November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

29,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன சைபீரியன் யூனிகார்ன் எப்படி அழிந்தது

நம்முடைய உலகில் நாம் அறிந்திராத ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளது. கால சூழலில் இந்த விலங்குகளில் ஏராளமானவை அழிந்து போய் உள்ளது. மிக முக்கியமாக பூமி எங்கும் சுற்றித்திரிந்த ஏராளமான டைனோசர்களை நாம் பார்ப்பதற்கு முன்னே இழந்துவிட்டோம். இப்படி அழிந்து போன ஒவ்வொரு உயிரினங்களின் புதை படிவங்கள் மூலமாக அவை வாழ்ந்துள்ளது இப்பொழுது நமக்கு தெரிய வருகிறது.

அப்படி அழிந்து போன உயிரினங்களில் ஒன்று சைபீரியன் யூனிகார்ன். சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த உயிரினத்தின் புதைபடிவங்கள் இது மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம் என்பதை தெரிவிக்கிறது. ஒற்றைக் கொம்புடன் காண்ட மிருகத்தையும், குதிரையும் சேர்ந்து கலந்திருக்கும் ஒரு கலவை போல இந்த உயிரினம் காட்சியளிக்கிறது. முதலில் இந்த உயிரினம் 350,000 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்து போனதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் கடைசியாக கஜகஸ்தானில் கிடைத்த சைபீரியன் யூனிகார்னின் மண்டை ஓட்டை ஆராய்ச்சி செய்ததன் மூலமாக இந்த உயிரினம் அழிந்து 29,000 ஆண்டுகள் ஆனதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த சைபீரியன் யூனிகார்ன் கொஞ்சம் காலம் மட்டுமே பூமியில் சுற்றித் திரிந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த புதைபடிவங்கள் மூலமாக இது நீண்ட காலமாக பூமியில் சுற்றித் திரிந்து மனிதர்களோடு சேர்ந்து வாழ்ந்து இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

கஜகஸ்தானின் பாவ்லோடர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு சுமார் 29,000 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த சைபீரியன் யூனிகார்ன் இறந்துபோனது என்பதற்கான ஆதாரத்தை கொடுத்துள்ளது. இந்த உயிரினம் சுமார் 6 அடி உயரமும் 15 அடி நீளமும் கொண்டிருந்தது. இதனுடைய எடை 4000 கிலோவுக்கு மேல் இருந்துள்ளது. இந்த உயிரினம் மேற்கு சைபீரியாவில் தெற்கு பகுதியில் அதிகம் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்கிருந்து தொடர்ந்து இடம்பெயர்ந்து பல இடங்களில் வசித்து வந்துள்ளது. இந்த விலங்கு மனிதர்களோடு சேர்ந்து வாழ்ந்த போதும் இதனுடைய அழிவுக்கு காரணம் மனிதர்கள் அல்ல என சொல்லப்படுகிறது. இந்த உயிரினம் உலர்ந்த புற்களை மட்டுமே சாப்பிடும் என்பதை கண்டறிந்துள்ளார்கள். 29,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பனிக்கட்டியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்த உயிரினம் சாப்பிடக்கூடிய உலர்ந்த புல் கிடைக்காமல் போயிருக்கிறது. மேலும் பனியின் தாக்கம் விலங்கு உறைந்து போகும் அளவிற்கு குளிரையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதையும் தாண்டி இந்த விலங்குகளால் சிறப்பாக உயிர் வாழ முடியவில்லை. உணவும் கிடைக்காமல் வாழ்வியல் சூழ்நிலை மாறியதால் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த சைபீரியன் யூனிகார்ன் இனமே அழிந்து போனதாக சொல்லப்படுகிறது.

Related posts

Leave a Comment