வாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று கூறும் அளவுக்கு மக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்புச் செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு ஏதுவாகப் பல்வேறு அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
பிசினஸ் அக்கவுண்ட், நான்கு பேருக்கு மேல் வீடியோ கால் போன்ற வசதிகள் கொண்டுவரப்பட்டன. பணம் அனுப்பும் வசதியும் வந்துள்ளது. “பிஸ்னஸ் ஃப்ரொபைல்” வைத்திருக்கும் பயனர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சமானது வாட்ஸ்அப்பிலேயே கடைகள், வணிக நிறுவனங்களை தேடலாம், அதன் மூலம் ஷாப்பிங் செய்யலாம், அவர்களுடன் அரட்டையடிக்கலாம் அத்துடன் வெப்சைட்டிற்குச் செல்லாமலே அவர்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
மேலும், வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்கள் பேங்க், டிராவல் என தங்களுக்கு விருப்பதற்திற்கு ஏற்ப வணிகங்களை பிரவுசிங் செய்யலாம். முதற்கட்டமாக இந்த அம்சம் தற்போது பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ்அப் பிளாக் தளத்தில் விரிவான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் பார்க்கும் ஷாப்பிங் நிறுவனங்களின் நம்பர்களை உங்கள் போனில் சேமிக்க தேவையில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்த அம்சம் அமல்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்கள், வாட்ஸ்அப் வணிக தளத்தைப் பயன்படுத்தி மற்ற வணிகங்களின் தொடர்பு விவரங்களைக் கண்டறியலாம். மேலும் பயனர்கள் ஷாப்பிங் வலைத்தளத்தைப் பார்வையிடுவதற்குப் பதிலாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி நேரடியாக ஷாப்பிங் செய்ய முடியும்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோமார்ட் ஷாப்பிங் அனுபவத்தைப் போலவே இந்த அம்சமும் செயல்படுகிறது. இப்போது பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
வாட்ஸ்அப் பகிர்ந்தபடி, இந்த அம்சம் பாதுகாப்பானது மற்றும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும். கூடுதலாக, மக்கள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவே பாதுகாப்பாக பணம் செலுத்த முடியும். இந்த புதுமையான “செக் அவுட்” அனுபவம் வாட்ஸ்அப்பில் வாங்க விரும்பும் நபர்களுக்கும், விற்க விரும்பும் நபர்களுக்கும் வணிகங்களுக்கும் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்.
அதாவது, ஷாப்பிங் வலைத்தளத்திற்குச் செல்லவும் தேவையில்லை, பணம் செலுத்துவதற்கு வேறு எந்த செயலிக்கும் செல்ல தேவையில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஷாப்பிங் அம்சம் எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் இனனும் வெளிவரவில்லை.
இந்தியர்கள் இப்போதெல்லாம் மொபைல் போன்கள் மூலமாக ஷாப்பிங் செய்வதையே அதிகமாக விரும்புகின்றனர். அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே கையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மூலமாகத் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அந்தப் பொருள் வீடு தேடி வருகிறது.
இதனால் நேரம் செலவாவது, அலைச்சல், கூடுதல் செலவு போன்ற சுமைகள் குறைவதால் ஆன்லைன் ஷாப்பிங்கை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே இதுபோன்ற வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக வாட்ஸ் ஆப் செயலியில் ஷாப்பிங் வசதி கொண்டுவரப்படுகிறது.