November 30, 2022
கனவுகள்

பேய் விரட்டுவது போல உங்கள் கனவில் கண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நம்முடைய பூமியில் கனவு காணாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. மனிதர்கள் கனவு காண்பது ஒரு இயற்கையான நிகழ்வு. நீங்கள் காணும் கனவு உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அதாவது உங்களுடைய கனவை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. தூங்கும் போது தன்னிச்சையாக வருவது கனவு. ஒரு கனவில் நீங்கள் பார்க்கும் விஷயங்கள் உங்களுடைய நிஜ வாழ்க்கையில் நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.

அப்படி பொதுவாக பலரும் காணக்கூடிய கனவுகளில் ஒன்று பேய்களைப் பற்றிய கனவு. பலரும் பேய் தாக்குவது போன்ற கனவை காண்பார்கள். இந்தக் கனவு உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிஜ சூழ்நிலைகளை ஒத்துப்போகிறது. அதாவது நீங்கள் மனரீதியாக ஏதாவது ஒரு விஷயத்தில் பாதிக்கப்படும் பொழுது உங்களுக்கு பேய்கள் பற்றிய கனவுகள் வருகிறது. ஏதாவது மிக முக்கியமான பிரச்சனைகளில் நீங்கள் மாட்டிக் கொண்டு இருந்தால் உங்களுக்கு இப்படி பேய் கனவுகள் வரும்.

இப்படி வரக்கூடிய பேய் கனவுகளில் உங்களுடைய பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்கக்கூடிய வழிகள் காண்பிக்கப்படும். பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் உங்களுக்கு நீங்கள் காணும் பேய் கனவில் கூட சேர்ந்து உங்களுடைய ஆழ்மனது உங்களுடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் காண்பித்து கொடுக்கும். நீங்கள் காணும் கனவு சரியாக உங்களுக்கு ஞாபகம் இருந்தால் மறுமுறை அதை நீங்கள் யோசித்துப் பார்க்கும் பொழுது உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு அதில் சுலபமாக இருக்கும்.

ஆனால் இதை சரியாக கண்டுபிடிப்பதே கடினம். கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடித்து பிரச்சனைகளில் இருந்து வெளிவரலாம். பேய் உங்களை தாக்குவது போல நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் கூட இருக்கும் ஒரு சிலர் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கக் கூடிய செயலில் இருந்து உங்களுடைய கவனத்தை சிதற செய்து உங்கள் செயலை தோற்கடிக்க முயற்சி செய்வார்கள் என்பதும் அர்த்தமாக இருக்கும்.

நீங்கள் வெற்றிபெற அதீத முயற்சி செய்து கொண்டிருக்க கூடிய ஒரு விஷயத்தில் உங்கள் கூட இருப்பவர்கள் உங்களை குழப்பி அதில் வெற்றி கிடைக்க முடியாமல் செய்வார்கள். நீங்கள் பேய் பற்றி நினைத்து பயப்படும் ஒரு நபராக இருந்தால் நீங்கள் தனியாக எங்கும் வெளியே செல்ல முடியாது. உங்கள் மனதில் பயம் சூழ்ந்து கொண்டிருக்கும். இருளில் நீங்கள் தனியாக சந்தோஷமாக இருக்க முடியாது பயம் உங்களை சூழ்ந்து விடும்.

நீங்கள் தனியாக இருக்கும்பொழுது எந்த காரணமும் இல்லாமல் உங்களை சுற்றி ஏதோ வினோதமாக நடப்பதைப் போல உணரலாம். ஏதோ அமானுஷ்ய சக்தி உங்கள் அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வு எப்பொழுதும் உங்களிடம் இருந்து கொண்டிருக்கும். இத்தகைய பாதிப்பை ஒருவர் தன்னுடைய மனதில் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வரும் பொழுது அவருடைய பயம் ஆலமரம் போல் வளர்ந்து கொண்டே செல்கிறது.

இது அதிகரிக்கும் பொழுது அந்த நபர் தனியாக இருக்கும் பொழுது அவரை சுற்றி தொடர்ந்து அமானுஷ்ய சக்திகளும் பேய்களும் இருப்பதாக நினைத்து பயந்து கொண்டிருப்பார். இந்த காரணத்தால் அவர் எந்த ஒரு விஷயத்தையும் நிம்மதியாக பயமின்றி செய்ய முடியாது. இது அவருடைய வாழ்க்கையிலும் தொடர்ந்து வரும். எந்த ஒரு விஷயத்திலும் துணிந்து முடிவெடுக்க அவருக்கு தைரியம் வராது.

