January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

உங்கள் வீட்டு செல்ல பிராணியான கினியா பிக் இறைச்சி உணவாம் தெரியுமா உங்களுக்கு ?

பலருடைய வீடுகளில் பாசமாக வளர்க்கப்படும் கேவியா போர்செல்லஸ் எனும் கினியா பிக் பலருக்கும் பிடித்த ஒரு செல்லப்பிராணி. இது கினிப் பிக் மற்றும் கேவி எனவும் அழைக்கப்படுகிறது. இது கேவியேடே குடும்பத்தில் கேவியா இனத்தைச் சேர்ந்த கொறித்துண்ணி இனம். இதன் பெயரில் கினியா என இருந்தாலும் கினிப் பிக் கினியாவை பூர்வீகமாகக் கொண்டதல்ல. உயிரியல் ரீதியாக பன்றிகளுடன் நெருங்கிய தொடர்புடையவையும் அல்ல. கினியா பிக் பெயரின் தோற்றம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. தென் அமெரிக்காவின் ஆண்டிஸில் தோன்றின என சொல்லப்படுகிறது.

இயற்கையாகவே காடுகளில் இல்லாத வளர்ப்பு விலங்குகள் எனவும் சொல்லப்படுகிறது. முதலில் கினியா பிக் இறைச்சிக்கான கால்நடைகளாக வளர்க்கப்பட்டுள்ளன. உலகின் சில பகுதிகளில் இன்னும் கினியா பிக் சாப்பிடப்படுகிறது. மேற்கத்திய சமுதாயத்தில் கினிப் பன்றி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வர்த்தகர்களால் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து செல்லப்பிராணியாக பரவலான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ளது.

கனிவான இயல்புடன் இருப்பது, கையாள எளிமையாக இருப்பது, எளிமையான உணவுகளை சாப்பிடுவது, நட்பு ரீதியான பாசம்,பராமரிப்பதில் எளிமை இதெல்லாம் கின்னி பிக்குகளை தொடர்ந்து வீட்டுப் பிராணிகளாக வளர்க்க பலரையும் தூண்டியது. கினியா பிக் நாட்டுப்புற கலாச்சாரத்தில் பல பழங்குடி ஆண்டியன் மக்களுக்கு, குறிப்பாக உணவு ஆதாரமாக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விலங்குகள் நாட்டுப்புற மருத்துவம் மற்றும் சமூக மத விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. ஆண்டிஸ் மலைகளில் முக்கியமான சமையல் உணவு கினியா பிக், அங்கு கினியா பிக் குய் என்று அழைக்கப்படுகின்றன.

ஸ்பானிஷ், டச்சு மற்றும் ஆங்கில வர்த்தகர்கள் கினியா பிக்குகளை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவை விரைவில் ராணி ஒன்றாம் எலிசபெத் உட்பட பணக்காரர்கள் மத்தியில் கவர்ச்சியான செல்லப்பிராணிகளாக பிரபலமடைந்தன. கின்னி பிக் தங்கள் கழிவை சாப்பிடுகின்றன. அதனால் உங்கள் வீடுகளில் இதை செல்லப்பிராணிகளாக வளர்த்தால் கவனமாக கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். கின்னி பிக்குகளுக்கு வியர்க்காது. கினிப் பிக்குகள் நீண்ட நேரம் தூங்குவதில்லை. அவை சிறிது நேரம் மட்டுமே தூங்கும் குணம் கொண்டது.

கினி பிக்குகளை நீங்கள் வளர்த்தால் ஒவ்வொரு நாளும் கூடுதல் வைட்டமின் சி கொடுக்க வேண்டும், மனிதர்களை போல. கின்னி பிக்குகள் சைவ உணவுகளை மட்டுமே உண்ணும். கின்னி பிக்குகள் பிறக்கும் பொழுதே ரோமங்கள் மற்றும் பற்களுடன் முழுமையாகப் பிறந்து சில மணிநேரங்களுக்குளாக ஓடி விளையாட தொடங்கிவிடும். கின்னி பிக்குகளுக்கு எலிகளை போல தொடர்ந்து பற்கள் வளர்ந்துவரும். இதனால் கின்னிபிக் பற்களை தேய்த்து குறைக்க உணவை அதிகம் சாப்பிடும். கூடவே கொறித்து கொண்டிருக்கும்.

கினியாபிக்குகளுக்கு அதிக இடம் தேவை. அதிக இடம் இருந்தால் உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி கொண்டிருக்கும். மறைந்து விளையாட பாதுகாப்பான இடங்கள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பலரும் கினியாபிக் வெள்ளெலி என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெள்ளெலிகள் மற்றும் கினியாபிக் உண்மையில் வேறுபட்டவை. கினியாபிக் மிகவும் பாசமான விலங்குகள். குழுவாக இருந்தால் சந்தோசமாக இருக்கும். கின்னிபிக்குகள் அதிகம் சத்தம் போடும்.

கின்னிபிக்குகளை பாசமாக வளர்ப்பவர்கள் அவைகள் இடும் சத்தத்தின் அர்த்தங்களை கண்டுபிடித்து விடுவார்களாம். கின்னி பிக்குகளுக்கு வைக்கோல் மற்றும் தீவனம் நிறைய கொடுக்க வேண்டும். அவைகளின் உணவில் 80 லிருந்து 90% ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காய்கறிகள் மற்றும் பெல்லெட்களின் ஒரு சிறிய பகுதியை கொடுக்கலாம். பழங்கள் மற்றும் மூலிகைகள் அவைகளுக்கு சிறப்பு விருந்து. கின்னிபிக்குகள் தங்கள் கண்களிலிருந்து ஒரு வித வெள்ளைப் பொருளை சுரக்கின்றன. இதைக்கொண்டு தங்களை சுத்தம் செய்கின்றன.

கின்னிபிக்குகளுக்கு முன் காலில் 4 விரல்களும், பின் கால்களில் 3 விரல்களும் உள்ளன. அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான கின்னிபிக் 14 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் வரை வாழ்ந்துள்ளது. வயது வந்த கின்னி பிக்குகளின் எடை சராசரியாக 700 முதல் 1200 கிராம் வரை இருக்கும். கின்னி பிக்குகள் ஒரே நேரத்தில் 8 குட்டிகள் வரை போடுகிறது. 13 வகையான கின்னி பிக்குகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்பட்ட இனங்கள் தவிர, காடுகளில் 5 வகையான கின்னி பிக்குகள் உள்ளன.

Related posts

Leave a Comment