November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

நிலத்தில் ஆபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் காவல் மரங்கள் !

கடல் அலைகள் நிலத்தில் வராமலும், கடல் நீர் கரையில் உள்ள மண்ணை அரித்து ஆக்கிரமித்து விடாமல் நிலத்தைக் காத்து மண் அரிப்பைத் தடுக்கும் காட்டில் இருக்கும் ஒருவகை மரங்களை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  கடல் நீர் நிலத்துடன் சேரும் இடங்களில் குறைந்த அளவு நீர் நிரம்பிய சேற்றுப்பாங்கான மண் பரப்பு கடல் நீரை உள்ளே வராமல் அங்கு வளர்ந்திருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் வேர்கள், கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுக்கும். இப்படிப்பட்ட நில அமைப்பை மாங்குரோவ் காடுகள் என்று அழைக்கின்றனர்.

மாங்குரோவ் காடுகள்

கடல் அலைகள் நிலத்தில் வராமலும், கடல் நீர் கரையில் உள்ள மண்ணை அரித்து ஆக்கிரமித்து விடாமல் நிலத்தைக் காப்பதில், மண் அரிப்பைத் தடுப்பதில், முக்கிய பங்கு வகிப்பது அலையாத்திக்காடுகளில் இருக்கும் மரங்கள். இந்த மரங்கள் தாங்கள் வளரும் நிலப்பரப்பைக் கடல் ஆக்கிரமித்து விடாமல் இன்றுவரை பாதுகாத்து வருகின்றன.

இந்த மரங்களை பார்ப்பதற்க்கு கடல் நீரிலே வளர்வது போலத் தோன்றினாலும் காடுகளில் உள்ள நல்ல நீரில் மட்டுமே வளரும் தன்மை கொண்டவை. இந்த மரத்தின் அடிப்பரப்பு நிலத்தில் இருந்தாலும் வேர்ப்பகுதிகள் படர்ந்து மண்ணின் மேலே காணப்படும். விதவிதமான மரங்கள் குறைந்த வளம் கொண்ட இந்த மண்ணில் நன்கு வளர்கின்றன. உலகின் பல இடங்களில் இதுபோன்ற காடுகள் இருந்தாலும் இந்தியாவில் உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக்காடுகளாக சிதம்பரம் நகரை அடுத்த பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் திகழ்கின்றன.

அலையாத்திக்காடுகள் கடல் அலைகளிலிருந்து மட்டுமல்லாமல் கடல் கோள் எனப்படும் பனை மர உயரத்திற்கு மேல் எழும்பும் பேரலைகளின் சீற்றத்தில் இருந்து கடலோர கிராமங்கள் அழிந்துவிடாமல் எத்தனை வேகத்தில் அலைகள் வந்தாலும் சமாளித்து அவற்றின் வேகத்தைக் குறைத்து சிறந்த எல்லை பாதுகாவலனாகத் திகழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தக் காடுகளில் உள்ள மரங்கள் மணிக்கு நூற்றைம்பது கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் அந்த இடம் அழியாமல் எதிர்த்து நிற்கும் ஆற்றல் மிக்கவை.

இந்தக் காடுகளில் நூற்றுக்கணக்கான வகைகளில் மரங்கள் இருந்தாலும் சில மரங்கள் அதிகநாள் வளர்ந்து பயன்தரும் இயல்புடையவை. அதில் சில மரங்களான தில்லை மரம், சுரபுன்னை மரங்கள் உட்பட பல மரங்கள், இந்த நீர்நிலைகளில் வாழும் தன்மை உடையவை. கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் தோன்றிய சுனாமியால் பல இடங்களில் அழிவு ஏற்பட்டது நாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்தப் பேரலைகள் மாங்குரோவ் காடுகளில் இருந்த தில்லை மரம் எனும் ஆச்சா மரங்கள், சுரபுன்னை உள்ளிட்ட பல வகையான மரங்கள் கொடிய பேரலையாக நூறு கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் வந்த அந்த சுனாமியை உள்நுழைய விடாமல் தடுத்தது. இதன்பின்னர் அரசாங்கமும் அலையாத்திக் காடுகளின் தனித்தன்மையை உணர்ந்து சுனாமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இந்த மரங்களை வளர்க்க ஆரம்பித்தது. தற்போது சென்னை நகரில் இருந்து ஆரம்பித்து, தமிழகக் கடற் கரையோரம் அலையாத்திக் காடுகளை பரவலாக வளர்த்து வருகிறார்கள்.

அலையாத்திக் காடுகளின் பயன்கள்

இந்தக் காடுகளில் உள்ள மரங்கள் தங்கள் வேர்கள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் காற்றை உறிஞ்சி காற்றில் உள்ள கார்பனை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை அதிகம் வெளிவிடுகின்றன. இதன் மூலம் மக்களுக்கு தடையில்லாமல் பிராண வாயு கிடைத்து நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமுடன் வாழ்கின்றனர்.

மேலும் இந்த காடுகளில் இருக்கும் நீர்வளமும், பசுமை அமைப்பும் இந்தப் பகுதிகளில் சில வகை மீன்கள் தங்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க உதவுகின்றன. கடல் வாழ் உயிரினங்கள் பல இந்த நிலப்பரப்பை ஒட்டி வாழ்வதால் கடல் வளம் காக்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றாயிரம் ஏக்கர் நிலப்பகுதியில் இருக்கும் இந்த காடுகளில் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் கூட்டமாக வருவதைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த காடுகள் மனிதர்களுக்கும் அங்குள்ள உயிரினங்களுக்கும் அதிக நன்மையை தருகின்றன. அலையாத்திக்காடுகளில் வளரும் மரங்கள் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவையாகும். அதில் காணப்படும் தில்லை மரங்கள் முன்பு சிதம்பரம் நகரில் பரவலாக இருந்தவை. அவை தற்போது பிச்சாவரம் காடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ஆச்சாள் மரங்கள் என்னும் தில்லை மரங்கள், சுர புன்னை மரங்களின் இலைகள் மற்றும் அவற்றின் வேர்கள் இந்த நீர்நிலைகளில் பரவி இருப்பதால் இதை ஒட்டிய பகுதிகளில் வாழும் மீனவ மக்களுக்கு எந்த உடல் நல பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் நோய்கள் அணுகாமல் அவர்களின் உடலை இந்த மரங்கள் பாதுகாப்பதாக கூறுகின்றனர்.

Related posts

Leave a Comment