உடல் எடை அதிக அளவில் இருக்கும் பலரும் தங்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல வழி முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பலரும் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால் உடல் எடையும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. உடல் எடை அதிகரித்து இருக்கும் பலருக்கும் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தற்பொழுது அதிக உடல் எடை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை தொடர்ந்து தேர்வு செய்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
அதிக உடல் எடையுடன் இருப்பது பல உடல் நலம் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியம். ஒரு சிலர் கூடுதலாக இருக்கும் உடல் எடையை குறைப்பதற்காக பட்டினி கிடக்கிறார்கள். இப்படி சாப்பிடாமல் பட்டினி கிடப்பது உங்களுடைய ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை விட ஆரோக்கியமாக சாப்பிடும் இயற்கையான பல வழிமுறைகள் உள்ளது.
அதன் மூலமாக உங்களுடைய உடல் எடையை குறைக்கலாம். அதில் முக்கியமான ஒன்று கொட்டை வகைகள் மற்றும் உலர் பழங்கள். உலர் பழங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உங்களை நீண்ட நேரம் பசி இல்லாமல் வைத்திருக்கும். பல ஆய்வுகள் தொடர்ந்து உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் சாப்பிடுவதால் நீண்ட காலத்திற்கு மக்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம், உடல் பருமன் அபாயத்தையும் குறைக்கலாம் என சொல்கிறார்கள். அப்படி உங்களுடைய உணவில் சேர்க்க சிறந்த கொட்டை வகைகளைப் பற்றி பார்ப்போம்.
1. பாதாம்
பாதாம் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையம் என சொல்லப்படுகிறது. நீங்கள் உடல் எடை குறைக்க முயற்சித்தாலும், இல்லாவிட்டாலும் பாதம் உங்களுடைய தினசரி உணவில் ஒரு சிறந்த அம்சமாக இருக்கிறது. ஆய்வுகளின்படி பாதாமை தவறாமல் சாப்பிடுவது உடல் எடை குறைப்பதற்கு வழி வகுக்கும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். மேலும் கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடி உடலிலிருந்து அதை வேகமாக குறைக்கிறது.
ஒருசில பாதாம் சாப்பிடுவது உங்களுடைய பசியை போக்க உதவுகிறது. தொப்பை கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் எடையை குறைக்க உதவுகிறது. பாதாமில் இருக்கக்கூடிய நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.
2. உலர்ந்த திராட்சை
உலர்ந்த திராட்சை ஆரோக்கியமான இரசாயனங்களைக் கொண்டுள்ளன. உலர்ந்த திராட்சை உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. நீங்கள் உலர்ந்த திராட்சையை சாப்பிடும் பொழுது உங்கள் உடலில் ஒரு இரசாயன எதிர்வினை தொடங்குகிறது. இது உங்கள் சுவாசத்தை மெதுவாக்குகிறது. இது GABA எனப்படும் சக்திவாய்ந்த நரம்பியல் கடத்திகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. மன அழுத்த நிலைகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைத்து தொப்பையை குறைக்க உதவுகிறது.
3. வேர்க்கடலை
வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன. வேர்க்கடலை உங்கள் உடலுக்கு வலிமை தருகிறது. நீண்ட நேரம் உங்களை பசியில்லாமல் வைத்திருக்கும். பசி ஏற்படும் போது ஒரு கைப்பிடி வேர்க்கடலையை சாப்பிடுங்கள். ஆரோக்கியமான முறையில் பசியை குறைத்து உடல் எடையை குறையுங்கள்.
4. வால்நட்
அக்ரூட் பருப்புகள் எனப்படும் வால்நட் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்குத் தேவையான நிறைவுறா கொழுப்புகள் மற்றும் சில கொழுப்பு அமிலங்களால் நிரம்பியுள்ளது. அக்ரூட் பருப்புகளில் உள்ள ஏஎல்ஏ என்னும் முக்கியமான நொதி உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலில் கொழுப்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.
அக்ரூட் பருப்புகள் புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. இதனால் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் பசி இல்லாமல் வைத்திருக்க உதவும். அக்ரூட் பருப்புகளில் உள்ள சத்துக்கள் மூளையில் செரோடோனின் என்ற வேதிப்பொருளின் அளவை அதிகரிக்கிறது. இது பசியின் உணர்வை குறைக்கிறது. கூடுதல் நன்மைகளைப் பெற வால்நட்டை ஊறவைத்து சாப்பிடலாம்.
5. பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழங்களில் அதிக கலோரிகள் இருந்தாலும் கூடுதல் அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி எடை குறைக்க உதவுகிறது. இனிப்பு உங்களுக்கு பிடித்தால் உங்கள் பசியை பூர்த்தி செய்ய பேரிச்சம் பழங்கள் சிறந்த வழி. பேரிச்சம் பழம் எடை குறைக்கும் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு ஒரு நல்ல சிற்றுண்டியாகவும் இருக்கும்.