June 10, 2023
டாப் 15

அழிந்து போன மாயன் இனத்தின் டாப் 15 மர்மங்கள் நிறைந்த பிரமிடு கோவில்கள்

பண்டைய காலத்தில் மிக அதிக அளவில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது மாயன் நாகரீகம். மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் இப்படி பல துறைகளில் மேம்பட்டு இருந்தனர். அதிலும் மிக முக்கியமாக கட்டிடக்கலையில் இவர்கள் சிறந்து விளங்கினார்கள். ஏராளமான நுணுக்கமான கட்டிடக்கலை நுட்பங்களை வடிவமைத்தவர்கள் இவர்கள். இவர்கள் வடிவமைத்த ஏராளமான கட்டிடக்கலைகள் தற்பொழுது பல இடங்களில் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு மீட்கப்பட்டு வருகிறது.

கண்களை கொள்ளைகொள்ளும் கண்கவர் மாயன் நாகரீகம் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க பிராந்தியங்களில், தெற்கு மெக்சிகோ, எல் சால்வடோர், குவாத்தமாலா, வெஸ்டன் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில் தோன்றியது. மாயன் கலாச்சாரம் மிகவும் புகழ் பெற்றது. பல நூற்றாண்டுகளாக இதை விரிவாக ஆய்வு செய்து வருகிறார்கள். கிபி 250 லிருந்து 900 ஆண்டுகளில் கட்டப்பட்ட பண்டைய மாயன் கோவில்கள் இன்றைக்கும் பார்வையிடுவதற்கு மிகவும் பிரபலமான இடங்களாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான 15 மாயன் கோவில்களை பற்றி பார்ப்போம்.

1. கோபா (Coba)

மெக்சிகோவில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய மாயன் நகரம் இது. கோபாவில் சுமார் 50,000 மக்கள் வசித்து வந்துள்ளனர். இங்கே நினைவுச்சின்னங்கள் கிபி 600 முதல் 900 வரை கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு மிகப்பெரிய நோஹோச் முல் என்ற 140 அடி உயரத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரமிடும் உள்ளது. இந்த பிரமாண்டமான பிரமிடு தற்பொழுதும் காடுகளுக்கு மத்தியில் காணப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அதனுடைய சிறிய பகுதியை மட்டுமே மீட்டு எடுக்க முடிந்தது. இது சுமார் 80 மைல்களை கொண்டது. மேலும் ஐந்து பெரிய ஏரிகளும் இங்கு உள்ளது. வித்தியாசமான சுற்றுலா இடங்களை பார்வை இடுப்பவர்கள் தொடர்ந்து இந்த வந்து கொண்டிருக்கிறார்கள்.

2. ஏக் பலம் (Ek Balam)

எக் பலம் அல்லது பிளாக் ஜாகுவார் என சொல்லக்கூடிய இந்த மாயன் பிரமிட் கிங் யுகிட் கான் லெக் டோக்கின் கல்லறையை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. வல்லாடோலிட் அருகே யுகடன் தீபகற்பத்தில் இடிபாடுகளோடு கூடிய சுவர்களால் சூழப்பட்ட 45 கட்டமைப்புகள் இந்த நகரத்தில் உள்ளது. இடிபாடுகளுடன் காணப்படக்கூடிய இந்த இடத்தை நீங்கள் முழுவதுமாகச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் ஆகுமாம். மேலும் அழகிய கலை படைப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்குமாம். நீல நிறத்தில் மிகவும் அழகாக இருக்கக்கூடிய தண்ணீரை கொண்ட எக்ஸ்கேன்சி சிங்க்ஹோல் மிகவும் அழகாக குளிப்பதற்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரக்கூடியது.

