தகவல்

பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் அதிர்ச்சி

நம்முடைய பூமிக்கு மிக அருகில் இருக்கும் ஒரு கருந்துளையை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கருந்துளைகள் என்பது விண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் அதிகமாக இருக்கும் பகுதிகள். கருந்துளைகளிடம் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது. ஒளி கூட தப்பிக்க முடியாது. அவை தகர்ந்து போன நட்சத்திரங்களிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது.

இப்பொழுது பூமியிலிருந்து சுமார் 1,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கருந்துளையை கண்டுபிடித்து அதை சர்வதேச வானியலாளர்கள் குழு சமீபத்தில் அறிவித்தது. ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம். விண்வெளியில் ஒளி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9.4 டிரில்லியன் கிலோமீட்டர்கள் நகர்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த கருந்துளைக்கு Gaia BH1 என்று பெயரிட்டுள்ளனர். இது ஓபியுச்சஸ்(Ophiuchus) விண்மீன் தொகுப்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு விண்மீன் என்பது நட்சத்திரங்களின் குழுவாகும். இந்த கருந்துளையானது நமது சூரியனை விட 10 மடங்கு எடை கொண்டதாக நம்பப்படுகிறது.

இதற்கு முன்னர் பூமிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளையை விட இந்த கருந்துளை மூன்று மடங்கு பூமியின் அருகில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை ஈர்ப்பு நிறை அதன் சுற்றுப்பாதை நட்சத்திரத்தின் இயக்கத்தைக் கணக்கிட்டு அடையாளம் காணப்பட்டது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் அதே தூரத்தில் அந்த நட்சத்திரம் கருந்துளையைச் சுற்றி வருகிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) Gaia விண்கலத்தைப் பயன்படுத்தி கருந்துளை முதலில் கண்டறியப்பட்டது. Gaia ஏற்கனவே 800,000 க்கும் மேற்பட்ட பல நட்சத்திர அமைப்புகளை கண்டுபிடித்துள்ளது.

வானியற்பியல் வல்லுநர் எல்-பத்ரி மற்றும் அவரது குழுவினர் நான்கு மாத கால தொடர் கண்காணிப்புகள் மூலமாக இந்த கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினர். இந்த முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள ஆறு வெவ்வேறு அதிக உணர்திறன் தொலைநோக்கிகள்பயன்படுத்தப்பட்டன. அதில் ஒன்று சிலியில் உள்ள லாஸ் காம்பனாஸ் ஆய்வகத்தில் உள்ள 6.5 மீட்டர் மெகெல்லன் பேட் தொலைநோக்கி.

ஹவாயை தளமாகக் கொண்ட ஜெமினி நார்த் தொலைநோக்கியையும் பயன்படுத்தியுள்ளார்கள். கருந்துளையின் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு இத்தகைய தொலைநோக்கிகள் உதவியுள்ளது. சிலியில் உள்ள தொலைநோக்கி மற்றும் ஜெமினி நார்த் தொலைநோக்கி ஆகியவை வானியலாளர்களுக்கு அதிக துல்லியமான ஹை ரெஸலுஷன் படங்களை கொடுத்துள்ளது.

தொலைநோக்கிகள் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்கள் பற்றிய முக்கியமான தகவல்களையும் கொடுத்துள்ளது. இந்த கருந்துளை இப்பொழுது செயலற்றதாக இருப்பதாக எல்-பத்ரி தெரிவித்துள்ளார். செயலில் இருக்கும் போது கருந்துளைகள் உயர் ஆற்றல் ஒளியை வெளியிடுகின்றன. செயலற்ற நிலையில் அவை எதையும் வெளியிடுவதில்லை அதை அடையாளம் காண்பது கடினம்.

நமது பால்வெளி மண்டலத்தில் கருந்துளை எப்படி உருவானது என்பது தெளிவாக தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையில் இருந்து கருந்துளை பாரம்பரிய வழியில் உருவானால் அந்த நட்சத்திரம் நமது சூரியனை விட குறைந்தது 20 மடங்கு நிறை அதிகம் இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதன் பொருள் நட்சத்திரம் ஒரு குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்திருக்கும். ஒருவேளை சில மில்லியன் ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருக்கும். இரண்டு நட்சத்திரங்களும் ஒரே நேரத்தில் உருவாகியிருந்தால் பெரிய நட்சத்திரம் விரைவில் ஒரு சூப்பர்ஜெயண்ட் ஆக மாறி அது முழுமையாக உருவாகும் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு மற்ற நட்சத்திரத்தை விழுங்கியிருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியின் மிக நெருங்கிய கருந்துளை பற்றிய மர்மம் அது எப்படி உருவானது என்பது பற்றிய பல கேள்விகளை முன்வைக்கிறது. அதோடு இந்த செயலற்ற கருந்துளைகள் எத்தனை உள்ளன என்பதும் தெரியவில்லை. எல்-பத்ரி கடந்த நான்கு ஆண்டுகளாக Gaia BH1 போன்ற ஒரு அமைப்பைத் தேடி வந்துள்ளார்.

எல்லா விதமான முறைகளையும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவை எதுவும் நல்ல முடிவை கொடுக்கவில்லை. கடைசியில் இந்த தேடல் இறுதியாக நல்ல பலனைத் தந்ததைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது என எல்-பத்ரி கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment