August 18, 2022
அறிந்திராத உண்மைகள் தகவல்

இந்தியாவின் தேசிய நீர்விலங்கு என்னவென்று உங்களுக்கு தெரியுமா ? சுவாரசியமான தகவல்கள்…!

இந்தியாவின் தேசிய நீர்விலங்கு டால்பின்(Dolphin)ஆகும். டால்பின் என்றால் நீங்கள் நினைப்பதுபோல் கடலில் வாழும் டால்பின்கள் அல்ல.

டால்பின்களில் பல இனங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில இனங்கள் மட்டுமே ஆற்றுநீரில் அதாவது நன்னீரில் வாழ்கின்றன.அந்தவகையில் இந்தியாவின் கங்கை நதியில் டால்பின்கள் வாழ்கின்றன. இதனை கங்கை டால்பின்கள்(Gangetic Dolphin)என்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் “பிளாடானிஸ்டா கேன்ஜிட்டிக்கா”(Platanista gangetica)என்பதாகும்.

கங்கை டால்பினை தான் இந்தியாவின் தேசிய நீர்விலங்காக(National Aquatic Animal) 2009 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இந்த கங்கை டால்பின் சுத்தமான மற்றும் நன்னீரில் வாழக்கூடிய டால்பின் ஆகும்.

கடல் டால்பின்களை தமிழில் “ஓங்கில்” என்கின்றனர். இது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இதில் சுமார் நாற்பது இனங்கள் உள்ளன. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது.அ தன் நுனி கூர்மையாய்,விளிம்பில் சுழியுடையதாக இருக்கிறது. டால்பின்கள் 1.2 மீட்டர் நீளம்முதல் 9.5 மீட்டர்வரை உள்ளன. இவற்றின் எடை நாற்பது கிலோமுதல் பத்து டன் வரை உள்ளன. இவைகள் மீன்களை உணவாக உண்கின்றன. அனைத்து டால்பின் இனங்களும் அசைவ உணவைத்தான் சாப்பிடும். இவை உலகம் முழுவதும் ஆழம் குறைவான கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இதன் சராசரி வயது இருப்பது ஆண்டுகள்.

நன்னீரில் வாழும் டால்பின்கள் சுவாசிக்கும்போது ஒருவித ஓசை வெளிப்படுகிறது. இதன் ஒலியைக்கொண்டு உள்ளூர் மக்கள் இதனை “சூசு”(Susu) என அழைக்கின்றனர். சிந்து நதியில் வாழும் டால்பினை “புலான்” என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை நதியில் வாழும் டால்பின்கள் கடலில் வாழும் டால்பின்களைவிட உருவம், அளவு, குணம் போன்ற பண்புகளில் முழுவதும் மாறுபட்டு உள்ளன.

கங்கை டால்பின்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. கங்கையில் சுமார் அறுநூறு, பிரமபுத்திரா நதியில் சுமார் நானூறு என்கிற எண்ணிக்கையில் மட்டுமே இந்த டால்பின்கள் உள்ளன.

இவைகளுக்கு பார்வைக் குறைபாடு உள்ளதால் எதன் மீதோ மோதி இறக்கின்றன. மனிதர்கள் பயன்படுத்தும் படகுகள், மீன் வலைகளில் தெரியாமல் மாட்டிக் கொண்டு உயிர் இழக்கின்றன. அதுதவிர நீர்மாசு அடைதல், பாலம் கட்டுதல், அணை கட்டுதல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற காரணங்களாலும் இந்த நன்னீர் டால்பின்கள் இறக்கின்றன.

இந்தியாவில் சிந்து, கங்கை, பிரமபுத்திரா ஆகிய நதிகளில் டால்பின்கள் வாழ்கின்றன. இந்தியா தவிர கங்கை நதி டால்பின்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நதிகளில் வாழ்கின்றன.

கங்கை டால்பின்கள் நீண்ட மூக்கோடு பெரிய தலையைக்கொண்டுள்ளன.இது எட்டு அடி நீளம்வரை இருக்கும். இவை சுமார் நூறு கிலோ எடையைக் கொண்டிருக்கும். இவற்றின் மேல் மற்றும் கீழ் தாடையில் 28 கூரிய பற்கள் உண்டு. இவை பாலூட்டி இனம் என்பதால் மனிதனைப்போல் நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன. சுவாசிப்பதற்காக முப்பது முதல் ஐம்பது நொடிகளுக்கு ஒரு முறை நீரின் மேல் மட்டத்திற்கு வந்து செல்லும்.

இந்த டால்பினின் கர்ப்பகாலம் ஒன்பது மாதங்கள். புதியதாக பிறக்கும் குட்டியானது சுமார் அறுபத்தைந்து செ.மீ நீளம்வரை இருக்கும். குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலைக் குடிக்கும். சற்று வளர்ந்த பிறகு சிறு மீன்கள், இறால் போன்றவற்றை உண்ணும். இந்தவகை டால்ஃபின்கள் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள்வரை உயிர் வாழும்.

கங்கை டால்பின் வேகமாக அழிந்து வரும் இனமாக உள்ளது. இதனை பிரிவு ஒன்று என்ற பட்டியலில் பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972(Wildlife PProtection Act)இன்படி இதன் மாமிசத்தை உண்ணவோ, வேட்டையாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டால்பின்களின் மீன் எண்ணைக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. இதனைக் கொல்பவர்கள்மீது கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்றுமுதல் ஆறு ஆண்டுகள்வரை தண்டனை வழங்கப்படுகிறது.இருப்பினும் திருட்டுத்தனமாக வேட்டை நடக்கிறது.

கங்கை டால்பின்கள் வேகமாக அழிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என பீகார் முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு டால்பின்களை பாதுகாக்க அதனை தேசிய நீர்விலங்காக 2009 ஆம் ஆண்டில் அறிவித்தது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீதி இருக்கும் டால்ஃபின்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

Related posts

Leave a Comment