January 31, 2023
தகவல்

அகழாய்வில் கிடைத்துள்ள பல ஆண்டுகள் பழமையான பொருள்கள்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி மாதம் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது.

ஊரடங்கு காரணமாக பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு மீண்டும் பணி ஆரம்பித்து கடுமையான மழை காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மீண்டும் அகழாய்வுப் பணி தொடக்கி அது நடைபெறும் குழிகளில் இருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும், மணலூரில் உலை போன்ற அமைப்பும், கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித எலும்புகளும், அகரத்தில் கி.பி- 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன.

இந்த நாணயம் 1 சென்டி மீட்டர் அளவீடு கொண்டது. 300 மில்லி கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் கீழடி ஆறாம் கட்ட தொல்லியல் ஆய்வில் நான்கு இடங்களிலும் முக்கியமான தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் பழைமையான ஈமக்காட்டில் தற்போது முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள் கிடைத்துள்ளன.

தொல்லியல் ஆர்வலர்:

இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் கூறுகையில், பண்டைய காலத்தில் இறந்தவர்களை இரண்டு முறையில் அடக்கம் செய்துள்ளனர்.

உடல் தசை சிதைந்த பின் தாழிகளில் வைப்பது அல்லது நோயுற்ற நிலையில் இருந்தால் அப்படியே தாழிகளில் வைத்து புதைப்பது போன்ற முறைகளை பின்பற்றி உள்ளனர்.

மேலும் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

தற்போது உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது. இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது.

மேலும் சிறு வயதில் குழந்தை இறந்ததென்றால் நோய் ஏற்பட்டு இறந்திருக்கத்தான் அதிக வாய்ப்பு. அதனால், எலும்புகளை எடுத்து தாழிக்குள் வைக்காமல் உடலோடு வைத்திருக்கலாம்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள குழந்தையின் எலும்பு குறித்து தொல்லியல் ஆர்வலர்களின் முழுமையான ஆய்விற்குப் பின்னர்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

Related posts

Leave a Comment