நெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு எளிய வீட்டு வைத்தியம்

இருமலும், சளியும் கொஞ்சம் காலநிலை மாறினாலும் உடனே நம்மை பாடாய்படுத்தும். ஒருபக்கம் தும்மல், இருமலுன்னு உடலின் மொத்த சக்தியையும் இழந்து போகும் நிலையை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வர இதோ, சில வீட்டு வைத்தியம்.

இஞ்சி, தேன்

ஒரு டம்ளர் நீரில் ஒரு சிறு துண்டு இஞ்சியை சிறிதாக நறுக்கி போட்டு அந்த நீரை நன்கு கொதிக்க வையுங்கள். பின் அதை வடிகட்டி அந்த நீருடன் தேன் கலந்து தினமும் காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம்.

புதினா

புதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்த கூடியதாகும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவுகளில் வேண்டுமானாலும் சேர்த்து உண்ணலாம். தொடர்ந்து இதை பயன்படுத்தும் பொழுது வறட்டு இருமல் வருவதை தடுக்கலாம்.

மாதுளை

மாதுளம் பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி உள்ளது. மாதுளையை உதிர்த்து அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலை குணப்படுத்தலாம்.

உலர் திராட்சை

50 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் வெல்லம் இரண்டையும் சேர்த்து நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றை மிதமான சூடுடன் கூடிய நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். எலுமிச்சையில் விட்டமின் சி மிகுதியாக உள்ளது. இருமல், சளி தொல்லை இருக்கும்போது உடலுக்கு விட்டமின் சி மிகவும் அத்தியாவசியம்.

தூதுவளை

சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை இலைகளை காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் தூதுவளை பொடியையும் வாங்கி பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

பால், மிளகு, மஞ்சள்

இளஞ்சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக போய்விடும். வறட்டு இருமலும் குறையும். இது இருமலுக்கு கைகொடுக்கும் வைத்தியம்.

பனங்கற்கண்டு, சீரகம்

10 கிராம் பொடி செய்த சீரகத்துடன் பொடி செய்த பனங்கற்கண்டை சேர்த்து இரண்டும் சம அளவில் கலந்து காலை, மாலை என இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

திப்பிலி

திப்பிலியை பொடியாக்கி அதில் சிறிதளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சளி, வறட்டு இருமல் மற்றும் தொண்டை கமறல் குணமாகும்.

இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே பயன்படுத்தலாம். நீங்களும் இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *