September 28, 2022
சமையல்

சுவையான சில்லி முட்டை போண்டா செய்வது எப்படி?

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் பலருக்கும் சூடாக பஜ்ஜி, போண்டா சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி முட்டை போண்டா. இந்த ரெசிபியை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

முட்டை போண்டாவிற்கு
வேக வைத்த முட்டை – 4
கடலை மாவு – 3/4 கப்
அரிசி மாவு – 1/4 கப்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு

முட்டை சில்லிக்கு:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை போண்டாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி, போண்டா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது முட்டை போண்டா தயார்.
இனி இந்த முட்டை போண்டாவை சில்லியாக மாற்றுவதை பார்ப்போம்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மசாலா பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து, பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்க வேண்டும்.

மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், முட்டை போண்டாக்களை இந்த மசாலாவில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான அற்புதமான சில்லி முட்டை போண்டா தயார்.

Related posts

Leave a Comment