November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

ரஷ்யா நாட்டை பற்றி உங்களில் பலரும் அறிந்திராத உண்மைகள்

ரஷ்யா பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடு. 17,125,191 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது ரஷ்யா. பூமியின் வாழக்கூடிய நிலப்பரப்பில் எட்டில் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ளது.ரஷ்யா மக்கள்தொகையில் உலகில் எட்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் ஏறத்தாழ 145 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 11 விதமான நேர மண்டலங்களை கொண்டது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ ஐரோப்பாவிற்குள் உள்ள பெரிய நகரம்.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் ஒரு ரஷ்யன். பிரபல விண்வெளி வீரர் யூரி ககாரின் 1961 இல் விண்வெளிக்கு பயணம் செய்தார்.

உலகில் உள்ள மரங்களில் ஐந்தில் ஒரு பங்கு ரஷ்யாவில் உள்ளது. மொத்தம் 643 பில்லியன் மரங்கள் ரஷ்யாவில் உள்ளது. ரஷ்யாவின் 45 சதவிகிதம் இடங்கள் மரங்களால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான மரங்கள் ரஷ்யாவின் போரியல் காடுகளில் உள்ளன.

உலகின் மிக ஆழமான ஏரியான பைக்கால் ஏரி ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ளது. உலகின் 20% நன்னீரைக் கொண்டுள்ளது இந்த ஏரி. குளிர்காலத்தில் இந்த ஏரி உறைந்து போகிறது. உறைந்த ஏரியின் மேலே வாகனத்தில் பயணிக்க கூட முடியும். அந்த அளவுக்கு கடினமாக உறைந்து போகிறது ஏரி தண்ணீர்.

ரஷ்யாவில் உலகின் மிக உயரமான எஸ்கலேட்டர்கள் உள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் அட்மிரல்டெய்ஸ்காயா(Admiralteyskaya) மெட்ரோ ரயில் நிலையத்தில் உலகின் நான்கு உயரமான எஸ்கலேட்டர்கள் உள்ளது. இந்த எஸ்கலேட்டர்கள் 225.07 அடி உயரம் கொண்டது. இந்த எஸ்கலேட்டர்களில் மேலிருந்து கீழே செல்ல சுமார் இரண்டரை நிமிடங்கள் ஆகும்.

உலகில் உள்ள மிகவும் மாசுபட்ட இடம் என ரஷ்யாவின் கராச்சே(Karachay) ஏரி அழைக்கப்படுகிறது. தெற்கு யூரல் மலைகளில் உள்ள கராச்சே ஏரி உலகின் மிகவும் மாசுபட்ட இடங்களில் ஒன்றாகும். 1950 களில் கதிரியக்கக் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டன. இதில் ஆயுதங்கள் மற்றும் அருகிலுள்ள மாயக்(Mayak) அணுமின் நிலையத்தின் மாசுக்களும் கொட்டப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு சென்றால் நீங்கள் உயிருடன் திரும்ப வர முடியாதாம். காரணம் இந்த ஏரியில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஒரு மணி நேரத்தில் உங்களைக் கொன்றுவிடுமாம்.

ரஷ்யர்கள் அதிகம் மது அருந்த மாட்டார்கள். பிரபலமான ஓட்கா ரஷ்யாவில் இருந்தாலும் ரஷ்யர்கள் தொடர்ந்து மது அருந்துவதை குறைத்துக்கொண்டு வருகிறார்களாம். ஒரு நபர் உட்கொள்ளும் ஆல்கஹால் அளவில் ரஷ்யா உலகில் 33 வது இடத்தில் உள்ளது. ஆனால் அவர்கள் தேநீரை அதிகம் விரும்புகிறார்கள். தனி நபர் உட்கொள்ளும் தேநீரின் அளவின் அடிப்படையில் ரஷ்யா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தேநீர் முதன்முதலில் 17 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வந்து சேர்ந்தது. நீங்கள் ரஷ்யாவில் உள்ள நண்பர்களைப் பார்க்கச் சென்றால் அவர்கள் வழக்கமாக பிஸ்கட்களுடன் தேநீரை குடிக்க கொடுப்பார்கள்.

