January 31, 2023
உடல்நலம்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடக்கும் அதிசயங்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஸ்வீட் போட்டட்டோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கில் 50க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளது. இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தாயகம் மத்திய அமெரிக்கா அல்லது தென் அமெரிக்கா என சொல்லப்படுகிறது.

அங்கு இது 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஆனால் வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள் மற்றும் ஊதா போன்ற மற்ற நிறங்களிலும் காணப்படுகிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் காணப்படுகிறது.

100 கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கில் 74 கலோரிகள், 77 சதவிகிதம் தண்ணீர், 1.6 கிராம் புரதம், 20.1 கிராம் கார்போஹைட்ரேட், 4.2 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்து, 0.1 கிராம் கொழுப்பு காணப்படுகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் போன்ற எளிய சர்க்கரைகள் உள்ளது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவையான 400% வைட்டமின் ஏவை கொடுக்கிறது. இது உங்கள் கண்களை ஆரோக்கியமாகவும், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு, கிருமிகளுக்கு எதிராக உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இது உங்கள் இனப்பெருக்க அமைப்பு மற்றும் உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளுக்கும் நல்லது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை சளி மற்றும் காய்ச்சல் இருக்கும் பொழுது எடுத்துக்கொள்ளும் பொழுது இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கக்கூடிய மாங்கனீஸ் கொலாஜனை உற்பத்தி செய்து தோல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னிசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தியாமின், துத்தநாகம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

இதில் அந்தோசயனின் எனப்படும் மற்றொரு இயற்கை சேர்மம் அதிகமாக உள்ளது. இது பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள கலவைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை நீங்கள் வேகவைத்துச் சாப்பிடும் பொழுது அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருக்கும்.

இது உங்களுடைய ரத்த சர்க்கரை விரைவாக அதிகரிக்காது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பை குறைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. இதனால் இது உங்களுடைய இதய பிரச்சினைகளை குறைக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ காணப்படுகிறது.

இது கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து கண்களில் ஏற்படக்கூடிய நோய்களை குறைக்கிறது. மேலும் இது பார்வை குறைபாடு பிரச்சனையையும் சரி செய்ய உதவுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது கொழுப்பு செல்கள் வளராமல் இருக்க உதவுகிறது. இதனால் இது உங்களுடைய உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. இதை நீங்கள் வறுத்து, பொரித்து சாப்பிடும் பொழுது இது கிளைசீமிக் அளவை உயர்த்தி உங்களுடைய இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். டைப் 2 நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என உணவு வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

Related posts

Leave a Comment