May 30, 2020
உடல்நலம்

எண்ணெய் குளியல் உங்களுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

நம்முடைய பழங்கால மருத்துவ பதிப்புகளிலேயே எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு காரணங்களும் நோய் தீரும் வழிமுறைகளும் சொல்லப் பட்டிருக்கிறது.

பொதுவாக உடலில் உள்ள சூடு தணிவதற்கு எண்ணெய் குளியல் சொல்லப்பட்டாலும் மேலும் பல நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது இந்த எண்ணெய் குளியல். அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெய் குளியலை நாம் எப்படி எடுக்க வேண்டும் எனவும் சொல்லப் பட்டிருக்கிறது அதுபற்றி பார்ப்போம்.

எண்ணெய் குளியலின் பயன்கள்:

தமிழ் மருத்துவ ஆதார நூல்களில் எண்ணெய் குளியலின் பயன்களை இப்படி சொல்கிறார்கள்.உடல் சூடு தணியும்,உடல் சோர்வு, உடல் வலி நீங்கும், நல்ல உறக்கம்,உடல் , கண், காது , நாசி, வாய் என புற உலகோடு நாம் தொடர்புகொள்ள உதவும் உறுப்புகளுக்கு தெளிவு கிடைக்கும்,தோல், கூந்தல் செழுமை கிடைக்கும்,ஆயுள் விருத்தி உண்டாகும் என பழமையான மருத்துவ நூல்கள் சொல்கிறது.

எப்போது எண்ணெய்க் குளியல் தேவை?

உடலில் பித்தம் அதிகமாதலால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மன நிலையில் நிலையற்ற தன்மை அதாவது மனம் தெளிவாக இல்லாமல் இருத்தல் , அடிக்கடி தொடர்ந்து செய்யும் பிரயாணம், அதிக வெப்பம் வெளியிடப்படும் இடங்களில் அதிக நேரம் வேலை செய்தல் போன்ற நேரங்களில் எண்ணெய்க் குளியல் தேவை.உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு எண்ணெய்க் குளியலைச் சிறந்த தீர்வாக முன்வைக்கிறது இயற்கை மருத்துவம்.

எண்ணெய்க் குளியல்அற்புதங்கள்:

எண்ணெய்க் குளியல் நம் உடலில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துகிறது. எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்யும்போது, அந்த எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியம் அளிக்கிறது.
அழகை பராமரிக்கத் தேங்காய் எண்ணெய், கபம், வாதம், பித்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க நல்லெண்ணெய், தசைகள், மூட்டுகளின் வலிமைக்கு விளக்கெண்ணெய் ஆகியவற்றை எண்ணெய்க் குளியலுக்குப் பயன் படுத்தி வந்துள்ளனர்.

குளியலுக்கு உகந்த நேரம்:

எண்ணெய்க் குளியலுக்கு உகந்தது அதிகாலை நேரம். அந்த நேரத்தில் சூரிய ஒளி உடலில் படுவதால் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலுக்கு வைட்டமின்டி சத்து கிடைக்கிறது.

பயன்படுத்தும் முறை:

எண்ணெயை நேரடியாக சூடு படுத்தக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சுடவைத்துப் பின் எண்ணெய்ப் பாத்திரத்தை அதில் வைத்து சூடு பண்ணலாம்.

எண்ணெய் தேய்த்து 45 நிமிடம் முதல் ஒருமணி நேரத்துக்குள் குளித்துவிட வேண்டும். எண்ணெய்க் குளியலுக்கு மிதமான சூட்டில் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

கெமிக்கல் சேர்த்த ஷாம்பு, சோப்புகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கையான அரப்பு, சீயக்காய், கடலை மாவு, பயத்த மாவு ஆகியவற்றை பயன்படுத்தி குளிக்கலாம்.

எண்ணெய் குளியல் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ரத்தநாளத்தில் அடைப்பு உருவாவது தடுக்கப்படும். தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பையும் எண்ணெய்க் குளியல் கரைக்கிறது.
எண்ணெய்க் குளியலின் பின் பசி எடுக்கும். ஆனால், எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்க் குளியல் அன்று அசைவ உணவுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. பால், மோர், தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அன்று தாம்பத்யமும் கூடாது.
எண்ணெய்க் குளியலின் வழியாகக் கிடைத்த பிராண சக்தியை உடல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல், தசை, எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது. குழந்தையின்மை பிரச்னைக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மன அழுத்தத்தையும் நீக்குகிறது.வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

எந்த கிழமைகளில் எண்ணெய் குளியல் நல்லது:

எண்ணெய் குளியல் எடுப்பதற்கு நாள்கள் தனியாக உள்ளது. ஆண்களுக்கு என்றால் புதன் மற்றும் சனி.பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் எண்ணெய் குளியல் எடுத்து கொள்ள வேண்டும்.

காலை 5 முதல் 7 மணிக்குள் 10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை.

உடலுக்கு பஞ்சகற்பப் பொடியை (கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வித்து, வேப்பம் வித்து என அனைத்து பொருட்களையும் சமஅளவில் சேர்த்து அரைத்தது) பயன் படுத்துவதை தமிழ் மருத்துவம் ஊக்குவிக்கிறது. குளித்த பின் நன்றாக தலை, உடலை உலர்த்துவதும் முக்கியம்.எண்ணெய் குளியலின்போது பாதத்தில் இருந்து நீர் ஊற்றிக் குளிக்க வேண்டும்.

காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள்,நோய்வாய்ப் பட்டவர்கள்,அடிபட்டு உள் காயம்பட்டவர்கள்,மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள்,நாள்பட்ட நோயாளிகள்,புற்றுநோயாளிகள்,உடலில் அதிக வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம்.

Related posts

Leave a Comment