இந்த ஆண்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை நம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பையொட்டி, பலரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் மூவண்ணக்கொடியுடன் படங்களை வைக்கத் தொடங்கிவிட்டனர்.
“ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி” என்ற பெயரில் இதற்கான பிரத்யேக பிரசாரத்தை இந்திய கலாசாரத்துறை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், வீட்டில் கொடியேற்றூவதாக இருந்தால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்திய தேசியக்கொடி சட்டம், 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றின் கீழ் கொடி எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகள் மற்றும் கொடியேற்று வழிமுறைகள் வழங்கப்படுகின்றன.
தேசியக்கொடி சட்டம் 2002, பிரிவு 2.1 இன் படி, எந்த ஒரு இடத்திலும் பொதுமக்கள் மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றுவதற்கு தடை இல்லை.
அதே சமயம், தேசியக்கொடிக்கு அவமதிப்பு நடத்தப்பட்டால் மூன்றாண்டு சிறையுடன் அபராதமும் விதிக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பங்குபெறுவதற்காக, தேசியக் கொடியேற்றுவது தொடர்பான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, காதி துணி மட்டுமன்றி பாலிஸ்டர் துணி கொடிகளும் பயன்படுத்தப்படலாம். அத்துடன், மாலையில் கொடியை இறக்க வேண்டிய கட்டாயமில்லை. இரவிலும் தேசியக்கொடி பறக்கலாம்.
இப்படியாக, கொடியேற்றுவது தொடர்பான விதிகள் முன்பு இருந்ததை விட தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், நீங்கள் கொடியேற்றும் போது இந்த அம்சங்களை கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.
தேசியக்கொடியை தலைகீழான நிலையில் ஏற்றக்கூடாது., அதாவது காவி நிறம் அடிப்பகுதியில் இருக்கக் கூடாது.
கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடியை காட்சிப்படுத்தப்படக் கூடாது.
தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது.
தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாள சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.
தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது.
தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது.
தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது.
தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது.
மேசை மீது விரிப்பாகவோ, உரையாளரின் மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.
அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக் கொடியை பயன்படுத்தப்படக் கூடாது.