உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு எந்த ஒரு விலங்கை கண்டாலும் அதிக பயம் இருக்குமாம். காட்டு விலங்குகள் மட்டுமல்லாமல் வீட்டு விலங்குகளை பார்த்தும் பலரும் பயப்படுகிறார்களாம். மிகவும் சாதுவான விலங்குகளைப் பார்த்து பயப்படுபவர்கள் கூட பலர் உண்டாம். உங்களில் பலருக்கும் இப்படி பல விலங்குகளை பார்த்து பயம் இருக்கும். மனிதர்களை மோசமாக தாக்கக்கூடிய மிகக் கொடூரமான பெரிய விலங்குகள் உண்டு. ஒரு சில சிறிய விலங்குகள் கூட மிகப்பெரிய தாக்குதலை மனிதர்களுக்கு ஏற்படுத்தும். இப்படிப்பட்ட ஒரு சில வித்தியாசமான விலங்குகளை பற்றி பார்ப்போம்.
1. நீர்யானை
நீர் யானைகளை நாம் பார்த்திருப்போம். பார்ப்பதற்கே மிகவும் விசித்திரமாக தன்னுடைய வாயை மிகப்பெரிய அளவில் திறந்தால் கோரை பற்களோடு காட்சியளிக்கும். இந்த நீர்யானைகள் ஆப்பிரிக்காவின் மிகவும் ஆபத்தான விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூர்மையான பற்களோடு காட்சியளிக்கும் இவை கொடிய சேதத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு வலிமை கொண்டது. அவைகளுடைய இடத்தை யாராவது ஆக்கிரமித்தால் அல்லது அதனுடைய அருகில் சென்றால் மிகக் கொடூரமாக தாக்குவதற்கு தயங்காது. அது எந்த விலங்காக இருந்தாலும் சரி மனிதர்களாக இருந்தாலும் சரி. நீர்யானைகள் யாரையாவது தாக்கும் பொழுது அது ஒரு சதுர அங்குலத்திற்கு 2 ஆயிரம் பவுண்டுகள் அழுத்தத்தில் கிட்டத்தட்ட இரண்டு அடி நீளமுள்ள கோரைப்பற்களை கொண்டு தாக்கும். சிங்கம் ஒருவரை கடிக்கும்பொழுது கூட இதில் பாதி அழுத்தத்தையே பயன்படுத்துகிறது. அப்படியென்றால் இதனுடைய கடி எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. பாக்ஸ் ஜெல்லிமீன்
இந்தோ பசிபிக்கில் மிக மெதுவாக நகரக்கூடிய இந்த பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிக விஷமான கடல் விலங்குகளாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி பிஷ்ஷின் வால் போன்ற பகுதிகள் 10 அடி நீளம் வரைக்கும் வளரக்கூடியது. இது ஆயிரக்கணக்கான கொட்டும் செல்களை வரிசையாக கொண்டுள்ளது. இது நம்மை தாக்கினால் ஒரே நேரத்தில் அது இதயம், நரம்பு மண்டலம், தோல் செல்களை தாக்கும் அளவிற்கு நச்சுக்கள் உள்ளது. கடற்கரையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கரையை அடைவதற்கு முன்பு அதிர்ச்சி காரணமாக தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவார்கள். இல்லை என்றால் இதய செயலிழப்பால் இறந்துவிடுவார்கள். பிலிப்பைன்ஸில் மட்டும் இந்த பாக்ஸ் ஜெல்லி பிஷ் மீன்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 40 பேரை கொன்று விடுகிறது.
