November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

நம்மை பிரமிக்க வைக்கும் சீனாவின் 5 கண்ணாடி பாலங்கள்!

சீனா என்றாலே புதுமைக்கு பெயர் பெற்றது. எதை செய்தாலும் அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். சீனாவில் மலைப்பாதைகளுக்கு இடையே அந்தரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பாலங்கள் மிகவும் பிரபலமானவை. வானுயர்ந்த கண்ணாடி பாலத்தில் நின்று கீழே பார்த்தால் அந்தரங்கத்தில் தொங்கி கொண்டிருப்பது போன்ற திகில் அனுபவத்தை இந்த பாலங்களில் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட 5 கண்ணாடி பாலங்களை(glass bridges) குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. ஜாங்ஜியாஜி கிளாஸ் பிரிட்ஜ் (Zhangjiajie Glass Bridge)

ஜாங்ஜியாஜி கிராண்ட் கேன்யன் ஸ்கைவாக், உலகின் மிக நீளமான மற்றும் மிக உயர்ந்த கண்ணாடி பாலமாகும். இது 2016ம் ஆண்டில் ஜான்ஜாயிஜி என்ற மலைப்பகுதியில் 430 மீட்டர் நீளமும் (1,411 அடி) 6 மீட்டர் அகலமும் (20 அடி), 300 மீட்டர் (984 அடி) உயரமுடன் முதன்முதலாக சீனா கட்டிய கண்ணாடி பாலத்தில் ஒன்றாக உள்ளது. இரண்டு மலைகளுக்கு நடுவில் கட்டப்பட்ட இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்வது என்பது அதீத திகிலூட்டும் அனுபவமாக இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால், மேகங்களுக்கும் மூடுபனிக்கும் இடையில் மிதக்கும் வெள்ளை துணி போல் தெரிகிறது .

எனவே இது யுண்டியாண்டு என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது “ எ வே ஆப் கிளவுட்ஸ் டு தி ஸ்கை “. குறிப்பாக உயரமான பகுதிகளை கண்டு அஞ்சுபவர்களுக்கு இதில் நடப்பதே பெரிய சவால் தான். அவ்வளவு தைரியம் உடையவர்களாக இருந்தால், கிராண்ட் கேன்யனின் அழகான காட்சிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் பாலத்தின் அடிப்பகுதி வெளிப்படையான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலத்தின் நடுவில், ஒரு பங்கீ மேடை உள்ளது. இது தரையில் இருந்து சுமார் 270 மீட்டரில் (886 அடி) உள்ளது.

2. கிளாஸ் சர்குலார் பிரிட்ஜ் (glass circular bridge, Henan)

சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் விதமாக சீனாவில் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம் ஹெனான் மாகாணத்தில் ஃபுக்ஸி(FUXI) மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. 1181 அடி உயரத்தில் 3 ஆயிரம் டன்கள் இரும்பு கம்பிகளால், உடையாத கண்ணாடிகளை கொண்டு பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் 360 டிகிரி சுற்றளவில் ஃப்யூஸி மலையின் ஓரத்திலிருந்து 30 அடி தூரம் வரை கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் கண்ணாடியிலான இந்த பாலம், குதிரையின் கால் தடம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ’ஸ்கைவாக்’ என்று குறிப்பிடப்படும் இந்த கண்ணாடி பாலம், உலக அதிசியங்களில் ஒன்றான அமெரிக்காவின் ’கொலரடோ கிராண்டு கேன்யோன்’ கண்ணாடி பாலத்தை விட கூடுதலாக 7 மீட்டர் நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3. தியான்மென் மௌண்டைன் கிளாஸ் ஸ்கை வாக், ஜாங்ஜியாஜி (Tianmen Mountain Glass Skywalk in Zhangjiajie)

இந்த பாலம் தியான்மென் மலையின் தேசிய பூங்காவில் உள்ள இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஹுனான் மாநிலத்தில் ஜான்ஜாஜி பள்ளத்தாக்கிற்கு மேல், சுமார் 300 அடி உயரத்தில், 430 நீளத்தில் உள்ளது. பார்வையாளர்கள் பள்ளத்தை 99 மூன்றடுக்கு கண்ணாடி பேனல்கள் வழியாக பார்க்கலாம். ஒரு வண்டி செல்லும் அளவிற்கு பலமானதாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளில் 8 ஆயிரம் பேர் இந்த பாலம் வழியாக சென்று வரலாம். இந்த கண்ணாடிப் பாலம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதால் ஒரு நாளைக்கு 8,000 க்கும் அதிகமானோர் பார்வையிட வந்துள்ளனர். அதன் காரணமாக திறந்த சில தினங்களிலேயே மூடப்பட்டுள்ளது.

4. ஸ்கை வாக் கிளாஸ் பிரிட்ஜ் (Skywalk Glass Bridge , Chongqing)

தென்மேற்கு சீனாவின் முக்கிய நகரமான சோங்கிங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வான்ஷெங் ஆர்டோவிசியன் தீம் பார்க் , உலகின் மிகப் பெரிய சுற்றுலா தளங்களை கொண்டுள்ளது. இதில் சீனாவில் பிரமிக்கும் வகையில் 400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் 70 மீட்டர் நீள கண்ணாடி பாலம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழந்தைகளை கவரும் வண்ணம் 1,000 அடி உயரமான குன்றின் விளிம்பில் ஒரு ஊஞ்சலும் உள்ளது. இந்தப் பாலம் தென்மேற்கு சோங்குயிங் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இது பார்பவர்களுக்கு த்ரில் கொடுக்கும் வண்ணம் வி வடிவில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாலம் இங்கு வரும் பயணிகளை பயமுறுத்தி ஒரு திரில் அனுபவத்தை கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகளும் கூறுகின்றனர். மிகவும் சவாலான பயணமாக இருக்கும் இந்த கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே 30 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. ஆர்டோவிசியன் பார்க்கில் அமைந்திருக்கும் இந்தப் பாலத்தின் அமைப்பு கடினமான அடர்த்தியான கேபிள்களால் ஆனது. இந்த மாதிரியான ஒரு பாலம் உலகிலேயே இங்குதான் அமைந்துள்ளது.

5. தியான்யுன் மௌண்டைன் கிளாஸ் பிரிட்ஜ் , பெய்ஜிங்( Tianyun Mountain Glass Bridge near Beijing)

தியான்யுன் மவுண்டன் கிளாஸ் பாலம் 200 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் 1,149 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த பாலம் மலையிலிருந்து இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அற்புதமான நிலப்பரப்பு, அழகிய காட்சியமைப்புகள், செங்குத்தான பாறைகள், அற்புதமான சிகரங்கள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் என வித்தியாசமாக உள்ளது.

Related posts

Leave a Comment