November 27, 2022
உடல்நலம்

இந்த பழங்களையும் காய்கறிகளையும் சாலட்டாக சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதை நாம் அனைவரும் நல்லது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதன பெட்டியில் இருக்கக்கூடிய எல்லா பழங்களையும், காய்கறிகளையும் சாலட் ஆக செய்து அதனுடன் லெமன் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து ரசித்து ருசித்து சாப்பிடுவதை நாம் ஆரோக்கியமானது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமிலத்தன்மை கொண்ட, இனிப்பான பழங்களை ஒன்றிணைத்து சாப்பிடுவது நல்லதல்ல.

ஒரு சில காய்கறிகள், பழங்களை கலந்து சாப்பிடக்கூடாது. ஒருசில பழங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு காய்கறிகளின் ஜீரணமாகும் நேரம் வித்தியாசப்படும். அதுபோல ஒவ்வொரு பழங்களின் செரிமான நேரம் வித்தியாசப்படும். அது செரிமானத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அப்படி என்னென்ன பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது எந்தெந்த காய்கறிகளை சேர்த்து சாப்பிட கூடாது என்பதைப் பற்றி பார்ப்போம்.

முலாம் பழத்தை எப்பொழுதும் மற்ற பழங்களுடன் இணைத்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் முலாம் பழத்தோடு மற்ற பழங்களை சேர்த்து சாப்பிடும் பொழுது மற்ற பழங்களை விட முலாம்பழம் வேகமாக ஜீரணமாகிவிடும். முலாம் பழத்தில் அதிக அளவு நீர் சத்து காணப்படுவதால் மற்ற பழங்களை விட இது வேகமாக ஜீரணமாகிறது. அதுபோல தர்பூசணி பழத்தையும் மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. தர்பூசணி பழத்திலும் நீர்ச்சத்தானது அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மற்ற பழங்களுடன் தர்பூசணி பழத்தை சாப்பிடும் பொழுது தர்பூசணி பழம் வேகமாக செரிமானம் ஆகிவிடும். மற்ற பழங்கள் செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படும்.

இனிப்பு பழங்களுடன் ஒரு பொழுதும் அமிலத்தன்மை சேர்ந்த பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. திராட்சைப் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் போன்ற அமிலத் தன்மை கொண்ட பழங்கள் மற்றும் ஆப்பிள், மாதுளை, பீச் போன்ற பழங்களுடன் இனிப்பு நிறைந்த வாழைப்பழங்களை கலந்து சாப்பிடக்கூடாது. இவைகளை வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்பொழுது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுபோல வாழைப்பழத்துடன் கொய்யாப் பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது. சில ஆய்வு முடிவுகள் இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிடும்பொழுது குமட்டல், அமிலத்தன்மை, தலைவலி போன்ற வாய்ப்புகளை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

காய்கறிகளுடன் பழங்களை ஒருபொழுதும் சேர்த்து சாப்பிடக்கூடாது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஜீரணமாகும் நேரம் வித்தியாசப்படும். பழங்கள் விரைவாக செரிமானம் அடையும். ஒரு சில பழங்கள் வயிற்றில் சென்ற உடனே செரிமானம் அடைய தொடங்குகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் பழங்களில் அதிக அளவு சர்க்கரை அளவு உள்ளது. இது காய்கறிகள் செரிமான செயல்முறைக்கு இடையூறாக இருக்கும்.

இனிப்பான பழமான ஆரஞ்சு கூடவே கேரட்டை சேர்த்து கலந்து சாப்பிட கூடாது. இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன் நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

அதுபோல அதிக புரதச்சத்துடன் மாவுச்சத்தை ஒருபோதும் கலந்து சாப்பிட கூடாது. ஒரு சில பழங்கள் மட்டுமே இயற்கையில் மாவுச் சத்து கொண்டவை. இவற்றில் வாழைப்பழங்களில் பொதுவாக மாவுச்சத்து அதிகமாக காணப்படும். புரதச்சத்துள்ள பழங்கள் திராட்சை, கொய்யா இதுபோன்ற பழங்களுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் புரதங்களை ஜீரணிக்க அமிலத்தன்மையும், மாவுச்சத்து ஜீரணிக்க காரத்தன்மையும் தேவை. இது செரிமானத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக ஒரே நேரத்தில் 4 முதல் 6 பழங்களை உட்கொள்ளலாம். நீங்கள் அதிக புரதத்தை எடுத்துக் கொண்டிருந்தால் பப்பாளியை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை விரைவில் உடைத்துவிடும்.
உப்பை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உப்பை வெளியேற்ற தர்பூசணி போன்ற நீர் சார்ந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவை எடுத்தால் கூடவே ஆப்பிளை சாப்பிடுங்கள்.

Related posts

Leave a Comment