January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

பத்தாயிரம் ஒளிஆண்டுகள் தொலைவில் இருக்கும் மிகப்பெரிய அல்கஹால் மேகம் | மேகங்கள் பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்

மேகங்கள் பொதுவாக நாம் அனைவரும் தினமும் வானில் பார்க்கும் ஒரு நிகழ்வு. இந்த மேகங்கள் பலவித அற்புதமான ஓவியங்களை நமக்கு காண்பிக்கும் நீங்கள் கூர்ந்து கவனித்தால். சிறுவயதில் பலரும் இந்த மேகங்களின் வித்தியாசமான வடிவங்களை பார்த்து அதிசயித்திருப்போம். நீங்கள் அதிக மனஅழுத்தத்தில் இருக்கும் பொழுது அழகான மேகங்களை ஒரு 5 நிமிடங்கள் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் மனஅழுத்தம் எல்லாம் குறைந்து மனம் லேசாகி சந்தோசமாக உணர்வீர்கள். அப்படி உங்களை அதிசயப்படுத்தும் மேகங்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்க்கலாம்.

வானிலை அறிவியலில் மேகங்களைப் பற்றிய ஆய்வு நெபாலஜி என்று அழைக்கப்படுகிறது.

மேகங்களால் மில்லியன் கணக்கிலான அளவு கேலன் தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும். ஒரு கேலன் என்பது 3.78541 லிட்டர்.

மேகங்களால் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

வானத்தில் நீங்கள் காணக்கூடிய 10 பொதுவான வகை மேகங்கள் உள்ளன. அவை அல்டோகுமுலஸ், சர்க்கஸ், சிரோகுமுலஸ், சிரோஸ்ட்ராடஸ், குமுலோனிம்பஸ், குமுலஸ், நிம்போஸ்ட்ரேடஸ், ஸ்ட்ராடோகுமுலஸ் மற்றும் ஸ்ட்ராடஸ்.

அல்டோகுமுலஸ்(Altocumulus) வகை மேகங்கள் 6,500 முதல் 20,000 அடி உயரத்தில் காணப்படும். சர்க்கஸ் வகை மேகங்கள் 16,500 முதல் 45,000 அடி உயரத்தில் காணப்படும். சிரோகுமுலஸ் மேகங்கள் 20,000 முதல் 40,000 அடி உயரத்தில் காணப்படும். சிரோஸ்ட்ராடஸ் மேகங்கள் 18,000 முதல் 42,000 அடி உயரத்தில் காணப்படும். சிரோஸ்ட்ராடஸ் மேகங்கள் சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்துகின்றன. குமுலஸ் மேகங்கள் 2,000 அடிக்கும் குறைவான உயரத்தில் காணப்படுகின்றன.

குமுலோனிம்பஸ் மேகங்கள் 1,500 முதல் 40,000 அடி உயரத்தில் காணப்படுகின்றன. குமுலோனிம்பஸ் மேகங்கள் ஆலங்கட்டி மழை, கனமழை, மின்னல், இடி மற்றும் சூறாவளி போன்ற கடுமையான வானிலையை உருவாக்கும். நிம்போஸ்ட்ராடஸ் மேகங்கள் 10,000 அடிக்கும் குறைவான உயரத்தில் காணப்படுகின்றன. ஸ்ட்ராடோகுமுலஸ் மேகங்கள் 6,500 அடிக்கும் குறைவான உயரத்தில் காணப்படுகின்றன.

ஸ்ட்ராடஸ் மேகங்கள் 6,000 அடிக்கும் குறைவான உயரத்தில் காணப்படுகின்றன. ஸ்ட்ராடஸ் மேகங்கள் சில சமயங்களில் தரையை நெருங்கும்போது மூடுபனி போன்ற நிலைமைகளை உருவாக்குவதற்கு காரணமாகின்றன.

நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் மேகங்கள் உள்ளன. வீனஸில் அடர்த்தியான சல்பர்-டை-ஆக்சைடு மேகங்கள் உள்ளது. வியாழன் மற்றும் சனி கிரகங்களில் அம்மோனியா மேகங்கள் உள்ளது.

வியட்நாம் போரின் போது வியட்நாமில் மழைப்பொழிவை அதிகரிக்கவும் மழைக்காலத்தை நீட்டிக்கவும் மேகங்களைத் தூண்டும் மேகவிதைப்பு(cloud seeding) பணியான ஆபரேஷன் போப்பையை(Operation Popeye) அமெரிக்கா மேற்கொண்டது. 1974 இல் ஐக்கிய நாடுகள் சபை நாடுகள் வானிலையை ஆயுதமாக பயன்படுத்துவதை தடை செய்தது.

பூமியில் இருந்து 10,000 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு பெரிய ஆல்கஹால் மேகம் உள்ளது. இது நமது சூரிய குடும்பத்தின் விட்டத்தை விட 1000 மடங்கு பெரியது.

பூமியில் இருக்கும் நீரின் அளவை விட 100 டிரில்லியன் மடங்கு அதிகமாக நீராவி மேகம் விண்வெளியில் உள்ளது.

நாசாவின் பீனிக்ஸ் மார்ஸ் லேண்டர் செவ்வாய் மேகங்களில் இருந்து பனி விழுவதைக் கண்டறிந்துள்ளது.

2008 ஒலிம்பிக்கின் போது மழையைத் தடுக்க சீனா 30 விமானங்கள், 4,000 ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் 7,000 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது. மழை ஸ்டேடியத்தை அடைவதற்குள் மழைத்துளிகளை சுருங்கச் செய்யும் வகையில் பல்வேறு இரசாயனங்களை பயன்படுத்தி மேகங்களை சுட்டு மழை பெய்யவிடாமல் தடுத்தார்களாம்.

மீன் தோல் மற்றும் செதில்கள் போன்ற தோற்றமளிக்கும் மேகங்கள் நாம் பார்க்கும் அடுத்த 6 லிருந்து 12 மணி நேரத்தில் பெரும்பாலும் மழையை பெய்விக்குமாம்.

Related posts

Leave a Comment