நம்முடைய உலகில் ஏராளமான வித்தியாசமான உயிரினங்கள் காணப்படுகிறது. அப்படிப்பட்ட உயிரினங்களில் ஒன்று இந்த சர்க்காஸ்ட்டிக் ஃபிரிங்ஹெட்(Sarcastic fringehead) மீன் இனம். அதனுடைய வித்தியாசமான வாய் அமைப்பு வித்தியாசமான கண்கள் இப்படி இந்த மீன் பார்க்கவே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
இந்த மீன் 30 சென்டிமீட்டர் நீளம் வரைக்கும் இருக்கிறது. பொதுவாக இந்த மீன்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். தேங்காய் அளவிலான நத்தை ஓடுகள், பாறைப் பிளவுகள், கண்ணாடி பாட்டில்கள் போன்ற குப்பைகளில் கூட இந்த மீன்கள் ஒளிந்து வாழ்கிறது. இந்த மீன்கள் பசிபிக் பகுதியில், வட அமெரிக்காவின் கடற்கரையில், சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, மத்திய பாஜா கலிபோர்னியா வரை காணப்படுகின்றன.
கடலில் சுமார் பத்தடி ஆழத்தில் இருந்து 240 அடி ஆழம் வரைக்கும் உள்ள இடங்களில் வாழ்கிறது. இந்த மீன்களின் முக்கிய அம்சம் அவை எவ்வாறு சண்டையிடுகின்றன என்பதுதான். எதிரி விலங்கு மிக அருகில் வந்துவிட்டதாக அவைகள் முடிவு செய்தவுடன் அது முடிந்தவரை அதன் வாயைத் திறந்து எச்சரிக்கும். இந்த மீன் சண்டையிட தொடங்கும் பொழுது அதனுடைய வாயை முறம் போல வித்தியாசமாக விரித்துக் காண்பிக்கிறது.
தாக்குதல் நடத்தும் முன் எதிரியை பயமுறுத்துவதற்கு சில முறை இப்படி வாயை நன்றாக திறந்து மூடும். இது பார்க்கவே வித்தியாசமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. பெண் மீன்கள் ஆண் மீன்கள் தங்குமிடங்களில் முட்டைகளை இடுகின்றன. அவை குஞ்சு பொரிக்கும் வரை ஆண்களை முட்டைகளை பாதுகாக்கின்றன.
இந்த மீன்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிடுகிறது என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. பெண் மீன்கள் முட்டையிடும் சமயத்தில் அதிக அளவு கணவாய் மீன்களின் முட்டைகளை சாப்பிடுவதை மட்டுமே இதுவரைக்கும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மீன்கள் மிகவும் அரிய வகையிலேயே ஆராய்ச்சியாளர்கள் கண்களில் தென்பட்டுள்ளது. இருந்தும் இது அழிந்துபோகும் பட்டியலில் இருக்கிறதா என்பது இன்னும் தெரியவில்லை.