செப்டம்பர் இரண்டம் தேதி அதாவது இன்று இருபத்திநான்காவது உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
தென்னை சாகுபடி செய்யும் நாடுகளில், தென்னை மரத்தின் பலன்கள், அதன் மூலம் விவசாயிகள் அடையக்கூடிய லாபம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் உலக தேங்காய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தாயைப் போல தாராள குணம் கொண்டது தென்னை. அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு தேவைப்படுகிறது.
ஆசியா முழுவதும் தென்னை பரவலாக இருந்தாலும், இலங்கை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிகம் சாகுபடியாகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு இணையான ஊட்டச்சத்து தேங்காயில் உள்ளது. ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரக்கூடியது. அறுபது ஆண்டுகள் வாழும்.
தேங்காய் விளைச்சலில் உலகில் பிலிப்பைன்ஸ்க்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் தொண்ணூறு சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திராவில் உள்ளது. தென்னை மரத்தின் அனைத்து பாகமும் பயன்படுகிறது.
லட்சக் கணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும் தேங்காய் உள்ளது. இது உணவு, எண்ணெய், மருத்துவம், அழகு சாதனப் பொருள் என பலவிதங்களில் பயனளிக்கிறது.
இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் நாற்பது சதவீதம் பொள்ளாச்சியில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காயில் இருந்து மட்டும் எண்ணெய், மருத்துவம், உணவு, சோப், அழகு சாதனப் பொருள் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்:
தேங்காயில் உள்ள மாங்கனீசு எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், இது கார்போஹைட்ரேட், புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்திற்கும் அவசியம்.
நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குறிப்பாக, மலச்சிக்ககல், வயிறு உப்புசம், வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்தும்.
தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அதிகமாகவும் உள்ளது. எனவே இது உங்கள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.
ஆண்மை குறைபாட்டினை நீக்கும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். மேலும், உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் மேலும் கூட்டும்.
தேங்காயில் இருக்கும் அதிக நார்ச்சத்து, செரிமானத்தை மெதுவாக்கவும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவையும் சீராக்கவும் உதவும்.
தேங்காயில் இருக்கும் இளநீர், சிறுநீர் தொற்று ஏற்படுவதின் அபாயத்தை குறைக்கிறது. சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும்.