January 31, 2023
செல்வம்

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க யானை உருவத்தை உங்கள் வீட்டில் இப்படி வைத்து பாருங்கள்

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சுய் படி யானை சிலைகளை நீங்கள் உங்களுடைய வீட்டில் அலங்காரப் பொருளாக வைக்கும்பொழுது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க ஒரு சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். யானையின் உருவம் இந்து புராணங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பெரும்பாலும் வீடுகளில் அலங்காரம் செய்ய இந்த யானை உருவங்கள் பயன்படுத்தப்படுகிறது.

உங்களுடைய வீடுகளில் வைக்கக்கூடிய யானையின் உருவம் அதிக அளவு சக்தியையும், ஒருமைப்பாட்டையும், ஞானத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், வலிமையையும் குறிக்கிறது. விநாயகர் யானை தலை உடைய கடவுள். அவருடைய பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். அவரை வேண்டுபவர்களுக்கு எல்லா தடைகளையும் நீக்குபவர். லட்சுமி தேவி மற்றும் இந்திரனின் வாகனமான யானை தெய்வீக அறிவையும், நல்ல சக்தியையும் குறிக்கிறது.

ஃபெங் சுய் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி யானை உருவம் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகம் கொண்டு வர மக்கள் பெரும்பாலும் யானைகளின் சிலைகளை, ஓவியங்களை வீடுகளில் வைக்கிறார்கள். வாஸ்து மற்றும் ஃபெங் சுய் சாஸ்திரத்தின் படி யானை சம்பந்தப்பட்ட காட்சிப் பொருட்களை வீடு அல்லது அலுவலகத்தின் முன் கதவு அல்லது பிரதான வாசல் அருகில் வைக்க வேண்டும்.

நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் வகையில் யானை சிலையை வடக்கு திசையை நோக்கி வைப்பதே சிறந்த முறை. யானைகள் நம்மை காக்கும் பாதுகாவலர்களாக கருதப்படுவதால் யானை சிலைகளை உங்களுடைய வீட்டு முன் வாசலில் வைப்பது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. கஜலட்சுமி யானையை வீட்டின் முன்வாசல் அல்லது வடகிழக்கு மூலையில் வைக்கலாம்.

உங்களுடைய வீட்டை தீய சக்திகளிடமிருந்து எதிர்மறை ஆற்றலில் இருந்து பாதுகாக்க விரும்பினால் யானையை வெளிப்புறமாக வைக்கலாம். வாஸ்துபடி கணவன் மனைவிக்கிடையே நல்ல உறவை வலுப்படுத்த படுக்கை அறையில் யானைகளில் ஓவியத்தை தொங்கவிடலாம். இப்படி நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் வைக்கும் பொழுது ஒரு ஜோடி யானைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு யானையை மட்டும் வைக்கக்கூடாது. இதை சிலையாகவோ, ஓவியமாகவோ, குஷன் கவர் வடிவத்திலோ படுக்கையறையில் வைக்கலாம். யானை ஓவியங்களை படிக்கும் அறை அல்லது அலுவலகத்தில் தொங்கவிடுவதும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. உங்கள் குழந்தைகளின் அறையில் யானைகளை தொங்கவிட விரும்பினால் பெரிய யானையும் குட்டி யானையும் இருக்கும் படம் மற்றும் சிலைகளை தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும்.

இது உங்கள் குழந்தைகளுடைய அறிவை வலுப்படுத்த அவர்களுடைய கவனத்தை மேம்படுத்த உதவி செய்யும். வால்பேப்பர் பொம்மைகள் வடிவில் இந்த உருவத்தை வைக்கலாம். தாய் யானை மற்றும் அதன் குட்டியின் படத்தை பெற்றோரின் படுக்கையறை அல்லது குழந்தையின் படுக்கையறையில் வைப்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துகிறது.

வாஸ்து படி பித்தளை யானைகளின் சிலைகள் படுக்கையறையில் வைப்பதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது தம்பதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்குகிறது.

தொழில் விஷயமாக நீங்கள் பிறரை சந்திப்பதற்கு தனியாக அறை வைத்திருந்தால் அந்த அறையில் பித்தளை யானைகளை வைப்பது அமைதியையும், செழிப்பையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

வெள்ளி யானையை நீங்கள் உங்களுடைய வீட்டில் வைக்கும் பொழுது அது மிகப் பெரிய அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கிறது. வெள்ளி யானை உருவத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும்.

நீங்கள் உங்களுடைய வீட்டில் சிறியதாக அலுவலகம் போன்று அமைத்திருந்தால் அந்த அறையின் கதவு அருகில் அல்லது நுழையும் இடத்திற்கு அருகில் யானை சிலையை வைக்கலாம்.
கதவுக்கு அருகில் யானை சிலை அல்லது ஓவியத்தை வைப்பது நேர்மறையான ஆற்றல் உங்களுடைய அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை தடுக்கும்.

