January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

ராணுவம் இல்லை பாம்புகள் கொசுக்கள் இல்லை இன்னும் குட்டி சாத்தான்களை நம்பும் மக்கள் ஐஸ்லாந்து பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

ஐஸ்லாந்து நாட்டைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பற்றி பார்ப்போம். ஐஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பல தீவுக்கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு தீவு நாடு. ஐஸ்லாந்து ஐரோப்பாவில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடு. ஐஸ்லாந்தின் தலைநகரம் ரெய்க்ஜாவிக்(Reykjavík). அங்குள்ள மிகப்பெரிய நகரமும் இதுவே.

ஐஸ்லாந்திய மக்கள்தொகையில் 60% க்கும் அதிகமானோர் தலைநகர் ரெய்காவிக் நகரில் வாழ்கின்றனர். இங்கு மக்கள் தொகை 2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 3,76,248 பேர். இங்குள்ள மக்கள் ஐஸ்லேண்ட் மொழியை பேசி வருகிறார்கள். ஐஸ்லாந்து மொத்தம் 102,775 சதுர கிலோ மீட்டரை கொண்டுள்ளது. இங்குள்ள நாணயம் ஐஸ்லாண்டிக் குரோனா. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐஸ்லாந்தின் மக்கள் தொகையில் சுமார் 20 முதல் 25 சதவீதம் பேர் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு குடிபெயர்ந்தனர்.

வட்னாஜோகுல் ஐரோப்பாவின் மிகப்பெரிய பனிப்பாறை. ஐஸ்லாந்தில் உள்ள தண்ணீர் மிகவும் தூய்மையாக புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கும். இதையும் தாண்டி இங்குள்ள ஒவ்வொரு தண்ணீர் குழாய்களில் இருந்தும் வரக்கூடிய தண்ணீர் முற்றிலும் இலவசம். ஐஸ்லாந்தில் பாம்புகள் இல்லை, கரடிகள் இல்லை, கொசுக்கள் இல்லை, விஷப்பூச்சிகள் இல்லை. ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை. ஐஸ்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஜூலை வரைக்கும் நள்ளிரவு சூரியன் இருக்கும்.

உலகில் முதன்முதலாக நிறுவப்பட்ட பாராளுமன்றம் ஐஸ்லாந்தில் உள்ளது. 930 ஆண்டிலேயே முதல் தேசிய பாராளுமன்றம் திங்வெல்லரில் நிறுவப்பட்டது. இப்பொழுது அது தேசிய பூங்காவாக உள்ளது. இந்தப் பாராளுமன்றம் 1800ஆம் ஆண்டு வரைக்கும் இயங்கியது. இது உலகிலேயே இருக்கக்கூடிய மிகப் பழமையான பாராளுமன்றமாக உள்ளது.

உலகில் மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. இதற்கு காரணம் இங்குள்ள பெரும்பகுதி மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 3 பேர் உள்ளனர். மக்கள் தொகை குறைந்த பல நாடுகளைப் போலவே ஐஸ்லாந்திலும் பெரும்பாலான மக்கள் நகரங்களில் மட்டுமே வசிக்கின்றனர்.

ஐஸ்லாந்து நாட்டில் ராணுவம் இல்லை. ஐஸ்லாந்து மிகவும் அமைதியான நாடு. இங்கு வன்முறை குற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் இங்கு ராணுவம், விமானப்படை, கடற்படை போன்றவை இல்லை. 200 பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறிய அமைதிகாக்கும் படை மட்டுமே உள்ளது. இந்த பணியாளர்கள் கூட பெரும்பாலான நேரங்களில் சீருடையும், ஆயுதங்களும் அணிவதில்லை. தேசிய கடலோர காவல் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. இருந்தாலும் இங்கு முழுநேர ராணுவ படைகள் இல்லை.

