November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

1 கேலன் தேள் விஷம் 312 கோடி ரூபாயா?

தேள் என்றாலே எல்லாருக்குமே பயம். ஏனென்றால் விஷமுள்ள கொடுக்குகள் நம்மைத் தீண்டிவிட்டால் உயிருக்கு கூட ஆபத்து என சொல்வதால். எல்லா தேள்களுக்கும் நச்சுக்கொடுக்கு இருக்கும். இருந்தாலும் பெரும்பாலான தேள்களின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. உலகம் முழுவதும் உள்ள 25 இன தேள்கள் மட்டுமே மனிதர்களை கொல்லக்கூடிய நஞ்சை கொண்டிருக்கிறது. தேள்கள் இன்றைக்கு வாழும் உலகின் மிகப் பழமையான உயிரினம் என சொல்கிறார்கள். காரணம் இந்த தேள்கள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்துகொண்டிருந்தது என சொல்லப்படுகிறது.

சுமார் 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிலுரியன் காலத்தில் வறண்ட நிலத்திற்கு வாழச்சென்ற முதல் கடல் விலங்குகளில் பண்டைய தேள்களும் அடங்கும் என புதைபடிவ பதிவுகள் மூலமாக தெரியவந்துள்ளது. டைனோசர்கள் சுமார் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. ஆனால் தேள் 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சில கடல் தேள்கள் மூன்று அடி நிளத்திற்கும் அதிகமாக இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்பொழுது உள்ள தேள்கள் அதிகபட்சமாக 25 சென்டி மீட்டர் நீளம் வரை மட்டுமே வளரக் கூடியது.

குட்டி தேள்கள் 18 மாதங்கள் அம்மா வயிற்றில் இருந்த பிறகு வெளியே வருகிறது. இந்த குட்டிகள் பிறக்கும் பொழுது மென்மையாக வெள்ளை உடலோடு சிறியதாக காணப்படும். இந்த தேள் குஞ்சுகள் பிறந்தவுடன் தாயின் முதுகில் பாதுகாப்பாக சென்று அமர்கிறது. ஒரு அளவுக்கு வளரும் வரைக்கும் தாயின் முதுகு பகுதியிலேயே பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு சில குழந்தை தேள்கள் 2 வருடங்கள் வரை தங்களுடைய தாயுடன் கூடவே இருக்கும்.

தேள்கள் புற ஊதா ஒளியில் ஒளிரும் தன்மை கொண்டது. பெரிய தேளின் ஹைலின் அடுக்கில் ஒளிரும் ரசாயனங்கள் உள்ளது. இதனால் தேள்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை. ஆனால் சூரிய ஒளியில் இருந்து அவற்றை பாதுகாக்க உதவுகிறது என சொல்கிறார்கள். மேலும் ஒன்றையொன்று கண்டுபிடிக்கவும் வேட்டையாடவும் உதவுகிறதாம்.

ஆனால் தேள்கள் புற ஊதாக்கதிர் ஒளியில் ஒளிர்வதால் மனிதர்களுக்கு பல நன்மைகள் உள்ளது. இது தேளை கண்டுபிடிப்பது எளிதாகிறது. தேள்களைப் பற்றி படிக்க முயற்சிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இரவில் அவற்றை கண்டுபிடிப்பது எளிதாகிறது. மேலும் மலையேற்றம் செல்பவர்களுக்கும் தேளை கண்டுபிடித்து விலகி செல்வது எளிதாகிறது. அதுபோல தேளின் புதைபடிவங்கள் பெரும்பாலும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் புற ஊதாக்கதிர் ஒளியில் ஒளிரும் தன்மை கொண்டது.

