முன்பெல்லாம் நம் வீட்டில் விசேஷம் என்றாலே என்ன வடை பாயாசமா? என்று கேட்கும் அளவிற்கு தான் இந்த வடையும் பாயாசமும் இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை.
வடை கூட பருப்பு ஊற வைத்து அரைக்க நேரம் ஆகும். அதனால் இந்த இன்ஸ்டன்ட் பாயாசம் மிக்ஸ் வந்த பிறகு பாயாசம் செய்ய தெரியாதவர்கள் கூட எளிதாக செய்யும் அளவிற்கு வந்துவிட்டது. ஈசியாக செய்ய பழகிக் கொண்டுமே தவிர அது ஆரோக்கியமானதா என்று நாம் சிந்திப்பதில்லை.
இனி அந்த கவலையை விடுங்க, எல்லோரும் ஈஸியாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடக்கூடிய நட்ஸ் பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்…
தேவையான பொருட்கள் :
பாதாம் – 20 கிராம்
பிஸ்தா – 20 கிராம்
முந்திரி – 20 கிராம்
திராட்சை மற்றும் பேரிச்சை – 20 கிராம்
பால் – 1/2 லிட்டர்
சேமியா – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
சர்க்கரை – 1/4 கப்
நெய் – தேவையான அளவு
செய்முறை :
பாதாம், பிஸ்தா என அனைத்தையும் தனித் தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின் பால் காய்ச்சி அது நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து வேக வைக்க வேண்டும்.
வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும்.
பின் வறுத்த பருப்பு வகைகள், திராட்சை, பேரிட்சை சேர்த்து கலந்துவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான நட்ஸ் பாயாசம் ரெடி.
இதை உடல் சோர்வுடன் இருக்கிறது என்று நினைப்பவர்களும் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அந்த அளவுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய ஒரு பாயாசம் இது.
சில குழந்தைகள் என்ன தான் சாப்பிட கொடுத்தாலும் கூட உடம்பில் தெம்பு இல்லாமல் பார்க்கவே எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். அவர்களுக்கு சத்து மருந்து என்று எதையாவது கொடுப்பதற்கு பதிலாக இந்த நட்ஸ் பாயாசம் செய்து கொடுங்கள்.
சூடாக குடிக்கவில்லை என்றால் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்.