September 28, 2022
அழகு குறிப்புகள்

தொடை இடுக்கு மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை போக்கி வெண்மையாக்க சில வழிகள்

நாம் பொதுவாக எந்த இடம் கருமையாக இருந்தாலும் அதனை எப்படி போக்கலாம் என நினைத்துக் கொண்டே இருப்போம். குறிப்பாக கை முட்டு, கால், முகம், கழுத்து போன்ற இடங்களில் ஏற்படும் கறுப்பை நீக்க கண்ட கண்ட க்ரீம் எல்லாம் தேய்த்து பார்ப்போம். மேலும் இயற்கையான முறைகளில் கருமையை நீக்கி வெண்மையாக்க வழி பாப்போம். இப்படி பல வழிமுறைகளை கையாளும் நாம் கழுத்து மற்றும் அந்தரங்க பகுதியான தொடை இடுக்கு பகுதியில் இருக்கும் கருமையை நீக்கி அவ்விடத்தை எப்படி வெண்மையாக மாற்றலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிலருக்கு இப்பகுதிகள் மிகவும் கறுத்து போய் காணப்படும். இதற்கு காரணம் இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, ஒரு வகையான சரும நோய்கள், தொடை பகுதி தோல் உரசிக் கொண்டிருப்பது, இறந்த செல்களின் தேக்கம் மற்றும் அதிக படியான வியர்வை போன்றவை இதற்கு காரணங்களாகும்.

தக்காளி:
தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்சிடென்ட், சூரியனால் சருமம் பாதிக்க படுவதை தடுக்கும். இது சரும கருமையை போக்கும் சக்தி கொண்டது. ஒரு துண்டு தக்காளியை எடுத்து கருமையான இடத்தில் தேய்த்து 25 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். 25 நிமிடங்கள் கழித்த பிறகு கழுவி விட வேண்டும். இப்படி தினமும் தேய்க்க வேண்டும். இப்பொழுது கருமை நிறம் மறைய தொடங்கும்.

பப்பாளி:
நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து, கருமையாக உள்ள அந்தரங்க பகுதிகளில் தடவி 25 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால் கருமை அகலும், தோல் பழபழப்பாகும்.

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் விட்டமின் ஏ உள்ளது. இது சருமத்தில் மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தி, சரும கருமையைக் குறைக்கும். மேலும் வெள்ளரிக்காயில் உள்ள நீர்சத்து சரும வறட்சியை தடுத்து, சரும பொலிவை மேம்படுத்தும். வெள்ளரிக்காயில் ‘ப்ளீச்சிங்’ பண்புகள் உள்ளது. இதனால் இது சரும பொலிவை தரும். வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து, அந்த சாறுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது மஞ்சள் தூள் கலந்து, கழுத்து மற்றும் அந்தரங்க பகுதியான தொடை இடுக்கு பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கருமை மாறி நல்ல பலன் கிடைக்கும்.

சந்தனம்:
2 ஸ்பூன் சந்தன பவுடருடன், 1/2 எலுமிச்சை சாற்றினை கலந்து, அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக குழைத்து ஒரு களிம்பாக மாற்ற வேண்டும். இந்த களிம்பை இரவில் படுக்கும் முன், கருமையாக உள்ள இடங்களில் தடவி விட வேண்டும். இதனை மறுநாள் காலையில் கழுவினால் போதும். இதை தினமும் செய்து வந்தால் கருமை நீங்கும்.

கற்றாழை:
கற்றாழை ஜெல்லை எடுத்து 2 முறை நன்றாக கழுவி விட்டு அதனை அப்படியே நேரடியாக கருமையாக இருக்கும் இடத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தவறாது செய்ய வேண்டும். ஏனெனில் கற்றாழை சரும கருமையைப் போக்கும் ஒரு அற்புத பொருளாகும். மட்டுமல்லாது கற்றாழை பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்கும் தன்மை கொண்டதாகும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமையான இடம் வெண்மையாகி நல்ல பொலிவை தரும்.

எலுமிச்சை:
எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. இது ப்ளீச்சிங் பண்புகள் கொண்டதாகும். எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை மேம்படுத்தி, புதிய செல்களின் உருவாக்கத்தையும் தூண்டும். எனவே எலுமிச்சை சாறை கருமையான கழுத்து மற்றும் அந்தரங்க பகுதியான தொடை இடுக்குகளில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படியே செய்து வந்தால் கருமையான நிறம் நீங்கி அவ்விடம் வெண்மையாகும்.

நீங்களும் இந்த முறைகளை பயன்படுத்தி தோலின் கருமையான நிறத்தை வெண்மையாக்கி கொள்ளுங்கள்.

Related posts

Leave a Comment