January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

மர்மம் கலந்த இளஞ்சிவப்பு நிற ஏரி! ஹில்லியர் ஏரி

ஆஸ்திரேலியாவில் ஏராளமான வித்தியாசமான இடங்கள் காணப்படுகிறது. அதிலும் தெற்கு பகுதி பல வித்தியாசமான விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் மிகவும் வித்தியாசமான ஒரு இடம் இது. ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற இளஞ்சிவப்பு ஏரி. ஹில்லியர் ஏரி(Lake Hillier) 1802ம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக்கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட்ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் உள்ளது. பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் இளஞ்சிவப்பு நிறம். இந்த ஏரி ஆண்டு முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. உலகில் உள்ள மற்ற வர்ணங்கள் கலந்த ஏரிகள் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றத்தில் தொடர்ந்து நிறத்தை மாற்றும்.

ஆனால் இந்த ஏரி எப்பொழுதும் இளஞ்சிவப்பு நிறமாகவே காணப்படுகிறது. ஏரியில் இருந்து நீங்கள் தண்ணீரை பாட்டிலில் பிடித்து பார்த்தாலும் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்படி இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க காரணம் அதிக உப்புத்தன்மை என சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள் சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன.

இது ஏரியில் உள்ள உப்பு நீரில் சிவப்பு வர்ணத்தை உருவாக்குகிறது. ஹில்லியர் ஏரி சுமார் 600 மீட்டர் அதாவது 2,000 அடி நீளமும் 250 மீட்டர் அதாவது 820 அடி அகலமும் கொண்டது. இந்த ஏரி இயற்கையாகவே ஆழம் குறைந்த காணப்படுகிறது. அதன் கரையோரம் உப்பு மேலோடுகளால் மூடப்பட்டிருக்கிறது, அருகிலுள்ள கடலை விட பத்து மடங்கு உப்பு நிறைந்த சூழலை உருவாக்குகிறது.

இப்பகுதியை எளிதில் சென்றடைய முடியாததால் ஏரி பொதுவாக நீச்சலுக்கு பயன்படுத்துவதில்லை. உப்புவின் அளவு அதிகமாக இருந்தாலும் இந்த ஏரி நீந்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹில்லியர் ஏரி தண்ணீர் ஏன் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கிறது, ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை.

பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உப்பு பிரித்தெடுக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைவிடப்பட்டது. இப்போதெல்லாம் ஏரி சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த அழகான காட்சியை முழுமையாக காண ஒரே வழி ஹெலிகாப்டர் மட்டுமே. மேலிருந்து பார்க்கும் பொழுது மட்டுமே அதன் முழுமையான அழகு நமக்கு தெரியும்.

Related posts

Leave a Comment