3. டெம்ப்ளோ மயோர் (Templo Mayor)

மெக்சிகோ நகரில் அமைந்திருக்கக் கூடிய டெம்ப்ளோ மயோர் அல்லது தி கிரேட்டர் டெம்பிள் ஒருகாலத்தில் மாயன்கள் பயன்படுத்திய முக்கிய இடமாக இருந்துள்ளது. வரலாற்றுரீதியாக இந்த இடம் போர், மழை மற்றும் விவசாய கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மெக்ஸிகோ நகரின் வரலாற்று மையத்தின் ஒரு பகுதியான இது 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

4. துலூம் (Tulum)

மெக்சிகோவில் யுகடன் தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள துலூம் ஒரு காலத்தில் மாயன் நகரமான கோபாவிற்கு ஒரு முக்கிய துறைமுகமாக செயல்பட்டு வந்துள்ளது. 15 லிருந்து 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்துள்ளது. மாயன் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் கிபி 1200 கட்டப்பட்டதால் மாயன்களின் நேர்த்தியான கட்டிடக்கலை பெரிய அளவில் காணப்படவில்லை என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அழகான கடற்கரைக்கு அருகில் காணப்படுவதால் இது பார்ப்பதற்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.

5. உக்ஸ்மல் (Uxmal)

மிச்சிகன் நகரமான மெரிடாவுக்கு அருகிலுள்ள யுகடன் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது உக்ஸ்மல். இது தொடர்ந்து மூன்று முறை கட்டப்பட்டதாம். இது ஒரு காலத்தில் மாயன்களின் மிகப்பெரிய நகரமாக இருந்துள்ளது. மாயன்களின் சக்திவாய்ந்த பூசாரிகள் இங்கு மிக பயங்கரமான சடங்குகளை பெரிய அளவில் நடத்துவார்களாம். இங்கு ஜோதிடத்தையும் மாயன்கள் கற்றுக்கொடுத்துள்ளனர். அவர்கள் தங்களுடைய அறிவை பயன்படுத்தி சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் சுழற்சிகளை கண்காணித்துள்ளனர்.

6. தியோதிஹுகான் (Teotihuacan)

மெக்சிகோ நகரத்திற்கு வெளியே காணப்படும் தியோதிஹுகான் சுமார் 8 சதுர மைல்களை உள்ளடக்கியது. கிமு 100 ம் ஆண்டில் இந்த நகரம் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. கிபி 250 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கட்டுமானம் நடைபெற்றுள்ளதாம். இது 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இங்கு காணப்படக்கூடிய மிக முக்கியமான இந்தப் பிரமிடு பிரமிட் ஆப் தி மூன் என அழைக்கப்படுகிறது.

7. லாமானை (Lamanai)

லாமானை வடக்கு பெலிஸில் அமைந்துள்ள ஒரு பெரிய மாயன் நகரம். மாயன் கலாச்சாரத்தில் லாமானை என்றால் நீரில் மூழ்கிய முதலை என அர்த்தம். 1970ஆம் ஆண்டு வரை இந்த இடத்தின் பெரும்பாலான பகுதி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகுதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகப் பெரிய கோவில், ஜாகுவார் டெம்பிள், மாஸ்க் டெம்பிள் போன்ற கட்டமைப்புகளை மீட்டெடுக்க தொடங்கினார்கள். 108 அடி உயரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய உயர்ந்த கோயிலின் மேலே இருந்து நீங்கள் காட்டில் இருக்கக்கூடிய எல்லா காட்சிகளையும் ரசிக்க முடியும்.

8. கராகோல் (Caracol)

பெலிஸில் காணப்படக்கூடிய மிகப்பெரிய பண்டைய மாயன் இடமான கராகோல், வக்கா பீடபூமியில் கடல்மட்டத்திலிருந்து 1650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது 65 சதுர மைல்களுக்கு மேல் பரவி காணப்படுகிறது. கிபி 330 இல் கட்டப்பட்ட இது கிபி 600 லிருந்து 800 வரை மாயன் பேரரசின் மிக முக்கியமான அரசியல் மையங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

9. கோபன் (Copan)

கோபன் மேற்கு ஹோண்டுராஸில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய மாயன் நகரம். கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. ஏராளமான கலை நுட்பங்கள் மிகுந்த வண்ணமயமான கற்களில் செதுக்கப்பட்ட ஓவியங்கள் இங்கு உள்ளது. இதை அனைத்தையும் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு நாள் போதாது அந்த அளவுக்கு மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் கலைநயமிக்க சிற்பங்கள் காணப்படுகிறது.

