November 27, 2022
ஆன்மீகம்

இந்த நாளில் கருட தரிசனம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

விஷ்ணுவின் அம்சம் கருடன். கருட தரிசனம் பார்ப்பது நல்ல சகுனம் என்பார்கள். கருடனைத் தரிசிக்கும்போது நம்முடைய மனம் நிறைவடைகிறது. அதாவது நம்முடைய துன்பங்களையும், துயரங்களையும் போக்க பகவான் விரைந்து வர கருடனே பேருதவியாய் இருக்கிறார். இதனாலேயே இவரை கருடாழ்வார் என்கிறோம்.

கருடாழ்வார், மகா பலம் உடையவர். கச்யபர் – விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கருடாழ்வார். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுளை நேரில் தரிசிப்பதை போன்றது வானில் கருடனை தரிசிப்பது. ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி ஆகும்.

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தாலும் அந்த நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்கள். ஏனென்றால் கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுவதாக நம்புகின்றனர்.

கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றும், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது. மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

கருடனின் இந்த தரிசனத்தை அவர் நினைத்தால் தரிசிக்க முடியும் என்பது ஐதீகம். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார். இவரை மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் போன்ற எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்தார். பறவைகளின் அரசன் கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவது தனிச்சிறப்பு.

எப்படி வணங்க வேண்டும் ?

அதி காலை சூரிய உதய நேரத்தில் கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் உடனே நடைபெறும். மாலை நேர கருட தரிசனம் சுபகாரியங்கள் வீட்டில் நிகழ போவதை முன்னறிவிக்கிறது. அதுபோல ஒவ்வொரு கிழமைகளில் நீங்கள் செய்யும் கருட தரிசனம் உங்களுக்கு பல பலன்களை கொடுக்கும். அதாவது வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது நல்ல பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஞாயிற்று கிழமைகளில் கருட பகவானை தரிசனம் செய்தால் நோய் அகலும். திங்கள் கிழமைகளில் தரிசனம் செய்தால் குடும்ப நலம் பெருகும். செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்தால் துணிவு பிறக்கும். புதன் கிழமைகளில் தரிசனம் செய்தால் பகைவர் தொல்லை நீங்கும். வியாழக் கிழமைகளில் தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். வெள்ளி கிழமைகளில் தரிசனம் செய்தால் திருமகள் திருவருள் கிட்டும். சனி கிழமைகளில் தரிசனம் செய்தால் முக்தி அடையலாம். தேவலோகத்தில் இருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே பூவுலகில் விழுந்து தர்ப்பை ஆனதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

கருடனை வழிபடும் போது கைகளை கூப்பாமல், கன்னத்தில் மோதிர விரலை வைத்து மானசீகமாக வணங்க வேண்டும். கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

நன்மைகள்:

ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது என்பது வழக்கு. கருட தரிசனம் தன்னிகரற்றது. கருடனை தரிசிப்பது பாவம் போக்கும். தோல் வியாதிகள், நீண்ட நாள் நோய் விலகும். நாகத் தோஷம் பறந்தோடும். கருட தரிசனம் செய்வது பூஜைகளிலும் மந்திர உச்சரிப்பிலும் தெரியாமல் ஏற்படும் தவறுகளை போக்க வல்லது.

மணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனைப் பூஜை செய்தால் பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவார்கள். கெட்ட சகுணங்கள், துர் சக்திகளின் கிரியைகள் போன்ற அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும். அழகிய கருட பகவானின் தரிசனம் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நன்கு உணரலாம்.

அடிக்கடி பாம்பு எதிர்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கருடபஞ்சமி விரதத்தை மேற்கொள்ளலாம். பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டி கடைப்பிடிப்பார்கள். சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்குச்சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் விவரிக்கிறது. கருடாழ்வாரை வணங்கி விருதம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷநோய்கள் தீரும் என கருடதண்டகம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment