September 28, 2022
சமையல்

சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி ?

உங்கள் குழந்தைகளுக்கு மாலை வேளையில் சாப்பிட ஏதாவது ஸ்வீட் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான மிகவும் சத்தான பீட்ரூட் அல்வா செய்து கொடுங்கள். இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் எளிது. அதோடு இதை வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – இரண்டு (தோல் நீக்கி, துருவியது)

நெய் – ஐந்து டேபிள் ஸ்பூன்

பால் – ஒரு கப்

சர்க்கரை – தேவையான அளவு

முந்திரி – 25 கிராம்

உலர் திராட்சை – 25 கிராம்

ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் பால் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு, தீயைக் குறைத்து பத்து நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியில் உள்ள நெய்யில் குக்கரில் உள்ள பீட்ரூட்டை பாலுடன் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து பால் வற்றும் வரை நன்கு கிளற வேண்டும்.

பால் வற்றியதும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது, பீட்ரூட் வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்.

இந்நிலையில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு கிளறி, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான சத்தான பீட்ரூட் அல்வா ரெடி.

Related posts

Leave a Comment