September 28, 2022
சமையல்

அட்டகாசமான சுவையில் செட்டிநாடு காளான் பிரியாணி வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி ?

செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்போது, செட்டிநாடு காளான் பிரியாணி வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காளான் – அரை கிலோ

பாசுமதி அரிசி – இரண்டு கப்

வெங்காயம் – ஒன்று நறுக்கியது

தக்காளி – இரண்டு தக்காளி நறுக்கியது

இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்

கொத்தமல்லி – கால் கப் நறுக்கியது

புதினா – கால் கப் நறுக்கியது

பச்சை மிளகாய் – மூன்று நறுக்கியது

எண்ணெய் – மூன்று ஸ்பூன்

நெய் – மூன்று ஸ்பூன்

தேங்காய் பால் – அரை கப்

தயிர் – இரண்டு ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்

மல்லி தூள் – இரண்டு ஸ்பூன்

சோம்பு தூள் – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தண்ணீர் – மூன்று கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

பிரியாணி இலை – ஒன்று

ஏலக்காய் – மூன்று

பட்டை இலவங்கம் – இரண்டு

கிராம்பு – ஐந்து

செய்முறை:

முதலில் காளானை நன்றாக கழுவ வேண்டும். பின் அதனை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், பாசுமதி அரிசியை நீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி அது காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் இலவங்கம் ஆகியவற்றையெல்லாம் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர், அதில் நறுகிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். அதோடு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா உள்ளிட்டவற்றையும் சேர்த்து, வதக்க வேண்டும். பின்னர் அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி ஆகியவையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு வதக்கியதும், காளானை போட்டு பிரட்ட வேண்டும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அதே வேளையின், மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி அதனுடன் மூன்று கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி மூன்று விசில் விட்ட பின் இறக்க வேண்டும். இப்போது அசத்தலான சுவையில் செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி.

Related posts

Leave a Comment