June 11, 2023
உடல்நலம் தகவல்

நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் பாதாம் பருப்பை சாப்பிட தகுந்த நேரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு…! ?

நம் உடலில் தேவை இல்லாத கெட்ட கொழுப்புகள் சேர்வதால் தான் உடல் எடை கூடுவது மட்டுமல்லாமல், பல விதமான ஆபத்தான நோய்களும் எளிதில் தொற்றிக் கொள்கிறது. ஆனால், அதுவே நல்ல கொழுப்புகள் நம் உடலில் சேர்ந்தால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

பாதாம் பருப்பில் நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்திருக்கிறது. இதனை தினந்தோறும் எடுத்துக் கொள்வது பல வகையான ஆரோக்கிய நன்மைகளை நம் உடலுக்கு அள்ளிக் கொடுக்கிறது.

பாதாம்பருப்பை, அப்படியே நாம் உட்கொண்டால், பாதாமின் மேல்தோலிலுள்ள “பைட்டிக் அமிலம்” உள்ளிட்ட சில நுண்பொருட்கள், இரைப்பைக் கோளாறுகள், சத்துக்களை உடல் ஈர்ப்பதில் சிக்கல் உள்ளிட்ட செரிமானச்சிக்கல்களை ஏற்படுத்திவிடும். அதே நேரம் நீரில் பாதாம்பருப்பை நாம் ஊறவைத்து உண்ணும்போது இந்த சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

தினந்தோறும் இருபது முதல் இருபத்தைந்து பாதாம் வரையில் நாம் எடுத்துக் கொள்ளலாம். இரவு முழுவதும் பாதாமை ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் சாப்பிடலாம். மிகவும் குறைந்த கலோரியில் அதிகளவில் ஊட்டச் சத்துக்களும், பசியை கட்டுப்படுத்தும் நார்ச் சத்துக்களும் அதிகமாக கிடைக்கிறது. ஆகையால், ஏற்கனவே உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகள், ஆற்றலாக மாற்றப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக மிக வேகமாக நம்முடைய உடல் எடையை குறைக்க முடியும்.

உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் தன்மை, நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பிற்கே அதிகமாக உள்ளது.

பாதாம்பருப்பை, நீரில் ஊறவிடும்போது, “லிபேஸ்” என்ற ஒருவகை நொதி, அதில் உருவாகிறது. இந்த லிபேஸ் நொதி, நமதுடலில், செரிமானத்திறனை மேம்படுத்துகிறது.

நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பை உட்கொள்ளும்போது, “ஆல்பா டோகோபெரால்” என்ற ஒருவகை நுண்சத்து, நமது இரத்தத்தில் உருவாகிறது. இது, இரத்த அழுத்தத்தைச் சீரானநிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பை உட்கொள்வதால், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

கற்பிணிப் பெண்களுக்கு கருவளர்ச்சிக்கு ஃபோலிக்சத்து அவசியம் தேவை. நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பில், அதிகஅளவு ஃபோலிக்சத்து கிடைக்கிறது.

நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பில் உருவாகும் ஆன்டிஆக்ஸிடென்ட்களால், இளமையிலேயே முதுமையான தோற்றம் வருவது தடுக்கப்படுகிறது.

நீரில் ஊறவைத்து பாதாம்பருப்பை உட்கொள்ளும்போது, வாயுத்தொல்லை உருவாவது தவிர்க்கப்படுகிறது.

பாதாம்பருப்பை, நீரில் ஊறவைத்து உண்பதால், செரிமானமண்டலம் சுத்தமாக்கப்பட்டு, புதுப்பொலிவும், புத்துணர்வும் அடைகின்றது.

பாதாம் பருப்பை பொடி செய்து, தினந்தோறும் ஓட்ஸ் போன்ற கஞ்சிகள் அல்லது நீங்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி மற்றும் ரொட்டி ஆகியவற்றை செய்யும் போது, அந்த மாவுடன் பாதாம் பொடியையும் சேர்த்து கலந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

பாதாம் பருப்பை ஊற வைத்து, பிறகு அரைத்து பால் எடுக்க வேண்டும். இதனை அப்படியே குடிக்கவோ அல்லது ஸ்மூத்திகள் செய்யும் போதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

பாதாம் சாப்பிட தகுந்த நேரம்:

முதல் நாள் இரவு அன்று பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து, நடுவில் லேசாக பசியெடுக்கும். அந்த நேரத்தில் பாதாம் சாப்பிடுவதே மிகவும் சரியான நேரம் ஆகும்.

Related posts

Leave a Comment