தகவல்

ஓட்டுனரை பேருந்தின் மேலே தோப்புக்கரணம் போடவைத்த மக்கள்.. ஏன் தெரியுமா?

தற்பொழுதெல்லாம் சாலையில் சில ஓட்டுனர்கள் யாரை பற்றியும் கவலைப்படாமல் மிகவேகமாக வாகனங்களை இயக்குகிறார்கள். அதிலும் சில பேருந்து ஓட்டுனர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அப்படி அதிவேகத்தில் பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு பொதுமக்கள் விநோதமான தண்டனையை வழங்கியுள்ளனர். இதை பற்றி பார்ப்போம்.

சமூக வலைதளங்களான பேஸ் புக்,யுடியூப், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் வாகன ஓட்டிகளின் மிக மோசமான வாகனம் ஓட்டுவது குறித்த பல வீடியோக்கள் உலா வந்த வண்ணம் உள்ளது. அப்படி இணையத்தில் வைரலாகும் வீடியோக்களை வைத்து போலீஸார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் குறிப்பிட்ட வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இப்படி வாகனத்தை ஆபத்து விளைவிக்கும் வகையில் ஓட்டிய ஓட்டுநருக்கு பொதுமக்களே பாடம் புகட்டிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் ராவ் பகுதியில் நடந்துள்ளது. இந்த தண்டனை மிகவும் கடுமையானதாக இல்லையென்றாலும் அப்பேருந்து ஓட்டுநர் மீண்டும் அதே தவறை செய்யாதவாறு இருக்கும் வகையில் ஓர் தரமான தண்டனையாக உள்ளது.

ராவ் நகரம் வழியாக இந்தோர் மற்றும் மோவ் பகுதியை இணைக்கின்ற வகையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பேருந்துகள், சாலையில் நெரிசல் ஏற்பட்டிருக்கும் சூழலிலும்கூட அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் இதற்கு முன்னதாக பல முறை புகாரளித்துள்ளனர். இருப்பினும், இவ்விகாரத்தில் தீர்வு கிடைத்தபாடில்லை.

இந்நிலையில், பொதுமக்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் சென்ற பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பகுதி மக்கள், அவர்களாகவே அந்த ஓட்டுநருக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.

அதிவேகமாக இயக்கப்பட்ட பேருந்தை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அந்த டிரைவரை அவர் இயக்கி வந்த பேருந்தின் மீதே ஏற செய்து, கூரை மீது தோப்புக் கரணம் போட கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியாக அந்த டிரைவரை குறைந்தது 15 தோப்புக்கரணம் வரை போட வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

தற்போது தோப்புக்கரணம் தண்டனைப் பெற்றிருக்கும் பேருந்து டிரைவர் ஏற்கனவே இதுபோன்று பல முறை விதிமீறலில் ஈடுபட்டவர் என மக்கள் கூறுகிறார்கள். அவ்வாறு இதற்கு முன்னதாக பல பாதசாரிகள்மீது பேருந்தை உரசியவாறு வாகனத்தை இயக்கியதாக அவர்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது.

ஆகையால், பேருந்துடன் மடக்கிய பொதுமக்கள், அவரை நடு சாலையிலேயே பேருந்தை நிறுத்தவிட்டு பின்னர் அதே பேருந்தின் கூரைமீது தோப்புகரணம் போட வைத்துள்ளனர். இந்த சம்பவம் ராவ் நகரத்திற்கான காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடைபெற்றிருப்பது கூறப்படுகின்றது.

இதுகுறித்த பல முறை புகார்கள் அளித்தும் பலனளிக்காத காரணத்தால் இத்தகைய சூழலை தாங்களே கையாளும் விதமாக அப்பகுதி மக்கள் இந்த தண்டனை முறையை கையிலெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இந்தோர் பகுதி போக்குவரத்துத்துறை அதிகாரி ஜிதேந்தர் சிங் ரகுவன்ஷி கூறியதாவது, “இதுகுறித்து ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அவ்வப்போது சிலர் உத்தரவை மீறி செயல்படுகின்றனர். இனி விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர் மற்றும் பேருந்துகள் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

Related posts

Leave a Comment