3. கூம்பு நத்தை (Cone Snail)
வெப்பமண்டல இடங்களிலுள்ள வெதுவெதுப்பான தண்ணீரில் வசிக்கக்கூடிய இந்த அழகான கூம்பு நத்தை அதனுடைய அழகான பளிங்கு ஓடுகள் காரணமாக பலரையும் சுண்டி இழுக்கும். இது பொதுவாக கடற்கரைக்கு அருகில் உள்ள ஆழமற்ற இடங்களிலும், பவளப்பாறைகள், பாறைகளுக்கு அருகிலும், மணல் மேடுகளுக்கு அடியிலும் காணப்படுகிறது. இந்த அழகான கூம்பு நத்தையை நீங்கள் தெரியாமல் தொட்டால் அவ்வளவுதான். இதனுடைய உடலில் ஒரு வித்தியாசமான கானோடாக்சின் விஷம் உள்ளது. இது உங்களுடைய உடலில் பட்டால் உங்களுடைய நரம்பு செல்களை ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொள்கிறது. ஆகையால் இது ஒரு சில நிமிடங்களிலேயே பக்கவாதத்தை ஏற்படுத்தும். இதனுடைய விஷம் நம்முடைய உடலில் செலுத்தப்பட்டால் 5 நிமிடங்களில் இறப்பது உறுதி. இந்தக் கூம்பு நத்தைகள் பொதுவாக கரீபியன் தீவுகள், ஹவாய் மற்றும் இந்தோனேசியாவை சுற்றியுள்ள தண்ணீரில் வாழ்கிறது.
4. கோல்டன் பாய்சன் டார்ட் தவளை (Golden Poison Dart Frog)
மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய இந்த அழகான தவளை அதிக விஷம் கொண்டது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. இந்த தவளைகள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. கொலம்பியாவில் பசிபிக் கடற்கரையில் உள்ள சிறிய மழைக்காடுகளில் மட்டுமே மிகவும் கொடிய இந்த தவளை வாழ்ந்து வருகிறது. சின்ன தவளை சுமார் இரண்டு அங்குல நீளம் மட்டுமே இருக்கும். இரண்டு மைக்ரோகிராம்கள் மட்டுமே கொண்ட இந்த தவளையின் விஷம் 10 மனிதர்களை கொல்லும் சக்தி வாய்ந்தது. இந்த தவளையின் ஆபத்தான விஷ சுரப்பிகள் அதனுடைய தோலுக்கு அடியில் இருக்கும். இதை நீங்கள் தொட்டாலே ஆபத்தை ஏற்படுத்தும். எம்பெரா பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளாக வேட்டையாடும் பொழுது ஈட்டிகளின் நுனிகளில் இந்த தவளையின் விஷத்தை வைத்து வேட்டையாடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த தவளை இனம் ஆபத்தான பட்டியலில் இருக்கிறது.
5. கேப் எருமை (Cape Buffalo)
காடுகளில் சுமார் 900,000 எண்ணிக்கையில் இருக்கும் கேப் எருமை தனிமையில் இருக்கும் போது சாதுவாக இருக்கும். ஆனால் இது பெரிய கூட்டங்களாக பயணிக்கும் பொழுது அச்சுறுத்தப்பட்டால் மிகப் பெரிய கொடிய உயிரினமாக மாறுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக அளவு வேட்டையாடும் உயிரினங்களின் பட்டியலில் இதுவும் இருக்கிறது. அதாவது இந்த எருமைக்கு அச்சுறுத்தலோ காயமோ ஏற்பட்டால் கூட்டமாக சேர்ந்து எதிரியை மிதித்தே கொன்று விடுமாம். இந்த எருமைகள் 6 அடி உயரம் வரைக்கும் வளரும். 1000 கிலோ எடை இருக்கும். மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் எதிரியை மிக வேகமாக கடந்து செல்லும். கென்யாவில் உள்ள மசாய், மாரா உட்பட ஆப்பிரிக்காவில் இந்த கேப் எருமைகள் அதிகம் உள்ளது.
6. இந்தியன் சா-ஸ்கேல்டு வைப்பர் (Indian Saw-Scaled Viper)
இந்த இன விஷம் கொண்ட பாம்புகள் அதிகம் பாலைவனத்தில் வாழக்கூடியவை. பாலைவனத்தில் உள்ள மண்ணுக்கு ஏற்ப இதனுடைய நிறமும் இருக்கும். இதனால் இது நம்முடைய அருகில் இருந்தாலும் அவ்வளவு எளிதில் நம்மால் கண்டுகொள்ள முடியாது. இந்த பாம்புகளை இரவில் மட்டுமே நாம் அதிகம் காண முடியும். இரவில் வித்தியாசமான ஒரு ஒலியை இது எழுப்பிக் கொண்டிருக்கும்.
