கோவில்

விசித்திரமான பேய் ஓட்டும் கோவில் மெஹந்திபூர் பாலாஜி மந்திர்

நம்முடைய இந்தியாவில் ஏராளமான விசித்திரமான கோவில்கள் உள்ளன. அதில் மிகவும் விசித்திரமான ஒரு கோவில் ராஜஸ்தானில் உள்ளது. இந்த கோவிலில் எப்படிப்பட்ட பேய்களையும் ஓட்டுவார்களாம். பேயோட்டும் கோவில் என்றே பலராலும் சொல்லப்படுகிறதாம். அப்படி மிகவும் மர்மம் மிகுந்த இந்த கோவிலை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

மெஹந்திபூர் பாலாஜி மந்திர் என்ற கோவில் ராஜஸ்தான் மாநிலத்தில் தவுசா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜெய்ப்பூரில் இருந்து 99 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மெஹந்திபூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் ஆவிகள், பேய்கள் மற்றும் பிற தீய சக்திகளில் இருந்து தங்களை விடுவிப்பதற்காக மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு வருகிறார்கள். மிக தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இங்கு வந்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு திரும்பிச் செல்கிறார்கள்.

எப்படி இந்த கோவிலுக்கு வந்த உடன் அவர்களுக்கு ஆவிகள், பேய்கள் மற்றும் பிற தீய சக்திகளால் வரும் பிரச்சனைகள் தீர்க்கிறது என்பது இன்னும் யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தியாவின் மிக மர்மமான கோயில்களில் ஒன்றான இந்த பாலாஜி கோயில் இந்தியாவில் பேயோட்டுதல் மேற்கொள்ளப்படும் ஒரு இடமாக புகழ்பெற்றது. ஒவ்வொரு நாளும் இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

இந்த கோவிலில் ஏராளமான மந்திர சக்திகள் நிறைந்து இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். நீங்கள் கோயிலை விட்டு வெளியேறிய பிறகு கோவிலை நீங்கள் திரும்பிப் பார்க்கவோ, உடனே கோவிலுக்குத் திரும்பிச் செல்லவும் கூடாது என்று கூறப்படுகிறது.

காரணம் நீங்கள் திரும்பிப் பார்த்தாலும், உடனே அந்த கோவிலுக்கு போனாலும் தீய சக்திகள் அதை உங்கள் உடலில் வசிப்பதற்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளும். இந்த கோவிலில் ஹனுமான் வீற்றிருக்கிறார்.

வலிமை மிக்க இவர் பிரபலமாக பாலாஜி என்று அழைக்கப்படுகிறார். கோயிலில் அமைந்துள்ள சன்னதியில் முக்கியமாக தெய்வ வழிபாடு செய்யப்படும் மூன்று தெய்வங்கள் உள்ளன. அதில் ஹனுமான் பாலாஜி என்று அழைக்கப்படுகிறார்.

பிரெட் ராஜ் மற்றும் பைரவர் ஆகிய தெய்வங்களும் இருக்கிறது. இந்த தெய்வங்கள் அனைத்தும் பேய்கள் மற்றும் ஆவிகளை விரட்டும் என இங்கு வரும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் வணங்கப்படும் சிலைகள் தாமாகவே தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.

இங்குள்ள மர்மமான தெய்வீக சக்தி தீய சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை குணப்படுத்தும் சக்தி கொண்டுள்ளது என்றும் சூனியத்தின் பிடியிலிருந்து இங்கு வரும் பக்தர்களை விடுபட வைக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் உள்ள மூன்று தெய்வங்களும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. ஆரவலியின் மலைகளுக்கு மத்தியில் அனுமன் சிலை சுயமாக தோன்றியதாம். முன்னர் இந்த கோயிலில் இருந்த பகுதி அடர்ந்த காடாக இருந்துள்ளது.

ஸ்ரீ மஹாந்த் ஜீ என்பவரின் மூதாதையர்கள் இங்குள்ள பாலாஜியை வணங்க தொடங்கியுள்ளனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ஊருக்குள் நுழைந்தவுடன் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலையில் ஒரு வித்தியாசமான மாற்றத்தை அனுபவித்திருக்கிறார்கள்.

