November 27, 2022
டிப்ஸ்

செடிகளின் இலை பழுத்து மஞ்சள் நிறத்தில் மாறுதா.. இதை மட்டும் பண்ணுங்க!

சிலருக்கு வீட்டில் செடிகள், காய்கறிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். அப்படி வளர்க்கும் போது சில செடிகளின் இலைகள் பழுத்து செடி அழிந்து விடும். ஏன் இதன் இலைகள் பழுத்து மஞ்சள் நிறத்தில் மாறுகிறது என்றும், இதனை செலவில்லாமல் எப்படி சரி செய்வது என்றும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சத்துக் குறைபாட்டால் செடி வகைகள் செழித்து வளர முடியாமல் செடிகளில் இலைகள் மற்றும் பூக்கள் பச்சையாக இல்லாமல் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. இரும்பு மற்றும் கால்சியம் சத்து குறைபாடு தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதற்கு இந்த 2 பொருட்களையும் பயன்படுத்தி எளிமையாக சரி செய்து விடலாம்.

பூச்செடி அல்லது காய்கறி செடியின் இலைகளும், பூக்களும் நிறம் குறைவாக வெழுத்துப் போய் இருந்தால் அதை மாற்ற நாம் வீடுகளில் தூக்கி வீசும் இரண்டு பொருள்களே போதுமானது. அதாவது முட்டை ஓடு மற்றும் எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சு தோல் போதுமானது.

ஆரஞ்சு தோல் அல்லது எலுமிச்சை தோலில் இருக்கும் சத்துக்கள் பூக்களுக்கு அடர்த்தியான நிறத்தைக் கொடுக்கும். இவைகளைத் தனியே பயன்படுத்தாமல் முட்டை ஓடு சேர்த்து பயன்படுத்தினால் செடிகள் செழிப்பாக வளரும். முட்டை ஓட்டில் இருக்கும் கால்சியம் சத்துக்கள் செடிகளுக்கு நல்ல உரமாக பயன்படுகிறது.

இதற்கு முதலாவது முட்டை ஓடுகளை வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளுங்கள். பின்பு காய்ந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோல் மற்றும் முட்டை ஓட்டினை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மேலும் உருளைக்கிழங்கு தோல்கள் இருந்தாலும் அவற்றையும் காய வைத்து இதனுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

பொடித்தபின் இந்த கலவையை மீண்டும் வெயிலில் நன்கு உலர வைத்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை ஒருதேக்கரண்டி வீதம் செடிகளுக்கு உரமாக போட்டால் போதும். இலைகளும் பூக்களும் மஞ்சள் நிறமாக மாறுவது தடுக்கப்பட்டு சாதாரண செடியை போல வளரும்.

இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் செடிகள் சீக்கிரமாகவே பட்டுப் போய்விடும். சத்துக் குறைபாட்டால் பூக்களும் அதிகம் பூக்காமல் போய்விட வாய்ப்புகள் உண்டு. ஆகவே வாரம் ஒரு முறை வேர்ப் பகுதியில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் மட்டும் தூவி லேசாக மண்ணைப் போட்டு மூடி வைத்தால் போதும். சில நாட்களில் வேதிவினை நிகழ்ந்து உரமாக மாறி தேவையான அளவு ஊட்டசத்து கிடைத்து நல்ல பலனை அடையலாம் .

குறிப்பு : அவித்த முட்டை தோட்டினை இதற்கு பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் வேக வைக்கும் போதே இதன் சத்துகள் போய் விடுவதால் தவிர்ப்பது நல்லது.

Related posts

Leave a Comment