ஐஸ்லாந்தில் 1908ஆம் ஆண்டில் இருந்து 1989ம் ஆண்டு வரைக்கும் மதுவிலக்கு இருந்து வந்தது. ஐஸ்லாந்தில் பீர் மிகவும் பிரபலமான மதுபானம். 74 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பீர் தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது ஐஸ்லாந்தில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடியது பீர். மதுபான தடை நீக்கப்பட்ட மார்ச் 1ஆம் தேதி இங்கு பிஜோர்டாகுரின் எனப்படும் பீர் தினமாக(Beer Day) கொண்டாடப்படுகிறது. இது இங்கு அதிகாரபூர்வமற்ற தேசிய விடுமுறையாக கொண்டாடப்படுகிறது.

ஐஸ்லாந்தில் பூகம்பங்களும், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதனால் அங்குள்ள மக்கள் சிறுவயதில் இருந்து அதை எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சியை பெற்றுள்ளனர்.

ஐஸ்லாந்து முழுவதும் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளது. அவற்றில் பல நீர்வீழ்ச்சிகளுக்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லை.

உலகில் மனிதர்கள் குடியேறிய கடைசி இடங்களில் ஐஸ்லாந்தும் ஒன்று என சொல்லப்படுகிறது.

ஒரு பெண் சுதந்திரமாக வாழ்வதற்கு சிறந்த இடமாக ஐஸ்லாந்தும் ஒன்று என பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தில் இதுவரைக்கும் டைனோசரின் எலும்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம் இந்த நிலப்பரப்பு சுமார் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. டைனோசர்கள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போனது.

ஐஸ்லாந்து மக்களில் பலரும் குட்டிசாத்தான்களையும் பூதங்களையும் நம்புகிறார்கள். குட்டிச் சாத்தான்கள், பூதங்கள், விசித்திரமான உயிரினங்கள் பற்றிய நம்பிக்கை ஆதிகாலத்திலிருந்து அங்குள்ள மக்களிடம் உள்ளது. இதை பற்றிய கதைகளும் ஏராளமாக ஐஸ்லாந்து மக்களிடம் உள்ளது. 40 சதவிகித ஐஸ்லாந்து மக்கள் குட்டிச் சாத்தான்கள் இருப்பதை நம்புகிறார்கள். ஐஸ்லாந்து நாட்டுப்புறக் கதைகளில் எரிமலைக்குழம்பு வயல்களில் வசிப்பதாக நம்பப்படும் மறைந்து வாழும் மக்கள் எனப்படும் ஹல்டுஃபோல்க் பற்றிய கதைகள் அதிகம் உள்ளது. ரெய்க்ஜாவிக் நகரில் ஒரு எல்ஃப் பள்ளி உள்ளது. அங்கு குட்டிச்சாத்தான்கள் மற்றும் அவர்களுடன் பழகிய ஐஸ்லாண்டர்களைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். ஐஸ்லாந்து முழுவதும் நிலப்பரப்பில் கட்டப்பட்ட சிறிய எல்ஃப் வீடுகளை பார்க்க முடியும்.

ஐஸ்லந்து முழுவதும் ஏராளமான வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகிறது. இந்த வெந்நீர் ஊற்றுகள் ஆண்டு முழுவதும் சூடான தண்ணீரை வெளியிடுகிறது. எரிமலையால் சூடாக்கப்பட்ட குளங்களிலிருந்து வரக்கூடிய இந்த தண்ணீரில் குளிப்பது ஒரு புது அனுபவம். இங்கு வருபவர்கள் இந்த வெந்நீர் ஊற்றில் குளிக்காமல் திரும்பிச் செல்வதில்லை.

ஐஸ்லாந்து மக்கள் வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஐரோப்பாவில் அதிக நேரம் வேலை செய்யும் நாட்டு மக்கள் ஐஸ்லாந்து நாட்டு மக்கள்.

ஐஸ்லாந்தில் 11 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இதில் இப்போது வரைக்கும் கிட்டத்தட்ட 269 பனிப்பாறைகள் பெயரிடப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பனிப்பாறையான வட்னாஜோகுல் பனிப்பாறை உள்ளது.

ஐஸ்லாந்து மக்களில் பத்தில் ஒருவர் தனியாக புத்தகத்தை வெளியிடுகிறார். ஐஸ்லாந்து மக்களின் வாசிக்கும் பழக்கம் 13ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அதனால் ஐஸ்லாந்தில் பத்தில் ஒருவர் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். ஐஸ்லாந்து மிகவும் இலக்கியத் தன்மை கொண்ட நாடு. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் ஹால்டோர் கில்ஜான் லக்ஸ்னஸ்.