இந்த கிராமம் வெப்பமாக இருந்தாலும் கோவிலின் அருகில் பக்தர்கள் செல்லும் பொழுது சூடு தெரியாமல் குளிர்ச்சியாக இருக்குமாம். ஒரு வழக்கமான கோவிலைப் போலல்லாமல் இந்த கோயில் வித்தியாசமாக இருக்கும்.

ஆம் பொதுவாக கோவிலுக்கு சென்றால் அமைதியாக பூஜைகள், மணி ஓசை இப்படி மனதுக்கு அமைதியான ஒரு சூழலை கொடுக்கும். ஆனால் நீங்கள் இந்த கோவில் வளாகத்தில் காலடி எடுத்து வைக்கும் போதே அங்கு இருக்கும் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் உரத்த அலறல்களை கேட்க முடியும்.

அந்த ஒலிகள் உங்களை மிகப்பெரிய அளவில் பயமுறுத்தக்கூடும். பொதுவாக எல்லா கோவில்களிலும் பிரசாதங்கள் வழங்குவார்கள். ஆனால் இந்தக் கோவிலில் பிரசாதம் எதுவும் வழங்கப்படுவதில்லை.

கோயிலின் வளாகத்தில் ஒரு சில குட்டி கடைக்காரர்கள் கருப்பு வண்ண பந்தை விற்பனை செய்கிறார்கள். இதை நீங்கள் வாங்கி நெருப்பில் எறியவேண்டும். கருப்பு பந்துகளை அங்குள்ள சடங்கு நெருப்பில் எறிவதற்கு முன்பு உங்கள் உடலை ஐந்து முறை சுற்றி எடுத்து செல்லவேண்டும்.

பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு கொஞ்சம் யோசித்து தான் செல்ல வேண்டும். நீங்கள் வளாகத்தில் காலடி எடுத்து வைக்கும் பொழுது உங்களை சுற்றி எதிர்மறை சக்தி இருப்பதை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.

கோயிலில் நான்கு அறைகள் உள்ளன. முதல் இரண்டு அறைகளில் ஹனுமான் மற்றும் பைரவரின் சிலைகள் உள்ளன. அதே நேரத்தில் கடைசி மண்டபம் உங்களுக்கு ஒரு வினோதமான அனுபவத்தை கொடுக்கும்.

அங்கு வைத்திருக்கும் ஆண்களும், பெண்களும் தலையை சுவரில் மோதுகிறார்கள். எந்த வலியையும் உணராமல் அவர்கள் மீது கொதிக்கும் நீரை ஊற்றுகிறார்கள். அவர்களில் சிலர் கூரையிலிருந்து தொங்குவதை காண முடியுமாம். சிலர் பெரிய பாறைகளில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார்களாம்.

இந்த முழு சூழ்நிலையும் உங்களுக்கு மிகப் பெரும் அச்சத்தை கொடுக்குமாம். அதுபோல நீங்கள் அங்கிருந்து திரும்பி வரும்பொழுது பிரசாதம், தண்ணீர் அல்லது உணவுப் பொருட்களையும் இங்கிருந்து எடுத்துச் செல்லக் கூடாதாம்.

அதுபோல நீங்கள் உள்ளே சென்ற பிறகும் யாரிடமும் பேசக் கூடாதாம். பேசுவதையோ அல்லது தொடுவதையும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கு வரும் பலரிடம் எதிர்மறை சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் நீங்கள் அவர்களை தொட்டால் அவர்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். இது தவிர நீங்கள் கோவிலை விட்டு வெளியேறியதும் கோவிலை திரும்பி பார்க்கக் கூடாது. ஏனென்றால் ஒரு தீயசக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் திரும்பிப் பார்ப்பது தீய சக்திகளை நீங்கள் அழைப்பது போல் இருக்குமாம்.

இதனால் அங்குள்ள தீய சக்திகள் உங்களிடம் வந்து சேருமாம். நீங்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறிய உடன் ஒரு சொட்டு நீர் கூட உங்களிடம் இல்லாமல் கிராமத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் வழக்கமான செயல்களில் புனிதமான சடங்குகள் ஒன்று. 3 வகையான சடங்குகள் இங்கு பிரபலமாக செய்யப்படுகிறது.