10. சச்சோபன் (Chacchoben)

இந்த நகரம் மாயன்களுடைய முக்கியமான விழாக்கள் நடைபெறக்கூடிய இடமாக இருந்துள்ளது. கிபி 360 இல் இங்கு மிகப்பெரிய மாயன் சமூகத்தினர் வசித்துள்ளனர். இங்குள்ள கிரான் பாசமெண்டோ மாயன்களின் மிக முக்கியமான சடங்கு நடைபெறும் மண்டபம். இது அடர்ந்த காட்டுக்குள் காணப்படுகிறது. அதிக இடங்கள் இடிபாடுகளில் சிக்கி காணப்படுவதால் இங்குள்ள ஒரு சில பகுதிகள் மட்டுமே பார்வையாளர்களுக்கு காணமுடியும்.

11. மான்டே அல்பன் (Monte Alban)

தெற்கு மெக்சிகன் மாநிலமான ஓக்ஸாக்காவில் உள்ள ஒரு பெரிய கொலம்பிய தொல்பொருள் தளம் மான்டே அல்பன். கிமு 500 நிறுவப்பட்ட இந்த நகரம் பல நூற்றாண்டுகளாக மாயன்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு முக்கிய நகரமாக இருந்துள்ளது. இங்கு வானியல் ஆய்வுக்கூடம், அரண்மனைகள், கல்லறைகள், கோயில்கள் என பல விஷயங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1940 மீட்டர் உயரத்தில் உள்ளது.

12. கலக்முல் (Calakmul)

கலக்முல் மெக்ஸிகன் மாநிலமான காம்பேச்சில் உள்ள ஒரு மாயன் தொல்பொருள் தளம். இது பெட்டான் பேசின் காடுகளுக்குள் உள்ளது. இங்குள்ள மாயன் இடிபாடுகள் கலக்முல் பயோஸ்பியர் ரிசர்வ் மையத்தில் அமைந்துள்ளது. இடிபாடுகளுடன் கூடிய இரண்டு பிரம்மாண்டமான பிரமிடுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இங்கு காணப்படுகிறது. இங்குள்ள மாயன் பிரமிட் 148 அடி உயரம் கொண்டது.

13. பலேன்க் (Palenque)

மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பலேன்க் தற்பொழுது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக உள்ளது. வனவிலங்குகள் அதிகம் உள்ள அடர்த்தியான காட்டுக்குள் இது அமைந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் கிபி 600 லிருந்து 800 வரை கட்டப்பட்டுள்ளது.

14. டிக்கல் (Tikal)

வடக்கு குவாத்தமாலாவில் உள்ள பெட்டான் பேசினின் தொல்பொருள் பகுதியில் அமைந்துள்ளது பண்டைய மாயன் நாகரிகத்தின் கட்டிட இடிபாடுகளை கொண்ட டிக்கல். இங்கு இரண்டு மிகப்பெரிய கோயில் பிரமிடுகள் காணப்படுகிறது. மாயன்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இந்த பகுதியில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆறு பெரிய கோவில்கள் காணப்படுகிறது. இதில் 240 அடி உயரம் உள்ள மிகப்பெரிய கோவிலில் ஏறினால் சுற்றி இருக்கும் மொத்த காட்சிகளையும் நீங்கள் பார்க்கலாம்.

15. சிச்சென் இட்ஸா (Chichen Itza)

சிச்சென் இட்ஸா மெக்சிகோவின் மிகப்பெரிய மிகவும் பிரபலமான மாயன் நகரம். உலகிலேயே அதிகம் சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்ட மாயன் தலம் இதுமட்டுமே. அதனால் இதை உலகின் புதிய அதிசயம் எனவும் சொல்கிறார்கள். இங்கு உள்ள குக்குல்கன் பிரமிட் 75 அடி உயரத்தில் வானியல் மற்றும் தியாக நோக்கங்களுக்காக நினைவுச் சின்னமாக கட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரமிடின் ஒவ்வொரு பக்கத்திலும் 91 படிகள் உள்ளன.

Related posts

Leave a Comment