ஐஸ்லாந்து தேசிய நிறங்கள் சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம். ஐஸ்லாந்து கொடியில் காணப்படக்கூடிய இந்த மூன்று தேசிய நிறங்களில் சிவப்பு நிறம் எரிமலை தீயையும், வெள்ளை நிறம் பனியையும், நீலநிறம் கடலின் நிறத்தையும் குறிக்கிறது.

ஐஸ்லாந்து முழுவதும் சுமார் 130 எரிமலைகள் உள்ளன. இதில் சுமார் 30 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ளது.
ஐஸ்லாந்து நாட்டில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் இட வேண்டும் என்றால் அங்கு உள்ள அங்கீகரிக்கப்பட்ட பெயர்களின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் இருந்து குழந்தைகளின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். வேறு பெயரை தேர்வு செய்ய விரும்பும் பெற்றோர் முதலில் பெயரிடும் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். ஐஸ்லாந்து பெயர்கள் சட்டத்தின் கீழ் சில வழிமுறைகள் உள்ளது. இதன்படி குழந்தையின் பெயர் ஐஸ்லாந்து மொழிக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

ஐஸ்லாந்தில் பெரும்பாலும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வீட்டிற்கு வெளியே தூங்க வைக்கிறார்கள். அதுவும் சிறிய குழந்தைகளின் மதிய தூக்கம் பெரும்பாலும் வீட்டின் வெளியே தான் இருக்கும். இதற்காக சிறிய தொட்டிலில் வீட்டின் வெளியே குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். வீட்டின் வெளியே குழந்தைகள் தூங்கும் பொழுது கிடைக்கக்கூடிய புதிய காற்று குழந்தை நன்றாக தூங்க உதவுகிறது மேலும் நோயை விரட்டுகிறது என ஐஸ்லாந்து பெற்றோர்கள் நம்புகிறார்கள். குளிர்ந்த வெப்பநிலையில் கூட குழந்தைகள் இங்கே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும்.

ஐஸ்லாந்தில் நீங்கள் சாலை மூலமாக 17 மணி நேரத்தில் முழு நாட்டையும் சுற்றி வரலாம். இங்கிருக்கும் ரிங்ரோடு மொத்தம் 1332 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது ஐஸ்லாந்தின் கடற்கரையை சுற்றி வட்டமிட்டு வருகிறது. வானிலை நன்றாக இருந்தால் ஒரே நாளில் நீங்கள் ஐஸ்லாந்தை சுற்றி வரலாம். ஆனால் செல்லும் வழியில் இருக்கக் கூடிய ஏராளமான அழகான காட்சிகள் இடையிடையே உங்களை தடுத்து நிறுத்தும்.

இரண்டு டெக்டோனிக் தட்டுகளுக்கு இடையில் நீந்தக்கூடிய உலகின் ஒரே இடம் ஐஸ்லாந்து மட்டுமே. இந்த பிளவு சில்ஃப்ரா என்று அழைக்கப்படுகிறது. இது திங்வெல்லிர் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ளது. நீர் மிகவும் தெளிவாக இருப்பதால் நீங்கள் கீழே சென்று இந்த பகுதியை பார்க்கலாம்.

ஐஸ்லாந்து 2009 இல் விபச்சாரத்தை தடை செய்தது. 2010 இல் அனைத்து ஸ்ட்ரிப் கிளப்புகளையும் தடை செய்தது. அதாவது பெண்கள் நடனம் ஆடும் இடம்.

ஐஸ்லாந்து மக்கள் வயல்களில் காணப்படக்கூடிய பெரிய பாறைகள் உறைந்த பூதங்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எரிமலையை சுற்றியுள்ள கந்தகத்தின் வாசனை சல்பர் அல்ல எனவும் பூதங்கள் குளித்ததால் ஏற்படக் கூடிய நீரின் கெட்ட வாசனை எனவும் நம்புகிறார்கள்.

Related posts

Leave a Comment