உங்களுடைய அலுவலக மேஜையில் யானை சிலையை வைப்பது உங்கள் கவனத்தை அதிகரிக்கும். வேலைகளால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை சமாளிக்க உதவும்.

ஏழு யானைகளை ஒரே வரிசையில் நீங்கள் வைத்தால் அது உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மரணத்தை வெல்வதை இந்த யானை வரிசை குறிக்கிறது. மேலும் இந்த ஏழு யானைகளை நீங்கள் வரிசையாக வைக்கும்பொழுது அது நல்ல மகிழ்ச்சியையும், ஞானத்தையும், பிறர் உங்களை வெல்ல முடியாத சக்தியையும், நீண்ட ஆயுளையும், புத்திசாலித்தனத்தையும் கொடுக்கிறது.

யாரை உருவங்களை நீங்கள் உங்களுடைய குளியலறை, சமையல் அறையில் வைக்கக் கூடாது. போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் யானை உருவம், வன்முறையாக சித்தரிக்கப்பட்டிருக்கும் யானை உருவம் போன்ற யானை உருவங்கள் மற்றும் படங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். அமைதியாக சாந்தமாக இருக்கக்கூடிய யானை உருவங்களை வைக்க வேண்டும்.

ஒற்றை யானை சிலையை வீட்டில் வைக்கலாமா என பலருக்கும் கேள்வி எழும். வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒற்றை யானை சிலையை உங்களுடைய வீட்டில் வைக்கலாம். உதாரணமாக உங்களுடைய வீடு அல்லது அலுவலகத்தின் நுழைவாயிலில் இந்த ஒற்றை யானை உருவத்தை வைப்பது அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் உங்களுடைய வீட்டிற்குள் அதிகமாக கொண்டு வரும்.

உங்களுடைய தொழிலில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் உங்களுடைய பணி இடத்தில் ஒரு யானை உருவத்தை வைக்கலாம்.

உங்களுடைய தலைமைப் பண்புகளை மேம்படுத்தவும், செயல் திறனை அதிகரிக்கவும், அழுத்தங்கள் உங்களை தொந்தரவு செய்யாமல் பணியை திறம்பட செய்யவும் நாள் குறிப்பு மற்றும் எழுது பொருள்களில் யானையின் படத்தை வைத்திருக்கலாம்.

அலுவலகங்களில் யானை சிலையை வைப்பதற்கு ஏற்ற திசை வடக்கு திசை. வடக்கு திசை செல்வத்தின் அதிபதியான குபேரனால் ஆளப்படுவதால் தொழிலில் முன்னேற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திசையில் யானை உருவத்தை வைக்கலாம். இது செல்வம் மற்றும் தொழிலின் திசை.

குழந்தைப் பேறுக்காக ஆசைப்படும் தம்பதிகள் உங்களுடைய படுக்கை அறைக்குள் கதவு திறக்கும் இரு பக்கமும் ஒரு ஜோடி யானைகளை வைக்கவேண்டும். இந்த யானைகள் உங்களுடைய படுக்கையறையை பார்த்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வாஸ்துப்படி யானை சிலையை நீங்கள் உங்களுடைய வீட்டில் வைக்கும் பொழுது யானையின் தும்பிக்கை கீழே இருக்கும் யானையை தேர்வு செய்து வைக்க வேண்டும். தும்பிக்கை கீழே இருக்கும் யானை ஆற்றலை சேமித்து வைக்கும், பல்வேறு தடைகளை தாண்டி செல்லும் என நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட யானை உருவங்கள் உங்களுடைய வீட்டில் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை அழைத்து வருகிறது. அதுபோல வெள்ளை யானைகள் மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. வெள்ளை யானை அதிக செல்வத்தையும் ஆடம்பரத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது.

சிவப்பு நிற யானை புகழ் மற்றும் அங்கீகாரத்தை உங்களுக்கு கொடுக்கிறது. கருப்பு நிற யானை செழிப்பையும் வெற்றியையும் அதிக அளவில் கொடுக்கிறது. பச்சை நிற யானை நல்ல அதிர்ஷ்டத்தையும் சக்தியையும் உங்களுக்கு கொடுக்கிறது.

ஒரு நாணயத்தின் மீது நிற்கும் யானை அதிக சக்தியையும், ஞானத்தையும், செல்வத்தையும், உங்களுடைய வீட்டின் பாதுகாப்பையும் அதிகப்படுத்துகிறது.

Related posts

Leave a Comment