January 31, 2023
தகவல்

14500 சதுர மீட்டரில் பரந்து விரிந்து நிற்கும் 250 ஆண்டுகள் பழமையான ஆலமரம்

ஆலமரம் நம்முடைய இந்தியாவில் புனிதமான மரமாக வணங்கப்பட்டு வருகிறது. மரங்களிலேயே மிகவும் அகலமான மரம் இந்த ஆலமரம். பொதுவாக ஆல மரம் ஒரு இடத்தில் நின்றால் தன்னுடைய கிளைகளை பரப்பி மிகப் பரந்து விரிந்து வளர தொடங்கும். அகன்ற அதனுடைய கிளைகளைத் தாங்குவதற்கு கிளைகளிலிருந்து விழுதுகள் கீழ்நோக்கி இறங்கி மண்ணில் புதைந்து ஆலமரத்தை தொடர்ந்து தாங்குகிறது.

ஒரு ஆலமரம் 100 அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த ஆல மரங்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் வாழக்கூடியது. கொல்கத்தாவில் ஒரு ஆலமரம் 250 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து தன்னுடைய கிளைகளை 3.5 ஏக்கர் பரப்பளவிற்கு பரப்பி உள்ளது. கொல்கத்தாவின் ஹவுராவில் அமைந்துள்ள ஆச்சார்யா ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் பூங்காவில் இந்த ஆலமரம் சுமார் 250 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது.

மொத்தம் 14,500 சதுர மீட்டர் அதாவது 3.5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலமரம் பரந்து விரிந்து காணப்படுகிறது. தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது இந்த மரம் ஒரு சிறிய காடு போல காட்சியளிக்கிறது. 1989 இல் உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது இந்த ஆலமரம். இந்த ஆலமரம் கிபி 1786ல் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலை செய்த கர்னல் அலெக்சாண்டர் கிட் என்பவரால் நடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக பரப்பளவில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த ஆலமரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும் கிழக்கு திசையை நோக்கி தொடர்ந்து வளர்ந்து கொண்டு செல்கிறது. இந்த ஆல மரத்தை பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மரத்தை சுற்றிலும் 330 மீட்டர் நீளத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக ஆல மரத்தை நீங்கள் சுற்றி பார்க்கலாம்.

இந்த ஆலமரத்தின் விழுதுகள் ஏராளமான இடங்களில் வேரூன்றி காணப்பட்டாலும் முதல் முதலாக இருந்த தண்டுப்பகுதி இப்பொழுது இல்லை. நடுமரம் இல்லாமல் விழுதுகளை கொண்டு இந்த மரம் வாழ்ந்து வருகிறது. இரண்டு மிகப்பெரிய புயலில் சிக்கிய இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பூஞ்சை பிடிக்க அதை 1925ஆம் ஆண்டில் அகற்றி இருக்கிறார்கள். இந்த ஆலமரத்தின் முக்கியமான தண்டு சேதம் அடைவதற்கு முன்பு 50 அடி விட்டம் கொண்டதாக இருந்தது.

இந்த ஆல மரத்தை சுற்றி தாங்கிக் கொண்டிருக்கும் விழுதுகளின் எண்ணிக்கை மட்டும் 3600 க்கும் மேல். மொத்த ஆல மரத்தின் சுற்றளவு மட்டுமே 450 மீட்டர் இருக்கிறது. இந்த மரம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதால் இதை நடமாடும் மரம் எனவும் அழைக்கிறார்கள். இந்த ஆலமரம் கிரேட் பான்யன்(The Great Banyan) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆல மரத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பரப்பளவு சுமார் 18,918 சதுர மீட்டர்கள். இந்த மரத்தின் மிக உயரமான கிளை 24.5 மீட்டர் உயரம் கொண்டது. இந்த தாவிரவியல் பூங்காவில் ஆலமரம் மட்டுமில்லாமல் பல நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான மரங்கள் செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

Related posts

Leave a Comment