ஐயையோ ஏதாவது நடந்து விடுமோ என பயந்து கொண்டே இருப்பார். நாம் ஏதாவது செய்யப் போய் விபரீதமாக நடப்பதைவிட இப்படியே இருந்து போவது நல்லது என நினைப்பார். உதாரணமாக ஏதாவது தொழில் செய்யவேண்டும் என அவர் நினைத்தாலும் அவரால் அந்த தொழிலை மிக வேகமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது. ஒரு சிறிய சறுக்கல் வந்தாலும் உலகமே இடிந்து விட்டது போல் பயந்து தன்னுடைய அடுத்த முயற்சியை எடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருப்பார்.

இருப்பதை வைத்துக்கொண்டு நான் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து விடலாம் என எந்த முன்னேற்றத்தையும் காணாதவராக அதே நிலையில் இருந்து விடுவார். இது அவருடைய அதீத பயத்தினால் ஏற்படுகிறது. இதை அவர் உணர்ந்து கொள்ள முடியாது. காரணம் தனிமையில் அவர் இருக்கும் பொழுது அவருடைய மனது சிந்திக்கும் திறனை இழந்திருக்கும். தனிமையில் இருக்கும் பொழுது தன்னருகில் யாரோ இருக்கிறார்கள், பேய்கள் இருக்கிறது, அமானுஷ்ய சக்திகள் தன் அருகில் இருக்கிறது, எதிர்மறை ஆற்றல்கள் தன்னை சுற்றி இருக்கிறது.

இப்படி எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டே செல்வார் அவரை அறியாமல். இது தொடர்ந்து அவரை எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லாமல் ஒருவித மன குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இப்படிப்பட்ட நபருக்கு எந்த நேரத்தில் தூங்கினாலும் பேய்கள் பற்றிய கனவுகள், அமானுஷ்ய சக்திகள் பற்றிய கனவுகள், தன்னை யாரோ தொடர்ந்து விரட்டுகிறார்கள் போன்ற கனவுகள் வந்து கொண்டிருக்கும்.

இவர்கள் பேய்களைப் பற்றிய கனவுகளை காணும் பொழுது பேய்களிடம் இருந்து ஓடித் தப்பித்துக் கொள்ள நினைப்பார்கள். ஆனால் இவர்களால் சரியாக நடக்க கூட முடியாது போல உணர்வார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் ஏன் என்னால் ஓடி இவர்களிடம் இருந்து தப்பித்து விட முடியவில்லை என யோசிப்பார்கள். இப்படி இவர்கள் பேய்கள் பற்றிய கனவுகளை கண்டு தப்பித்து ஓடுவது போல நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது தூக்கத்திலிருந்து விழித்து விடுவார்கள்.

தூக்கம் கலைந்து எழுந்த உடன் அந்த கனவு இவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். ஏன் என்னால் சரியாக நடக்க முடியவில்லை. ஏன் என்னால் ஓடித் தப்பிக்க முடியவில்லை. நான் எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் ஓடி அந்த சக்திகளிடம் இருந்து தப்பித்து வெளிவர மிகவும் கடினமாக இருந்தது என யோசித்துக் கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் உண்மையில் அவர்கள் மனதளவில் என்னால் எதுவும் சரியாக செய்யமுடியவில்லை.

நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருப்பதால். எப்பொழுதும் அவர்களுடைய மனம் இதை என்னால் செய்ய முடியாது இது நம்மால் முடியாது எனவே நினைத்துக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளால் நீங்கள் மாட்டிக்கொண்டிருந்தால் இதை நீங்கள் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். இதற்கு எதிர்மறை எண்ணங்களை உணர்ச்சிகளை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் அளவிற்கு உங்களை வலிமை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இதற்கு முதலில் நீங்கள் முடிந்தவரைக்கும் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுதும் எதிர்மறை எண்ணங்கள், பேய்கள் பற்றிய பயங்கள் இதையெல்லாம் விட்டொழிக்க வேண்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றவே கூடாது. எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகள் உங்களுடைய மனதில் எழ வேண்டும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய புத்தகங்களை தொடர்ந்து படிக்க வேண்டும்.

