நம் எல்லோர் வீட்டிலேயும் மீன் குழம்பு பல முறைகளில் வைப்போம். அனால் யார் மீன் குழம்பு வச்சாலும் சுவையாக இருக்குதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. சில வீடுகளில் நாம் மீன்குழம்பை ருசித்துப் பார்த்தால் அருமையான ருசி இருக்கும். அதே மீன் குழம்பை நாம் வைத்தால் நம்முடைய கை பக்குவம் ருசி இருக்காது. அனால் இந்த முறையை பின்பற்றி யார் மீன் குழம்பு வைத்தாலும் வேற லெவல் ருசியாக வரும். உங்கள் வீட்டில் ஒரு முறை மீன் குழம்பை இந்த முறைப்படி இப்படி வைத்து பாருங்க “சொர்கம் நண்பா சொர்கம்” என்று சொல்வீர்கள்…!
முதலில் ஒரு கிலோ அளவு மீனை வாங்கி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் அரை ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும். எந்த வகை மீனிலும் இந்த மாதிரி குழம்பை நாம் வைக்கலாம்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து பெரிய வெங்காயம் இரண்டு நறுக்கியது, வரமல்லி இரண்டு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், பூண்டு பத்து பல் போட்டு இதை விழுதாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா விழுதும் அப்படியே இருக்கட்டும்.
அடுத்து ஒரு கிலோ மீனுக்கு நூறு கிராம் அளவு புளி கரைசல் நமக்கு தேவை. ஓரளவுக்கு திக்காக புளி கரைசலையும் கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு முக்கிய குறிப்பு., மீன் குழம்பு எப்போதுமே பழைய புளியில் வைக்க வேண்டும். கடையில் வாங்கும் போது மீன் குழம்புக்காக பழைய புளி வேண்டும் என்று கேட்டு வாங்குங்கள்.
இப்போது குழம்பு தாளித்து விடலாம். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி அளவு ஊற்றி, வெந்தயம் கால் ஸ்பூன், வெங்காய வடகம் சிறிதளவு, சேர்த்து தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி, இரண்டு அல்லது மூன்று நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும். இதோடு இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை பச்சையாகதான் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து இருக்கின்றோம். அதனால் அந்த பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி விட்டு குழம்புக்கு தேவையான அளவு இந்த இடத்தில் குழம்பு மிளகாய்த்தூள் இரண்டு ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது உங்கள் காரத்திற்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து ஊற்றி நன்றாக வதக்கி விட வேண்டும்.
எல்லா மசாலா பொருட்களும் வெங்காய தொக்கும் சேர்ந்து ஒரு கிரேவி நமக்கு கிடைத்திருக்கும். இதில் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.
புளியின் பச்சை வாடை நீங்கி எல்லா மசாலா பொருட்களும் பாதி அளவு வெந்து வந்தவுடன் ஊற வைத்திருக்கும் மீனை எடுத்து புளிக்கரைசலில் போட்டு வேகவைத்து அடுப்பை அணைத்து பின்பு பரிமாறி பாருங்கள். வேற லெவல்ல அட்டகாசமான சுவையாக இருக்கும்.
இந்த மீன் குழம்பு கொதிக்கும் போதே அவ்வளவு வாசனையாக இருக்கும். நம் பசியை தூண்டும். சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் மிக அருமையாக இருக்கும். சுடச்சுட சாதத்திற்கு கேட்கவே தேவையில்லை… வேற லெவல்ல இருக்கும். நிச்சயம் நீங்கள் சொல்வீர்கள் “சொர்கம் நண்பா சொர்கம்”….!