அழகு குறிப்புகள்

பெண்களே உங்கள் சருமத்திற்கு ஏற்ற சீரம் வகையை சரியாக தேர்வு செய்வது எப்படி ?

சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் அழகு பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணை போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும்.

சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் பயன்படுத் தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பாக உள்ளது.

மாய்ஸ்சரைசருக்கு முன்னதாக பயன்படுத்தப்படும் சீரமானது, பல சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால் எளிதில் தோலின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக வழங்குகிறது.

இதனால் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குவதோடு, கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், பருக்கள், கறைகள், திறந்த துளைகள், சுருக்கங்கள், கோடுகள் போன்ற சரும பிரச்சனைகளையும் குறைக்கிறது. இப்படி பல நன்மைகளை உங்கள் சருமத்திற்கு தரக்கூடியதாக சீரம் உள்ளது.

நாம் எந்த வகையான சரும பராமரிப்பு அல்லது அழகு சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் உங்களுடைய சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

வறண்ட சருமம், எண்ணெய் சருமம், உணர்திறன் மிக்க சருமம் என ஒவ்வொருவரது சருமம் வெவ்வேறு வகையானது.

எண்ணெய் சருமம் கொண்ட நபர்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், சாலிசிலிக் அமிலம், ரெட்டினோல் அல்லது நியாசினமைடு கொண்ட சீரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஹைலூரோனிக் அமிலம் அடங்கிய சீரம் சிறப்பானது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. சாதாரண சரும வகையைக் கொண்டவர்களுக்கு வைட்டமின் “சி” அல்லது “ஹைலூரோனிக்” அமிலம் அடங்கிய சீரம் சிறந்ததாகும்.

சருமத்தின் வகை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அதனை பயன்படுத்துபவரின் வயதும் சரும பராமரிப்பு சாதனங்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்குவகிக்கிறது.

சீரம் பொதுவாக வயதான தோற்றத்தை குறைக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் டீனேஜராக இருந்தால், சரும பராமரிப்பிற்கு க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்தினாலே போதும்.

இருபது வயதை தொடப்போகும் பெண்கள், “நியாசினமைடு” அல்லது “ஹைலூரோனிக்” அமிலம் கலந்த சீரத்தை பயன்படுத்தலாம். இருபது வயதிற்கு மேல் மற்றும் முப்பது அல்லது நாற்பது வயதானவர்கள் “ரெட்டினோல்” அடங்கிய சீரம் வகைகளை தேர்வு செய்வது உங்கள் வயதான தோற்றத்தை மாற்ற உதவும்.

சருமத்தின் பிரச்சனைகளை பொறுத்து தான் பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சீரற்ற சரும நிறம், கரும்புள்ளி, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் “ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி” அமிலங்களான கிளைகோலிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம், அசெலாயிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் கோஜிக் அமிலம் ஆகியவை அடங்கிய சீரம் வகைகளை பயன்படுத்தலாம்.

வயதான தோற்றங்களை மறக்க விரும்புவோருக்கு ரெட்டினோல் சீரம் சிறந்த தேர்வாகும். கரும்புள்ளிகள் அல்லது வெண் புள்ளிகளைக் கொண்ட சருமத்திற்கு ரெட்டினோல் அல்லது சாலிசிலிக் அமிலம் நிறைந்த சீரம் சிறப்பான பலனளிக்கக்கூடும்.

மேற்கூறிய சரும பிரச்சனைகள் அனைத்தும் இருந்தால், ஒரே நேரத்தில் அனைத்து விதமான சீரத்தையும் பயன்படுத்த வேண்டாம். அது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக பின்விளைவுகளை பெரிதாக்கக்கூடும்.

எனவே வயது, சரும வகை, சரும பிரச்சனை ஆகியவற்றை பொருத்து சரியான மூலப்பொருட்களைக் கொண்ட சீரத்தை தேர்வு செய்யுங்கள். அதேபோல் சரும பிரச்சனைகள் சம்பந்தமான பராமரிப்பு சாதனம் அல்லது சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு நாம் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

Related posts

Leave a Comment