மனதளவில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்னால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஒரு நம்பிக்கை வரவேண்டும். தொடர்ந்து இது உங்களுடைய மனதில் எழ வேண்டும். உங்கள் மனதளவில் எப்பொழுதும் நான் வெற்றி பெறுவேன். என்னுடைய வெற்றி என் அருகிலேயே இருக்கிறது என தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.

உங்களுடைய மனதை எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்களுடைய கண்களால் காணாத பேய்கள், அமானுஷ்ய சக்திகள் இல்லை என்பதை முதலில் உங்களுடைய மனதிற்கு உணர்த்துங்கள். அமானுஷ்ய சக்திகளையும், பேய்களையும் உங்களுடைய மனது பலூன் போல ஊதி பெரிதாக்குகிறது. உண்மையில் நீங்கள் நேரடியாக எந்த அமானுஷ்ய சக்திகளையும் பேய்களையும் அனுபவித்திருக்க மாட்டீர்கள்.

எல்லாம் உங்களுடைய மனதில் நீங்களாகவே நினைக்கும் எண்ணங்கள். தனிமையில் இருக்கும்பொழுது நீங்கள் காணும் பகல் கனவுகள். இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களுடைய மனதில் தோன்றும் போது உடனடியாக தனிமையில் இருப்பதிலிருந்து தவிர்த்து யாருடனாவது பேச முயற்சி செய்யுங்கள். பேய்கள் எதிர்மறை எண்ணங்களை பற்றி பேசுபவர்களிடம் இருந்து விடுபடுங்கள்.

அவர்களுடன் பேசி தொடர்ந்து உங்களுடைய மனதை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள். ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் சாக்கடையின் அருகில் புதிதாக நாம் செல்லும் பொழுது மட்டுமே அதனுடைய வாடை நமக்கு அதிகம் தெரியும். தொடர்ந்து சாக்கடையின் அருகில் நாம் இருக்கும் பொழுது அதனுடைய கெட்ட வாசனை நமக்கு பெரிதாக தெரியாது. இதை எதற்கு சொல்கிறோம் என்றால் எதிர்மறையாக பேசும் ஒருவரிடம் நீங்கள் முதலில் பேசும் பொழுது அவர் ஏதோ தவறாக பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களோடு ஒருவர் பேசும் பொழுது அவர் எதிர்மறை எண்ணங்களோடு தான் பேசுகிறார் என்பதை தாண்டி அவருடைய அந்த வார்த்தை ஜாலங்கள் நமக்கு உண்மை என ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். ஆகையால் பேய் உங்களை தாக்குவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களுடைய சூழ்நிலையை ஆராய்ந்து அதை சுயபரிசோதனை செய்து உங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக பல வெற்றிப் படிகளை தாண்டி செல்ல எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை உங்களுடைய மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக பேய் என்ற எதிர்மறை சக்தியை கூட உங்களுடைய ஆழ்மனது உங்களிடம் இருந்து எடுத்துப் போட பல முயற்சிகளை செய்கிறது. அந்த நேரங்களில் இந்த கனவுகளின் மூலம் உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இருக்கும். அதை ஆராய்ந்து பாருங்கள். எப்பொழுதும் ஆழ்மனது உங்களுடைய பிரச்சனைகளை சரிசெய்யும் மிகச்சிறந்த ஒரு ஆசான். கொஞ்சம் செவிமடுத்து உங்களுடைய ஆழ்மனது உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மிகப்பெரிய சாதனையை செய்யலாம்.

ஆகையால் இனி உங்களை இப்படி பயமுறுத்தும் பேய் போன்ற கனவுகள் உங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றுவதற்காகவே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். நமக்கு தூக்கத்தில் கனவுகள் வருவது சிறந்தது தான். நமக்கு பல நல்ல முடிவுகள் கிடைக்கும். நம்மை சுற்றி இருக்கக் கூடிய பல பிரச்சனைகளுக்கு அது தீர்வைத் தரும். ஆகையால் கனவு அது நல்ல கனவாக இருந்தாலும் சரி கெட்ட கனவாக இருந்தாலும் சரி அது நம்மை செம்மைப் படுத்தவே. அடுத்த நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லவே. இரவில் சந்தோசமாக தூங்குவோம். பல நல்ல கனவுகள் காண்போம். கனவுகளில் சந்தோஷமாக இருப்போம்.

Related posts

Leave a Comment