7. பஃபர்ஃபிஷ் (Pufferfish)
ப்ளோஃபிஷ் என்றும் அழைக்கப்படும் பஃபர்ஃபிஷ் வெப்பமண்டல கடல்களில் அதிகம் வசிக்கிறது. அவற்றின் நியூரோடாக்சின் விஷம் மிகவும் நச்சு மிகுந்தது. இதனால் ஜப்பான் போன்ற நாடுகளில் பஃபர்ஃபிஷ் சாப்பிடும் போது மனிதர்கள் இறக்கும் அபாயம் அதிகரிக்கிறது. சுவைக்காக விஷம் ஏறி செத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் ஜப்பான் மக்களே கொஞ்சம் இந்த மீன்களை சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஜப்பானில் இது ஃபுகு என்று அழைக்கப்படும் ஒரு சுவை மிகுந்த உணவு. அங்கு நல்ல பயிற்சி மற்றும் உரிமம் பெற்ற சமையல்காரர்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
அப்படியிருந்தும் ஒவ்வொரு வருடமும் இந்த மீனை சாப்பிடுவதால் பல மரணங்கள் ஏற்படுகின்றன. டெட்ரோடோடாக்சின் சயனைடை விட 1,200 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்டது. இது நாக்கு மற்றும் உதடுகளை சிதைத்துவிடும். தலைச்சுற்றல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம், தசை முடக்கம் சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை கூட ஏற்படுத்தும். மரணம் ஏற்பட்டாலும் விடமாட்டார்கள் போல. ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸைச் சுற்றி நீங்கள் பஃபர்பிஷ்களை நீங்கள் அதிகம் காணலாம்.
8. இன்லேண்ட் தைபான் (Inland Taipan)
உள்நாட்டு தைபான் பாம்புகள் ஆஸ்திரேலியர்களால் தண்டராபில்லா என்று அழைக்கப்படுகின்றன. அதிகம் தனிமையில் இருக்க விரும்பும். மனிதர்களை கண்டு பயந்தால் மட்டுமே கடிக்க முயற்சிக்கும். கடித்தால் அதன் விஷம் ஒரே நேரத்தில் 100 பேரை கொல்லும் திறன் கொண்டது. மிக வேகமாக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்தப் பாம்பு கடித்தவுடன் நம்முடைய உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழக்க ஆரம்பிக்கும். வலிப்பு ஏற்படும். மரணம் ஏற்படும் வரைக்கும் உடலின் ஒவ்வொரு பாகங்களும் செயல் இழக்கத் தொடங்கும்.
9. பிரேசிலிய வான்டெரிங் சிலந்தி (Brazilian wandering spider)
ஒரே கடி உடனடி மாரடைப்பு ஏற்படுத்தும் அளவிற்கு விஷம் கொண்டது. இந்த சிலந்தி ஐந்திலிருந்து ஏழு அங்குல நீளம் இருக்கும். அதிக விஷம் இருந்தாலும் இது மனிதர்களை கடிப்பது மிகவும் அரிது. இந்த சிலந்திகளுக்கு நச்சுகள் நிறைந்த கோரைப்பற்கள் உள்ளது. இந்த சிலந்தி கடித்த இரண்டிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படும். இது கடித்தால் நுரையீரல் செயலிழந்துவிடும். காய்ச்சல், வாந்தி, பக்கவாதம் போன்றவை உடனடியாக ஏற்படுகிறது. இந்த சிலந்திகள் தென்னமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
10. கல்மீன் (Stonefish)
பாறைகளுக்கு அருகில் பாறைகளோடு சேர்ந்து ஒட்டி பாறைகளைப் போலவே காணப்படக்கூடிய இந்த கல் மீன் மிகவும் நச்சுத்தன்மை உள்ள மீன். இந்த மீனின் விஷம் உடலில் செலுத்தப்பட்டால் ஒரு மணி நேரத்திற்குள் இறப்பு நிச்சயம். விஷம் ஏறுவதற்கு முன்னே மருத்துவமனையை அணுகுவது சிறந்தது.