தேள்கள் உணவு இல்லாமல் ஒரு வருடம் வரை உயிரோடு இருக்கும் சிறப்பை கொண்டது. பெரும்பாலான தேள்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிடுகிறது. உணவு கிடைக்காமல் இருக்கும் ஒரு சில நேரங்களில் ஒரு வருடம் வரைக்கும் சாப்பிடாமல் இருக்கும். தேள்கள் பூச்சிகள் மற்றும் சிலந்திகளை வேட்டையாடிச் சாப்பிடும். ஒரு சில பெரிய இன தேள்கள் பல்லிகள் மற்றும் எலிகளையும் பிடித்து சாப்பிடுவதாக சொல்கிறார்கள். தேள்களால் எந்த உணவாக இருந்தாலும் அதை திரவ வடிவில் மட்டுமே சாப்பிட முடியும். அதற்காக இரையை பிடித்த பிறகு அதை ஜீரணிக்க என்சைம்களை பயன்படுத்துகிறது. அதன் பிறகு தங்களுடைய சிறிய வாய் மூலமாக உறிஞ்சி உணவை எடுத்துக்கொள்கிறது.

தேளின் விஷத்தில் பல்வேறுவிதமான வெவ்வேறு நச்சுக்கள் கலந்திருக்கும். எல்லாத் தேள்களுக்கும் விஷம் உள்ளது. ஆனால் அந்த விஷம் ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபட்டிருக்கும். இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 இனங்களில் சுமார் 25 இனங்கள் மட்டுமே மனிதர்களை கொல்லும் திறன் கொண்டவை. மருத்துவ சிகிச்சையை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கக்கூடிய இடங்களில் இன்னும் இரண்டு சதவிகித இனங்கள் மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை என சொல்கிறார்கள். குறிப்பாக அதிகம் மருத்துவமனைகள் இல்லாத மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்பகுதிகளில் தேள் கடிப்பதால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகமாக இருக்கும் என சொல்கிறார்கள். வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக விஷம் கொண்ட தேள் காணப்படுகிறது.

ஒரு தேள் நியூரோடாக்சின்கள், கார்டியோடாக்சின்கள், நெஃப்ரோடாக்சின்கள், ஹீமோலிடிக் டாக்சின், ஹிஸ்டமைன் போன்ற பல்வேறு இரசாயனங்கள் உட்பட டஜன் கணக்கான தனிப்பட்ட நச்சுகளுடன் விஷத்தை உருவாக்கும் திறன் கொண்டது. தேள்கள் அவ்வளவு எளிதில் விஷத்தை வெளியிடுவதில்லை. ஒருமுறை கொட்டும் பொழுது எவ்வளவு விஷத்தை வெளியிட வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது தேள்கள். ஏனென்றால் மிகவும் சிக்கலான அதனுடைய விஷத்தை உற்பத்தி செய்வதற்கு அதனுடைய உடலில் இருந்து தேவைப்படக்கூடிய ஆற்றலை அதிகம் எடுத்துக்கொள்வதால் எளிதில் தன்னுடைய விஷத்தை அது பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் இரையை கொல்வதற்கு தேவைப்படும் அளவில் மட்டுமே விஷத்தை வெளியிடுகிறது.

எந்த அளவிற்கு தேளின் விஷம் மனிதர்களுக்கு ஆபத்தானதோ அதே அளவிற்கு பல நன்மைகளையும் கொண்டுள்ளது. தேளின் விஷத்தில் இருக்கக்கூடிய ரசாயனங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒருசில புற்றுநோய்களை கண்டறிவதற்கும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் தேள் விஷம் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அதுபோல ஆசிய தேளின் விஷத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது பாக்டீரியா, பூஞ்சை, மலேரியா போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது. கீல் வாதத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேளின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. பல நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளிலும் தேளின் விஷம் பயன்படுத்தப்படுகிறது.

தேளின் விஷம் மிகவும் அதிக விலை மதிப்பு கொண்டது. தேளின் விஷம் ஒரு கேலன் 39 கோடி டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏறத்தாள 311 கோடி ரூபாய். ஒரு கேலன் என்றால் 4.54 லிட்டர்கள்.

Related posts

Leave a Comment