சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிநடைபோட்டு வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். “மெரினா” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிபடங்களாக கொடுத்து முன்னணி நாயகராக உயர்ந்துள்ளார்.
ரஜினி, விஜய் பார்முலாவை பின்பற்றி வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகின்றார். என்னதான் இவரின் படங்கள் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றது. இதற்கு இவரின் ரசிகர்களின் பலம் மிகப்பெரிய காரணமாகும்.
சிவகார்த்திகேயன் தற்போது “மண்டேலா” படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல்கள் எழுந்ததாக சில பல வதந்திகள் பரவின. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என சிவகார்த்திகேயன் இதற்கு பதிலளித்தார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கயிருக்கின்றார். இதைத்தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை “ரங்கூன்” பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கமலின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக கடந்தாண்டே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் சிவர்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “இப்படம் மிகவும் வித்யாசமான முறையில் உருவாக இருப்பதாகவும், என் கேரியரில் மிகமுக்கியமான படமாக இருக்கும்., இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வித்யாசமாக இருக்கும்” என நடிகர் சிவகார்த்திகேயன் கூறி உள்ளார்.
நடனத்தில் பின்னி எடுக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடனமே ஆடமாட்டாராம். நகைச்சுவை, டான்ஸ் என கமர்ஷியல் அம்சங்களை தவிர்த்து இப்படத்தில் சிவகார்த்திகேயன் சற்று வித்யாசமாக நடிக்கயிருப்பதாக சினிமா வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. எனவே இதன் மூலம் நாம் வித்யாசமான சிவகார்த்திகேயனை நாம் காணலாம் என ரசிகர்கள் மிகவும் எதிர் பார்ப்புடன் உள்ளனர்.