ரஷ்ய பெண்கள் ரஷ்ய ஆண்களை விட 10 ஆண்டுகள் அதிகம் வாழ்கின்றனர். ரஷ்யப் பெண்கள் சராசரியாக 78 வயது வரை வாழ்வார்கள். அதே சமயம் ரஷ்யாவில் ஒரு ஆணின் சராசரி ஆயுட்காலம் 68 வயது. கடந்த பத்தாண்டுகளில் இந்த வேறுபாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில் ரஷ்ய பெண்கள் ஆண்களை விட 12 ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த மாற்றம் மது அருந்துதல் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ரஷ்ய ஆண்கள் சராசரியாக ஒரு வருடத்திற்கு 18 லிட்டர் மது அருந்துகிறார்கள். அதே சமயம் பெண்கள் நான்கு லிட்டர் மட்டுமே உட்கொள்கிறார்கள்.

உலகின் மிக நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இந்த புகழ்பெற்ற டிரான்ஸ்-சைபீரியன் இரயில் பாதையில் மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டாக் வரை பயணம் செய்ய சுமார் ஆறு நாட்கள் ஆகும். இது 9,288 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 87 நகரங்கள், பைக்கால் ஏரி, வோல்கா உட்பட 16 ஆறுகள், யூரல் மலைகள் மற்றும் பல காடுகள் வழியாக இந்த பயணம் தொடர்கிறது. இது எட்டு நேர மண்டலங்களைக் கடந்து செல்கிறது.

ரஷ்யாவின் வோல்கோகிராட்டில் ஒரு பெண்ணின் மிக உயரமான சிலை உள்ளது. இது மதர்லேண்ட் கால்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த சிலை 279 அடி உயரம் கொண்டது. எதிரியை பயங்கரமாக தாக்கும் முகபாவனையுடன் வலது கையில் நீளமான ஒரு வாளை தூக்கி பிடித்த வண்ணம் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 1967 இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த சிலையின் எடை 8,000 டன்கள்.

ரஷ்யாவின் ஒனேகா ஏரியில் மரத்தாலான தேவாலயங்கள் நிறைந்த தீவு உள்ளது. சுவாரஸ்யமாக ஒனேகா ஏரியின் நடுவில் அமைந்துள்ள கிஷி தீவில் ஒரு ஆணி கூட இல்லாமல் கட்டப்பட்ட பல மர தேவாலயங்கள் உள்ளன. இந்த வித்தியாசமான கட்டிடக்கலை ஒரு தலைசிறந்த படைப்பாக பார்க்கப்படுகிறது.

பலருக்கும் மிகவும் பிடித்த டெட்ரிஸ் விளையாட்டு ரஷ்யாவிலிருந்து வந்தது. உலகப் புகழ் பெற்ற டெட்ரிஸ் விளையாட்டின் முதல் பதிப்பு 1984 இல் சோவியத் ஒன்றியத்தின் புரோகிராமர் மற்றும் விஞ்ஞானி அலெக்ஸி பாஜிட்னோவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ரஷ்யாவின் பூனைகளுக்கு வேலை இருக்கிறது எங்கு தெரியுமா? ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம் ரஷ்யாவின் தேசிய பொக்கிஷம். இங்கு வசிக்கும் பூனைகள் ஹெர்மிடேஜின் புதையல் என அழைக்கப்படுகிறது. இந்த பூனை பாதுகாவலர்கள் விலைமதிப்பற்ற கலைப் படைப்புகளை எலிகளிடமிருந்து பாதுகாக்கிறார்கள். இங்குள்ள பூனைகளுக்கு ஊழியர்கள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பூனைக்கும் ஒரு புகைப்படத்துடன் தனிப்பட்ட பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூடவே பூனைகளுக்கு சம்பளமும் கொடுக்கப்படுகிறது. உலகிலேயே சம்பளம் பெறும் பூனைகள் இதுவாகத்தான் இருக்கும்.