11. உப்பு நீர் முதலை (Saltwater Crocodile)
முதலை இனங்களில் மிகவும் ஆபத்தானது உப்புநீர் முதலை. இந்த வகை உப்புநீர் முதலைகள் 23 அடி நீளம் வரை வளரக்கூடியது. ஒரு டன்னுக்கும் அதிகமான எடை இருக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களை கொல்வதாக அறிக்கை சொல்கிறது. சுறாக்களை விட அதிக மனித இழப்புகளுக்கு இந்த முதலைகளை காரணமாகிறது. இதன் ஒரு கடி ஒரு சதுர அங்குலத்திற்கு 3700 பவுண்டுகள் அழுத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு கடி கடித்தால் உங்கள் பாடு அவ்வளவுதான். அப்படியே சுக்குநூறாக நொறுங்கி போவீர்கள்.
12. டி செட்ஸ் ஃப்ளை (Tsetse Fly)
இந்த ஈக்கள் உலகின் மிகவும் ஆபத்தான ஈக்கள் என சொல்லப்படுகிறது. இது எட்டில் இருந்து 17 மில்லி மீட்டர் அளவு இருக்கும் சராசரி வீட்டு ஈயை போலவே இருக்கும். இந்த ஈ பொதுவாக சகாரா ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்த ஈக்கள் உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி குடிப்பது மட்டுமல்லாமல் மிகவும் பயங்கரமான டிரிபனோசோம்கள் எனப்படும் புரோட்டோசோவான் ஒட்டுண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் மிக மோசமான ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த ஒட்டுண்ணிகளால் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றுக்கு இதுவரைக்கும் தடுப்பூசிகளோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.
13. நீல-வளைய ஆக்டோபஸ் (Blue-Ringed Octopus)
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்க கூடிய இந்த ஆக்டோபஸ் தாக்கும் பொழுது சயனைடை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்த நியூரோடாக்சினை வெளியேற்றுகிறது. அதிலும் இது கடிப்பதை கூட நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. அந்த அளவுக்கு இந்த ஆக்டோபஸின் கடி வலியற்றதாக இருக்கும். இந்த ஆக்டோபஸ் பொதுவாக ஆஸ்திரேலியா, ஜப்பானை சுற்றியுள்ள பசிபிக் பெருங்கடலில் வாழ்கிறது.
14. கொசு (Mosquito)
வெறும் மூன்று மில்லி மீட்டர்களே கொண்ட சிறிய கொசு உலகின் இரண்டாவது மிக ஆபத்தான உயிரினம். உலகம் முழுவதும் மொத்தம் மூவாயிரம் வகையான கொசுக்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் ஏற்படும் நோய் கிருமிகளால் லட்சக் கணக்கான மக்கள் இறந்து போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 725,000 மக்கள் கொசுக்கடியால் இறந்து போகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
15. மனிதர்கள் (Humans)
உலகில் உள்ள மிகவும் வித்தியாசமான உயிரினம். நல்ல அறிவு வளர்ச்சி உள்ள உயிரினம். ஆனால் 10ஆயிரம் ஆண்டுகளாக தன் இனத்தை சார்ந்தவர்களையே தொடர்ந்து கொன்று வருகிறோம். உலகில் அதிக அளவு மனிதர்கள் இறந்து போனதே மனிதர்களால் தான். எந்த அளவிற்கு நாகரீகமாக வளர்ந்து கொண்டு வருகிறார்களோ அந்த அளவிற்கு நாகரீகமாக மனிதர்களை கொலை செய்யவும் தயங்காமல் பல வழிமுறைகளில் மனிதர்களை கொன்று குவித்து வருகிறார்கள் மனித இனங்கள். மனிதர்களைப்போல மனிதகுலத்திற்கு மிகவும் மோசமானவை வேறு எதுவும் கிடையாது. மனிதர்களை கொன்று அழிப்பதற்கு வேறு எதுவும் தேவையில்லை. மனிதர்கள் மட்டுமே போதும். அதுவே நடைபெறவும் போகிறது. வெகு சீக்கிரத்தில் மனிதர்களே மொத்த மனித இனத்தையும் அழித்துக் கொள்வார்கள். இதுதான் உண்மை. ஆகையால் உலகில் உள்ள மிகவும் கொடுமையான, கடுமையான, மோசமான உயிரினம் எது என்றால் அது மனித இனம் மட்டுமே. மற்ற உயிரினங்கள் இவர்கள் அருகில் வர முடியாது.
வீடியோவாக பார்க்க