November 27, 2022
சமையல்

எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்த ப்ரக்கோலியை கொண்டு சுவையான ப்ரக்கோலி கிரேவி…!

நாம் அனைவரும் வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் ப்ரக்கோலியை கொண்டு அட்டகாசமான சுவையில் சத்தான ப்ரக்கோலி கிரேவி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காலிஃபிளவர் போன்று தோற்றத்தில் காணப்படும் ப்ரக்கோலியானது நிறத்தில் மாறுபட்டு, பச்சையாக காணப்படும். இந்த ப்ரக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன.

ப்ரக்கோலியில் காணப்படும் “சல்போரபேன்” என்ற வேதிப்பொருள் புற்று நோய்களின் செல்களின் வளர்ச்சியை முறித்து, அடிப்படை புற்று நோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இதில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளையும் சரி செய்யும். மேலும் இதில் பெருமளவில் பைபர் உள்ளதால், செரிமான பிரச்சனைகளையம் சரி செய்கிறது. இதில் விட்டமின் “சி” உள்ளதால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பெற்றது.

இத்தனை மருத்துவ நன்மைகளை தரும் ப்ரக்கோலியை கொன்டு நாம் சுவையான அதே நேரம் ஆரோக்கியமான ப்ரக்கோலி கிரேவியை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம் என்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ப்ரக்கோலி – கால் கிலோ

வெங்காயம் – ஒன்று

தக்காளி விழுது – அரை கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – முக்கால் ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத் தூள் – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

ஏலக்காய் – இரண்டு

முந்திரி பருப்பு – ஐந்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

நாம் முதலில் ப்ரக்கோலியின் தண்டினை மட்டும் நீக்கி விட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.

பின் அதில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளியை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் செய்துக்க கொள்ள வேண்டும்.

முந்திரி பருப்பினை மிக்சி ஜாரில் போட்டு சிறிது நீர் தெளித்து பேஸ்ட் செய்துக் கொண்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்,

அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொண்டு, பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

இஞ்சி பூண்டின் வாசனை சென்ற பிறகு, அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாடை செல்லும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு, மசாலாக்களின் வாசனை செல்லும்படி நன்றாக வதக்கி விட வேண்டும்.

இப்போது அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் மிக்ஸ் செய்து விட்டு, மூடி வைக்க வேண்டும்.

தீயினை சிம்மில் வைத்து சுமார் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் சத்தான ப்ரக்கோலி கிரேவி ரெடி…!

Related posts

Leave a Comment