பூமியில் மிகவும் குளிரான பகுதியில் மக்கள் வசிக்கும் நகரம் ரஷ்யாவில் உள்ளது. சைபீரியாவின் யாகுடியா(Yakutia) பகுதியில் உள்ள ஒய்மியாகோன்(Oymyakon) நகரம் பூமியில் குளிரான பகுதியில் மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 1938 இல் இங்கு மிகக் குளிரான வெப்பநிலை -108 பாரன்ஹீட் பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சராசரி வெப்பநிலை -58 பாரன்ஹீட்.

உலகின் மிகப்பெரிய கோட்டை ரஷ்யாவில் உள்ளது. மாஸ்கோவின் கிரெம்ளின் உலகின் மிகப்பெரிய கோட்டை. கோட்டை 67 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. கோட்டையின் சுவர்கள் 2.5 கிலோமீட்டர் நீளம் உள்ளது. இருபது கோபுரங்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு கோட்டைக்கும் தனித்தனி பெயர்களும் உள்ளது.

உலகின் 3வது பரபரப்பான மெட்ரோ மாஸ்கோவில் உள்ளது. 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மாஸ்கோ மெட்ரோவில் தினசரி பயணம் செய்கிறார்கள். ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒரு மெட்ரோ ரயில் வந்து செல்கிறது.

ரஷ்யர்களுக்கு மூட நம்பிக்கைகள் அதிகம். பண்டைய காலங்களில் ரஷ்யர்கள் புதிதாக வீடு கட்டிய பிறகு அந்த வீட்டிற்குள் முதலில் அவர்கள் செல்ல மாட்டார்கள். அதற்குக்காரணம் அந்த வீட்டுக்குள் முதலில் நுழைபவர் இறந்து விடுவார் என்ற ஒரு மூட நம்பிக்கையை கொண்டிருந்தனர். இதனால் வீடு கட்டிய பிறகு முதன்முறையாக ஒரு பூனையை வீட்டிற்குள் அனுப்புவார்கள். பூனைகளுக்கு ஒன்பது உயிர்கள் உள்ளது என அவர்கள் நம்புகிறார்கள். பூனை புதிய வீட்டிற்குள் செல்ல மறுத்தால் அவர்கள் அந்தக் கட்டமைப்பை இடித்துவிட்டு வேறு எங்காவது மீண்டும் கட்டுவார்கள். இப்படி வித்தியாசமான ஒரு நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அந்த காலத்து ரஷ்யர்கள்.

ரஷ்ய பெண்கள் பலரும் 6 அங்குலம் உயரம் இருக்கும் உயரமான குதிகால் செருப்புகளை அணிகிறார்கள். இப்படி அதிக உயரமுள்ள குதிகால் செருப்புகளை அணிந்து கொண்டு லாவகமாக நடப்பதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.

ரஷ்யாவில் உள்ள ஹெர்மிடேஜ்(Hermitage,) அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு காட்சி பொருட்களையும் பார்ப்பதற்கு நீங்கள் 2 நிமிடங்கள் செலவிட்டால் எல்லாவற்றையும் பார்க்க உங்களுக்கு 6 வருடங்கள் ஆகும். அந்த அளவு ஏராளமான கலைப்பொருட்கள் அங்கு பார்க்க குவிந்து கிடக்கிறது. இங்கு ஆறு பெரிய கட்டிடங்களை உள்ளடக்கிய 30 லட்சம் காட்சி பொருட்கள் உள்ளன. இது உலகின் மிகப் பெரிய பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இது 1764 இல் கேத்தரின் தி கிரேட் என்பவரால் நிறுவப்பட்டது.

Related posts

Leave a Comment