November 27, 2022
டிப்ஸ்

புடவையை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லையா இந்த டிப்ஸ் படியுங்க

பலவிதமான மார்டன் உடைகள் வந்து பெண்களை கவர்ந்தாலும் புடவை கட்டி கொள்வது பெண்களுக்கு தனி ஒரு அழகு. புடவை கட்டிக் கொண்டு, கூந்தலில் மல்லிகை பூ வைத்து ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது. சிலர் எவ்வளவு தான் புடவைகள் இருந்தாலும் புடவைகளை சேர்ப்பதை ஒரு பொழுது போக்காக வைத்திருப்பர்.

சிலருக்கு பட்டு புடவைகளை எடுத்து விட்டு கடையில் இருந்து வீடு வரும் வரை நிம்மதியே இருக்காது. நான் செலக்ட் பண்ணது நல்ல பட்டு தான நல்ல நூலில் பண்ணினது தான என பல சந்தேகங்கள் இருக்கும். அதை எளிதான முறையில் கண்டுபிடிக்க சில வழிமுறைகள் இந்த தொகுப்பில் கொடுக்கபட்டுள்ளது.

அதாவது நாம் வாங்கி வந்த பட்டு புடவையின் ஓரத்தில் இருந்து ஒரு சிறு துண்டை கட் பண்ணி எடுத்து அதற்க்கு தீ வைக்க வேண்டும். அப்படி நாம் செய்யும் போது அது நின்று எரிந்தால் அது அசல் பட்டு. ஆனால் பிற துணிகளை கலந்த பட்டு புடவைகளை இப்படி நாம் செய்யும் போது அதன் நூலானது நமது முடி எரிவதை போன்று சுருங்கிக்கொண்டே போகும் அப்படி எரிந்தால் நாம் உடனே புரிந்து கொள்ளலாம் இது கலப்படம் சேர்ந்தது என்று.

அசல் பட்டு சேலையை 100 ஆண்டுகள் வரை வைத்து கட்டலாம். பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை மிக குறைவு மேலும் நாம் விரும்புகிற வண்ணம் பல டிசைன்களில் கிடைக்கிறது.

பராமரிக்க சில வழி முறைகள்

சிலர் பட்டு புடவையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைப்பார்கள். அப்படி செய்யக்கூடாது, ஏனென்றால் நமது உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். முதலில் அதை வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும். அப்படி செய்து விட்டு மடித்து வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது.

சில சமயம் ஜாக்கெட்டில் அக்குள் பகுதியில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து குறிப்பிட்ட பகுதியில் மட்டும் துடைத்தால் போதும் கறை மறைந்து விடும். குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பு மற்றும் மென்மை குறையாது.

மற்ற துணிகள் போல பட்டு சேலையை துவைத்து விடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை போக்கக் பல திரவங்கள் கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி பயன்படுத்துங்கள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் ஒரு லிட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அப்படி செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும். சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரைவாஷ் செய்து விடுகிறார்கள். அந்த தவறை ஒருபோதும் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்துவிடும்.

மேலும் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை குறைந்த வெயிலில் ஒருமணி நேரம் உலர வைக்க வேண்டும். சேலையின் மடிப்பை மாதத்துக்கு ஒருமுறையாவது மாற்றி மடிக்க வேண்டும்.

நாம் எந்த புடவையை மடித்து வைக்க கூடாது தெரியுமா? பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும் ஆகவே இந்த புடவையை நூல் கண்டு போல் சுற்றி வைக்க வேண்டும். ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை மல்லு துணி கொண்டு சுற்றி வைக்க வேண்டும், நாப்தலீன் பயன்படுத்த கூடாது.

புடவையின் மேல் ஒருபோதும் வாசனை திரவியம் தெளிக்கக் கூடாது. அது, கறையாகும். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும். மேலும் புடவையை அடுக்கி வைக்கும் போது நிறைய புடவைகளை அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது.

நூல் மற்றும் சம்கி கலந்து நெய்த புடவைகளை சோப்புத் தண்ணீரில் துவைக்கலாம். ஷிபான் புடவைகளை ஹாங்கரில் தான் மாட்ட வேண்டும்.

Related posts

Leave a Comment