November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

2000 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் வரையப்பட்டிருக்கும் கோடுகள் !!!

சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக 30 மைல் தூரம் வரை உள்ள நாஸ்கா கோடுகள் உள்ளன. இது பெருவில் உள்ள லிமாவில் இருந்து 250 மைல் தொலைவில் ஒரு பெரிய வறண்ட நிலப்பகுதியில் உள்ளது. இதில் பல விசித்திரமான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி பழமையான மர்மம் வாய்ந்த விஷயங்களில் ஒன்றாக உள்ளது. அப்படிப்பட்ட மர்மங்கள் நிறைந்த இந்த நாஸ்கா கோடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த கோடுகள் அமெரிக்காவில் முன்னாள் வாழ்ந்த நாஸ்கா இனத்தவரால் வரையப்பட்டதால் நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகிறது. இந்த கோடுகளை உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு சுழலாக கைரேகை போல தெரிகின்றன. 1500 களில் முதல் முறையாக இந்த கோடுகளை கண்ட பயணிகள் ஏதோ மேடு பள்ளமான சாலை இருப்பதாக நினைத்தனர். ஆனால் கடந்தகால நாகரிகத்தின் சிக்கலான கோடுகள் அவை என அவர்களுக்கு தெரியவில்லை. 1927 வரையிலும் கூட இந்த நாஸ்கா கோடுகளை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

நாஸ்கா மக்கள் வசிக்கும் நிலப்பரப்பு மிகவும் வறண்ட பகுதியாகும். அங்கு மிக குறைவான அளவே மழை பெய்கிறது. அதிகப்பட்சமாக அங்கு ஆண்டுக்கு 4 மில்லி மீட்டர்கள் தான் மழை பொழிகின்றன. இதனால் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த வறண்ட பூமியும் அதில் இருந்த நாஸ்கா கலாச்சாரமும் வெளி உலகிற்கு தெரியாமல் போனது. இங்கு வரையப்பட்டிருக்கும் விண்வெளி வீரர் படத்தை பொறுத்தவரை அது ராட்சத உருவம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதன் தலை ராட்சத தலை போல பெரிதாக உள்ளது. அதுபோல மம்மிகளின் நீண்ட மண்டையோடுகள் உள்ளன. ஆனால் அது நாஸ்கா கோடுகளை போலவே அந்த பழங்குடியினரின் கைவேலையால் செய்யப்பட்டது. பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது தெளிவாக தெரிந்தாலும் அவை ஏன் உருவாக்கப்பட்டன என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது. நேஷனல் கியோகிராபிக் நிறுவனத்தை சேர்ந்த ரெயின்ஹார்ட் என்பவர் இதுகுறித்து கூறும்போது அவை மத சடங்குகளை குறிப்பதாகவும் தண்ணீரை மையமாக கொண்டு வரையப்பட்டவை என்றும் கூறுகிறார்.

மேலும் வறண்ட பகுதி என்பதால் நாஸ்கா மக்களுக்கு தண்ணீர் மிக அவசியமான ஒன்றாக இருந்தது. சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நாஸ்கா மக்கள் உயிரினங்களை வரைய நினைத்தனர் என கூறுகின்றனர். சிலந்திகள் பல பண்டைய கலாச்சாரங்களின் படி மழையுடன் தொடர்புடையவை. அதே போலவே குரங்குகள் மற்றும் ஹம்மிங் பறவைகள் போன்றவை பெருவிற்கு அருகில் உள்ள காடுகளில் காணப்பட்டிருக்கலாம். ஏனெனில் அந்த காட்டில் ஏராளமாக தண்ணீர் இருந்திருக்கும். அதனால் அந்த படங்களை வரைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

மேலும் வானியல் ஆய்வாளர்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்தனர். பால் கொசோக் மற்றும் மரியா ரீச் என்பவர்கள் சூரியனும் சந்திரனும் உதிக்கும் இடத்தை குறிப்பதற்காக அந்த வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவை இரவில் வானில் விண்மீன்கள் அடையாளங்களாக உள்ளது போல பூமிக்கு அடையாளங்களாக இருக்கும் என கருதப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் ஆய்வாளர்கள் இந்த விளக்கத்தை சந்தேகிக்க துவங்கியுள்ளனர். அந்த படங்களுக்கும் வானத்திற்கும் எந்த வித பிணைப்பும் இருப்பதாக தெரியவில்லை என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் நாஸ்கா ஏன் அந்த கோடுகளை உருவாக்கினர் என்பதற்கான சரியான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை ஒரு மர்மமாகவே உள்ளது.

Related posts

Leave a Comment