துர்க்கஸ்தா

இந்தச் சடங்குக்கு கோயிலுக்கு வெளியே உள்ள கடையில் இருந்து சிறிய துர்க்கஸ்தா லட்டுகளை நீங்கள் வாங்க வேண்டும். இந்த லட்டுகள் இரண்டு தட்டுகளில் உங்களுக்கு கொடுக்கப்படும். நீங்கள் மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு முன்னால் நிற்கும் பூசாரிகளிடம் இந்த லட்டுக்களை கொடுக்க வேண்டும்.

அவர்கள் தேவையான லட்டு களையெடுத்து தெய்வத்தின் முன்னால் எரியும் நெருப்பில் போடுவார்கள். ஒவ்வொரு தட்டிலும் 4-5 லட்டுகள் இருக்கும். துர்க்கஸ்தா சடங்கு நேரம் காலை தொழுகைக்கு பிறகும் தொழுகைக்கு முன்பும் இருக்கும்.

இரண்டு தட்டுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், முதல் தட்டு கடவுளின் ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்பதை அறிவிப்பதற்கும், இரண்டாவது தட்டு உங்கள் இலக்குகளை அடைவதற்கும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உங்களை வழி நடத்துமாறு கடவுளிடம் கேட்டுக்கொள்வதற்கும்.

அதன் பிறகு நீங்கள் இதை பிரித்ராஜ் சர்க்கார் மற்றும் கோட்வால் பைரவர் ஆகியோருக்கும் செய்ய வேண்டும். அதன்பிறகு இருக்கும் மூன்று லட்டுக்களில் மீதமுள்ள இரண்டு லட்டுகளை நீங்கள் சாப்பிடவேண்டும். மீதமிருக்கும் ஒரு லட்டை உங்கள் தலையை இடமிருந்து வலமாக ஏழுமுறை சுற்றி பின்னோக்கி பார்க்காமல் தூக்கி எறியவேண்டும்.

அர்சி

துர்க்கஸ்தா சடங்குக்கு பிறகு வெளியில் கடைகளில் அர்சி ஆர்டர் செய்ய வேண்டும். இதில் 1.25 கிலோ லட்டுக்கள், 2.25 கிலோ உளுந்தம் பருப்பு மற்றும் 4.25 கிலோ வேகவைத்த அரிசி ஆகியவை இருக்கும். இது பிரீத்ராஜ் சர்க்கார் மற்றும் கோட்வால் பைரவர் ஆகியோருக்கு இரண்டு தனித்தனி அண்டாக்களில் படைக்கப்படும்.

சாவமணி

கோயிலிலிருந்து பூஜைகள் முடித்து நீங்கள் வெளியே செல்லும் முன்பு நீங்கள் ஏதேனும் விருப்பத்தை கடவுளிடம் கேட்டால் நீங்கள் மீண்டும் திரும்பி வந்ததும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் செய்யப்படவேண்டிய சடங்கான சாவமணியை நீங்கள் கொடுப்பீர்கள் என்று பாலாஜியுடன் சொல்ல வேண்டும்.

கோவில் விதிகள் கோவில் வளாகத்திற்குள் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ அனுமதிக்காது. அங்குள்ள யாராவது உணவு கொடுத்தால் கூட கண்டிப்பாக நீங்கள் வாங்கி சாப்பிடக் கூடாதாம்.

நீங்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறும் போது எந்த உணவுப் பொட்டலங்களோ தண்ணீர் பாட்டில்களோ உங்கள் கையில் இருக்க கூடாதாம். அதுபோல கோயிலுக்கு வருவதற்கு முன்னால் இறைச்சி மற்றும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது.

கிராமத்திற்கு செல்லும் போது எந்த உணவுப் பொருட்களையும் எடுத்து செல்ல கூடாது. இந்த கோவிலில் ஆவிகள் பேய்கள் மற்றும் தீய சக்திகள் போன்ற தொந்தரவுகளோடு வருபவர்கள் எப்படி அதிலிருந்து விடுதலை பெற்று திரும்பி செல்கிறார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. மிகப்பெரிய தெய்வ சக்தி இருக்கிறது என்பது மட்டுமே பலரும் சொல்லும் ஒன்று.

Related posts

Leave a Comment