர்ந்த தேநீரை சுவைத்து மகிழ்ந்தனர். அந்த கண்காட்சியில் ஒரு தேயிலை வியாபாரி அங்கு கலந்துகொள்பவர்களுக்கு சூடான தேநீரை இலவசமாக கொடுத்து தேயிலை பொடியை விற்க முடிவுசெய்தார். ஆனால் அவர் இலவசமாக விற்பனை செய்த சூடான தேநீரை யாரும் குடிக்க ஆர்வம் காட்டவில்லை. காய்ச்சிய தேனீரை எப்படி வீணாக்குவது.

ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என முடிவு செய்து அவர் காய்ச்சி வைத்திருந்த தேநீரில் ஐஸ் கட்டிகளை கொட்டி ஐஸ் தேனீரை கொடுக்கத் தொடங்கினார். எதேச்சையாக முயற்சி செய்த ஐஸ் டீ குடிப்பதற்காக கூட்டம் முண்டியடிக்க தொடங்கியது. அவருடைய புதிய முயற்சி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இன்று அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 50 பில்லியன் கப் ஐஸ் டீயை குடிக்கின்றனர். அமெரிக்காவில் குடிக்கப்படும் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான தேநீர் ஐஸ் தேநீர். கணநேரத்தில் ஒருவர் எடுத்த முடிவு மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதித்தது.

காஃபியில் அதிக அளவு காஃபின் உள்ளது நமக்கு தெரியும். காஃபி குடிப்பதை விட தேனீர் குடிப்பதால் நம்முடைய உடலில் காஃபின் அளவு அதிகரிப்பது குறைகிறது. தேனீரில் அதிக அளவு காணப்படக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காபியை நம்முடைய உடல் உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதன் காரணமாக நம்முடைய செரிமான மண்டலம் மூலமாக காபின் மெதுவாக உறிஞ்சப்படுகிறது. இது நம்மை அதிக நேரம் விழிப்புடன் வைத்திருக்கும். ஒரு கப் காபியை விட ஒரு கப் தேநீரில் காஃபின் குறைவாகவே உள்ளது.

தேநீர் நம்முடைய உடலுக்கு நல்லது. தேநீரில் பாலிஃபீனால்கள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய உயிரணுக்களை சரிசெய்யும். மேலும் இதய நோய்கள், புற்றுநோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ், நீரிழிவு நோய் மற்றும் பல நோய்களைத் தடுக்க நம்முடைய உடலுக்கு உதவும். பொதுவாக இப்பொழுது கிரீன் டீ உடலுக்கு நல்லது என சொல்கிறார்கள். ஆனால் அதைவிட நாம் சாதாரணமாக அருந்தும் பிளாக் டீ எனப்படும் கருப்பு தேநீரில் ஆரோக்கியம் தரும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகம் உள்ளது.

உலகில் 1,500 க்கும் மேற்பட்ட தேயிலை வகைகள் உள்ளன. ஆசியாவின் சில பகுதிகளில் தேயிலை செடிகள் காடுகளாக வளர்கின்றன. 25 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு தோட்டப் பயிராக தேயிலையை பயிரிடுகின்றன. மிக சிறந்த தேயிலை மிக உயரமான மலைப்பாங்கான இடங்களில் இருந்து கையால் பறிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எல்லா சீன தேநீர் வகைகளும் பச்சை தேயிலை கொண்டு தயாரிக்கப்பட்டன. அதன்பிறகு சீனாவில் வெளிநாட்டு வர்த்தகம் அதிகரித்ததால் சீன விவசாயிகள் தேயிலை இலைகளை ஒரு சிறப்பு நொதித்தல் செயல்முறை மூலம் பாதுகாக்க முடியும் என்று தெரிந்துகொண்டனர். இதன் காரணமாக உருவான கருப்பு தேயிலை மென்மையான பச்சை தேயிலைகளை விட சுவை மற்றும் நறுமணத்தை மிகவும் நீண்ட காலம் வைத்திருந்தது. கூடவே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நீண்டநாள்கள் வைத்திருந்து பயன்படுத்தவும் உதவியாக இருந்தது.

டீ பேக்குகள் அமெரிக்காவில் தற்செயலாக கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தப்பட்டது. 1908 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள தேயிலை வியாபாரி ஒருவர் தனது தேயிலை தயாரிப்பின் மாதிரிகளை சிறிய பைகளில் அடைத்து நகரம் முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்கு அனுப்பினார். அதனுடைய முடிவுகளை தெரிந்துகொள்ள அவர் அந்த கடைகளுக்கு சென்ற பொழுது சில கடைகளில் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக பைகளில் இருந்த தேயிலையை அவர்கள் அப்படியே பையோடு சேர்த்து நீரில் போட்டு தேநீர் காய்ச்சுவதை அவர் கண்டுபிடித்தார். இப்படி டீ பேக் கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment